
பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேசத்தில் சுகு தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விக்ரமாதித்ய சிங் திடீரென ராஜினாமா செய்துள்ளார். விக்ரமாதித்ய சிங், ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன் ஆவார்.
மாநிலங்களவைத் தேர்தலில், ‘அரசியல் தந்திரம்’ காரணமாக, பாஜக மீண்டும் அதிக இடங்களைப் பிடித்திருக்கும் சூழலில் காங்கிரசுக்கு இந்த சிக்கல் எழுந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில், காங்கிரஸூக்கு மிகவும் அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்துள்ளன. அங்கு அவர்களுக்குத் தேவையான எண்ணிக்கை பலம் இருந்தபோதிலும், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியடைந்தார். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஒருவரும் பதவி விலகியுள்ளார்.
இந்த தோல்வியின் மூலம் வரும் நாட்களில், ஹிமாச்சல் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆனால், காங்கிரஸின் வெற்றி உறுதியாகக் கருதப்பட்ட இமாச்சலப் பிரதேசத்தில், பாஜக எப்படி வெற்றி பெற்றது? 15 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில், 10 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது எப்படி?
இமாச்சல பிரதேசத்தில் கணக்குகள் மாறியது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு மொத்தம் உள்ள 68 எம்எல்ஏக்களில், காங்கிரசுக்கு 40 எம்எல்ஏக்கள் உள்ளனர். பாஜகவுக்கு 25 எம்எல்ஏக்கள் உள்ளனர். மூன்று எம்.எல்.ஏ.க்கள் எந்தக் கட்சியையும் சேராத சுயேச்சை உறுப்பினர்கள்.
காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வியும், பாஜக சார்பில் ஹர்ஷ் மகாஜனும் போட்டியிட்டனர். ஹர்ஷ் மகாஜன் காங்கிரஸில் இருந்து விலகி 2022 இல் பாஜகவில் இணைந்தார்.
செவ்வாய்கிழமை காலை, மாநிலங்களவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன், முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஊடகங்கள் முன் வந்து, “யாரும் விலை போகவில்லை. 40க்கு 40 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருக்கிறார்கள், நாங்கள் வெற்றி பெறுவோம்” என்றார்.
இமாச்சல பிரதேச அமைச்சர் விக்ரமாதித்ய சிங் மற்றும் மூத்த தலைவர் பிரதீபா சிங் ஆகியோரும் வாக்களிக்க வந்தபோது, எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களிப்பது குறித்த அச்சம் தெரிவித்தனர்.
இந்த மூன்று தலைவர்களின் அறிக்கைகளும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்ததாக தொலைக்காட்சி சேனல்களில் வரும் செய்திகளுக்கு வலு சேர்த்தது.

பட மூலாதாரம், ANI
ஹர்ஷ் மகாஜன் காங்கிரஸில் இருந்து விலகி 2022 இல் பாஜகவில் இணைந்தார்.
அந்த ஊகங்களும் சரி என்பதை தேர்தல் முடிவுகள் நிரூபித்துள்ளன.
இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மாநிலங்களவை இடத்திற்கான வாக்குப்பதிவு நடைபெற்றபோது, 40 காங்கிரஸ் எம்எல்ஏக்களில் 34 பேர் மட்டுமே சிங்விக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பாஜக வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் மொத்தம் 34 வாக்குகள் பெற்றார். அதாவது, 25 பாஜக எம்எல்ஏக்கள் தவிர, மூன்று சுயேச்சை எம்எல்ஏக்கள் மற்றும் 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்தனர்.
மாநில சட்டமன்றத்தில், 25 எம்எல்ஏக்களைக் கொண்ட பாஜக, இமாச்சலத்தில் 34 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் இருவரும் 34-34 வாக்குகள் பெற்றிருந்தனர். அத்தகைய சூழ்நிலையில், குலுக்கல் முறையில் முடிவு தீர்மானிக்கப்பட்டது.
இமாச்சலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள் குறித்து சிங்வி கூறுகையில்,“அவர்கள் இரவு வரை எங்களுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர், காலையில் இரண்டு பேர் சேர்ந்து காலை உணவையும் சாப்பிட்டனர்.” என்றார்.
செவ்வாயன்று பகலில், சிஆர்பிஎஃப் மற்றும் ஹரியானா காவல்துறை ஆறு காங்கிரஸ் எம்எல்ஏக்களை அழைத்துச் சென்றதாக சுகு கூறியிருந்தார்.
இமாச்சலில் கட்சி மாறி வாக்களித்த எம்எல்ஏக்கள்

பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு
காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் கடத்தப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளது. இதுபோன்ற குற்றச்சாட்டுகளை பாஜக நிராகரித்துள்ளதுடன், அவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் அரசுக்கு எதிராகப் போயுள்ளதாகக் கூறினார்.
மாநிலங்களவைக்கான வாக்கெடுப்புக்குப் பிறகு பேசிய முதல்வர் சுகு, “ஒருவர் தனது நம்பிக்கையை விற்றுவிட்டால் என்ன சொல்வது” என்றார். காங்கிரஸ் சின்னத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் பாஜகவை தோற்கடித்துவிட்டு வந்துள்ளனர்.
இமாச்சலப் பிரதேசத்தின் இந்த ஒரு மாநிலங்களவைப் பதவிக்காக பாஜக எவ்வளவு சுறுசுறுப்பாக பணியாற்றியது என்பதை காங்கிரஸ் எம்எல்ஏ சுதர்சன் பப்லுவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்ததில் இருந்து புரிந்து கொள்ளலாம். அவர் முதல்வரின் ஹெலிகாப்டரில் வாக்களிக்க வந்திருந்தார்.
பாப்லுவின் வாக்கிற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது மற்றும் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.
தோல்விக்குப் பிறகு காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி பேசுகையில், “பாஜகவிடம் ஒரு விஷயத்தைக் கேட்க விரும்புகிறேன், அது தனக்குள்ளேயே பார்க்க வேண்டும், 25 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி 43 இடங்களில் கட்சிக்கு எதிராக வேட்பாளரை நிறுத்தும்போது, அதற்கு ஒரு செய்தி இருக்க வேண்டும் என்று கருத வேண்டும். சட்டம் அனுமதிக்காததை நாங்கள் வெட்கமின்றி செய்வோம் என்பது தான் அவர்களின் செயல்பாட்டிற்கான அர்த்தம்,” என்றார்.
இமாச்சல் அரசுக்கு நெருக்கடி

பட மூலாதாரம், ANI
இமாச்சல பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு மற்றும் அபிஷேக் மனு சிங்வி (வலது)
மாநிலங்களவைத் தோல்விக்கு பின், காங்கிரஸ் அரசு சிக்கலில் உள்ளது. பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவர் ஜெய்ராம் தாக்கூர் புதன்கிழமை காலை ராஜ்பவனில் ஆளுநர் ஷிவ் பிரதாப் சுக்லாவைச் சந்தித்தார்.
இமாச்சலில் காங்கிரஸ் அரசு பிப்ரவரி 29ஆம் தேதி பட்ஜெட்டை நிறைவேற்ற உள்ளது. இந்த நாள் அமர்வின் கடைசி நாளாகவும் உள்ளது.
காங்கிரசுக்கு எண்ணிக்கை பலம் இல்லாததால், அடுத்த 2 நாட்களில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் என்று ஜெய்ராம் தாக்கூர் கூறினார்.
இதுகுறித்து இமாச்சல் முதல்வர் சுகுவிடம் கேட்டபோது, சட்டசபை கூட்டத்தொடரில் பார்ப்போம் என்றார்.
சிங்வியின் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் மூத்த தலைவர்களான பூபிந்தர் சிங் ஹூடா மற்றும் டி.கே. ஷிவ்குமாரை இமாச்சலப் பிரதேசத்திற்கு பார்வையாளர்களாக அனுப்பியுள்ளது.
சுக்விந்தர் சிங் சுகுவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் விரும்புவதாகவும், இதுபோன்ற சூழ்நிலையில் காங்கிரஸ் மேலிடம் அனுப்பிய தலைவர்கள் எம்எல்ஏக்களிடம் பேசி அவர்களின் கருத்தை கேட்பார்கள் என்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கட்சி மாறி வாக்களித்த எம்.எல்.ஏ.க்கள் இமாச்சலத்திலிருந்து வெளி வேட்பாளரை நிறுத்தியதில் அதிருப்தி அடைந்ததாகவும், சுகுவின் அரசியல் பாணியை விரும்பவில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
மாநிலங்களவைப் பதவிக்கு கட்சியின் மூத்த தலைவர் ஆனந்த் சர்மாவின் பெயரை சுகு முன்வைத்திருந்தார், ஆனால் காங்கிரஸ் மேலிடம் சிங்வியை முன்வைத்தது.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், பிரதீபா சிங் அல்லது அவரது மகன் விக்ரமாதித்ய சிங்குக்கு பெரிய பொறுப்பு வழங்கப்படலாம் என்று கூறப்பட்டது.
குறுக்கு வாக்குக்கு எதிராக காங்கிரஸ் நடவடிக்கை எடுத்தால் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 68ல் இருந்து 62 ஆக குறையும். இதன் மூலம் பெரும்பான்மை எண்ணிக்கை 32 ஆகவும் மாறும்.
எஞ்சியிருக்கும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அணி மாறாமல், கட்சி மாறி வாக்களித்தவர்களும் கட்சியிலேயே நீடித்தால், ஆட்சியைக் காப்பாற்றுவது காங்கிரசுக்கு எளிதாக இருக்கும்.
இமாச்சலில் 68 இடங்கள் உள்ளன. எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்எல்ஏக்கள் தேவை. ராஜ்யசபா வாக்குப்பதிவை பார்த்தால், தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு தலா 34-34 எம்எல்ஏக்கள் உள்ளனர்.
ஒரு அமைச்சர் ராஜினாமா – காங்கிரஸ் அரசுக்கு சிக்கல்
இமாச்சல பிரதேசத்தில் சுகு தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விக்ரமாதித்ய சிங் ராஜினாமா செய்தார். விக்ரமாதித்ய சிங், ஹிமாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகன்.
விக்ரமாதித்ய சிங்கின் தாயார் பிரதிபா சிங் இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவராக உள்ளார். பிரதீபா சிங்கே முதலமைச்சராக விரும்பியதாகவும் ஆனால் 2022 சட்டமன்றத் தேர்தலில் சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் மேலிடம் முதல்வராக்கியதாகவும் கூறப்படுகிறது.
சுகு அரசில் விக்ரமாதித்ய சிங் பொதுப்பணித்துறை மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். இவரது தாயார் பிரதீபா சிங் இமாச்சலப் பிரதேச மாநிலம் மண்டியில் இருந்து மக்களவைக்கு தேர்வானார்.
புதன்கிழமை, விக்ரமாதித்ய சிங் ஊடகங்களிடம் பேசிய போது, “இமாச்சல் மக்கள் காங்கிரசுக்கு பெரும்பான்மை அளித்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி அமைந்த சூழ்நிலையைப் பற்றி நான் ஒன்றைக் கூற விரும்புகிறேன். 2022ல் இமாச்சலப் பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, கூட்டு தலைமையின் கீழ் தேர்தல் நடந்தது. முழு பிரசாரத்திலும் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் பெயர் பயன்படுத்தப்பட்டது.
“வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு, கட்சியினரால் நாளிதழ்களில் வீரபத்ர சிங்கின் படத்துடன் விளம்பரம் கொடுக்கப்பட்டு, அவரை நினைவுகூரும்படி கூறப்பட்டது. எங்களுக்கு ஆதரவளித்தவர்களுக்கு நான் பொறுப்பு. எனக்கு பதவியை விட இந்த நம்பிக்கைதான் முக்கியம். ஆனால் கடந்த ஓராண்டாக எம்எல்ஏக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களின் குரலை நசுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சி மேலிடத்திடம் தொடர்ந்து புகார் அளித்தும், அது பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. அதன் பலனாகத்தான் நாம் இங்கு வந்துள்ளோம்.” என்று கூறினார்.
வட இந்தியாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் இமாச்சலப் பிரதேசம் தான். ஆனால் இங்கும் காங்கிரஸ் ஆட்சிக்கு சிக்கல் முளைத்துள்ளது-
உத்தரபிரதேசத்தின் நிலை என்ன?

பட மூலாதாரம், FB/AkileshYadhav
ராஜ்யசபா தேர்தலில் வாக்களித்த பிறகு, அகிலேஷ் யாதவ், ஜெயா பச்சனுடன் இருக்கும் இந்த படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.
உத்தரபிரதேசத்தில் 10 மாநிலங்களவை உறுப்பினர் இடங்களுக்கு தேர்தல் நடந்தது. இதில் 7 இடங்களில் பாஜகவும், 3 தொகுதிகளில் சமாஜ்வாதியும் வெற்றி பெறுவது உறுதி என்று கருதப்பட்டது.
ஆனால் செவ்வாய்க்கிழமை காலை வாக்குப்பதிவு தொடங்கியவுடன், சமாஜ்வாதி எம்எல்ஏக்கள் அணி மாறிய செய்திகள் வரத் தொடங்கின.
வாக்குப்பதிவு முடிவுகள் வெளிவருவதற்கு முன்பே, ஊடகங்கள் முன் வந்த அகிலேஷ் யாதவ், “உ.பி.யை பொருத்தவரையில், மாநிலங்களவைத் தேர்தலில் ஓட்டுக்களை பெற பா.ஜ., அனைத்தையும் செய்தது. அந்த மக்களுக்கு அரசாங்கத்திற்கு எதிராக நிற்கும் தைரியம் இல்லாமல் இருந்திருக்கலாம். சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். அரசாங்கத்தை எதிர்த்து நிற்கும் தைரியம் வெகு சிலருக்கே உள்ளது,” என்றார்.
அகிலேஷின் அறிக்கையும், கட்சி மாறி வாக்குப்பதிவு தொடர்பாக ஊடகங்களில் தொடர்ந்து வந்த செய்திகளும் சரி என மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் மமுடிவுகள் வந்தபோது நிரூபணமானது.
மூன்றாவது இருக்கையின் பின்னடைவு குறித்து சமூக வலைதளத்தில் அகிலேஷ் யாதவ் ஒரு பதிவை எழுதினார், “எங்கள் மூன்றாவது மாநிலங்களவை உறுப்பினர் இருக்கை உண்மையில், உண்மையான நண்பர்களை அடையாளம் காணவும், யார், யார் மனசாட்சியுடன் இருக்கிறார்கள் என்பதை அறியவுமான ஒரு சோதனை. பிற்படுத்தப்பட்ட மக்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக இருப்பவர்கள் யார் என்பது, இப்போது தெளிவாகிவிட்டது. இதுவே மூன்றாவது இடத்திற்கான வெற்றி,” என்றார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி அறிக்கையின்படி, குறைந்தது ஏழு எஸ்பி எம்எல்ஏக்கள் குறுக்கு வாக்களித்ததன் மூலம் பாஜகவுக்கு ஆதாயம் அளித்துள்ளனர்.
சமாஜ்வாதி கட்சியின் தலைமை கொறடாவான மனோஜ் பாண்டே செவ்வாய்கிழமை காலை தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கர்நாடகாவில் என்ன நடந்தது?
உ.பி., மற்றும் இமாச்சல பிரதேசத்தில், எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறி வாக்களித்தது, பா.ஜ.,வுக்கு சாதகமாக இருந்தது. அதேசமயம் கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஒருவர் காங்கிரசுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளார்.
கர்நாடகாவில் நான்கு இடங்களுக்கு தேர்தல் நடந்தது. பாஜக ஒரு இடத்திலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன.
பாஜக வேட்பாளர் நாராயண் கிருஷ்ணாசா பாண்டே 47 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். ஆனால், நாராயணுக்கு பாஜக 48 வாக்குகளை ஒதுக்கியது.
பாஜக வேட்பாளருக்குப் பதிலாக, எஸ்.டி.சோமசேகர், காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களித்தார்.
கர்நாடகா, உத்தரப் பிரதேசம் அல்லது இமாச்சல், மக்களவைத் தேர்தலுக்கு முன் நடந்த மாநிலங்களவைத் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த மாநிலங்களின் தொகுதிகளில் எம்.பி.க்கள் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு அச்சுறுத்தல் இன்னும் நீடிக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்