பட மூலாதாரம், Getty Images
கடந்த 2003 ஆண்டு நடந்த ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தை கிரிக்கெட் ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை. 90ஸ் கிட்ஸ் உள்பட பலரையும் அழ வைத்த போட்டி அது.
ஆஸ்திரேலியா, இந்திய ரசிகர்களின் இதயங்களை சுக்குநூறாக்கியது. ரிக்கி பாண்டிங்கின் பேட்டில் ஸ்பிரிங் இருக்கிறது என்பன போன்ற பல கதைகள் உலா வந்தன. அந்தளவுக்கு இந்திய பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார் ரிக்கி பாண்டிங்.
அவர் சேர்த்த 140 ரன்கள் இந்திய ரசிகர்களுக்குத் தீராத வலியைத் தந்தது. கிரிக்கெட்டில் ஊறிப்போன இந்திய ரசிகர்கள் அன்று இரவு தூக்கத்தைத் தொலைத்திருப்பார்கள். காரணம், உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் பரிதாபமாகத் தோற்றது இந்தியா.
ஒருநாள் உலகக்கோப்பை இறுதிப்போட்டி வரலாற்றில் அதிக ரன்கள் வித்தியாசத்தில் வென்று வரலாறு படைத்தது ஆஸ்திரேலியா.
2003 இறுதிப்போட்டியில் அப்படி என்ன நடந்தது?
பட மூலாதாரம், Getty Images
மார்ச் 23, 2003 தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்னஸ்பர்க் மைதானத்தில் நடந்தது ஒருநாள் உலகக்கோப்பைக்கான இறுதி யுத்தம். 1987, 1999 என இரு முறை தொடர்ச்சியாக உலகக்கோப்பையை வென்று கிரிக்கெட் உலகின் உச்சத்தில் இருந்தது ஆஸ்திரேலியா.
மறுபுறம், இந்திய அணி 1983இல் கோப்பையை வென்று, சுமார் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு இறுதிப் போட்டிக்குள் காலடி எடுத்து வைத்திருந்தது. வீரர்கள் யாருக்குமே அவ்வளவு பெரிய களத்தில் ஆடிய அனுபவம் இருக்கவில்லை.
டாஸில் வென்றது என்னவோ இந்தியாதான். கேப்டனாக இருந்த செளரவ் கங்குலி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். இந்த முடிவு அப்போது பரவலாக விமர்சனத்திற்குள்ளானது.
கங்குலியின் முடிவை சாதகமாக்கிக்கொண்டது ஆஸ்திரேலியா. ஆடன் கில்கிறிஸ்டும் மேத்யூ ஹேய்டனும் ஓபனிங்காக களம் இறங்கினர். தொடக்கத்தில் இந்திய அணியின் பந்துவீச்சு துளியும் எடுபடவில்லை.
சதம் விளாசிய பாண்டிங்
பட மூலாதாரம், Getty Images
சஹீர் கான் வீசிய முதல் ஓவரிலேயே 15 ரன்களை சேர்த்தது ஆஸ்திரேலியா. 40 பந்துகளில் அரைசதம் விளாசினார் கில்கிறிஸ்ட். அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த கில்கிறிஸ்டை ஒரு வழியாக ஹர்பஜன் சிங்கின் சுழல் கட்டுப்படுத்தியது.
கில்கிறிஸ்ட் 57 ரன்களிலும் ஹெய்டன் 37 ரன்களிலும் விடைபெற்றனர். அடுத்து வந்த கேப்டன் ரிக்கி பாண்டிங் இந்திய பந்துவீச்சை நாலாபுறம் சிதறடித்தார். அவருக்குப் பக்கபலமாய் நின்றது டமின் மார்டின்.
இருவரும் சேர்ந்து மீதமிருந்த 30.1 ஓவர்களில் 234 ரன்கள் சேர்த்தனர். 121 பந்துகளில் 8 சிக்சர், 4 பவுண்டர் என இறுதி வரை ஆட்டமிழக்காமல் 140 ரன்களை சேர்த்திருந்தார் பாண்டிங்.
மார்டின் தன் பங்கிற்கு 84 பந்துகளில் 88 ரன்கள் குவித்தார். ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்களை மட்டுமே இழந்து 359 ரன்களை குவித்திருந்தது.
இந்திய அணியின் பந்துவீச்சு எப்படி இருந்தது?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அணியின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவிடம் துளியும் எடுபடவில்லை. குறிப்பாக ஜவகல் ஸ்ரீநாத் 10 ஓவர்கள் வீசி 87 ரன்களை விட்டுக் கொடுத்தார். சேவாக், சச்சின், யுவராஜ் சிங்கை பந்துவீச வைத்தார், கங்குலி. ஆனால் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை.
எக்ஸ்டிராஸ் மட்டுமே 37 ரன்களை இந்தியா வழங்கியிருந்தது. பாயிண்டிங்கின் ஆட்டம் ஆஸ்திரேலியாவை வலுவான நிலையில் வைத்திருந்தாலும் 40களில் அவர் இருந்தபோதே நூலிழையில் ஆட்டமிழக்காமல் தப்பித்திருந்தார்.
தினேஷ் மோங்கியா வீசிய பந்தில் பாண்டிங் எல்பிடபுள்யூ ஆகிவிட்டதாகவும் கள நடுவர் அவுட் தராததால்தான் ஆஸ்திரேலியாவால் ரன்களை குவிக்க முடிந்ததாகவும் அப்போது சர்ச்சைகள் எழுந்தன.
கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா
பட மூலாதாரம், Getty Images
இந்தியா உலகக்கோப்பையை வெல்ல 360 ரன்கள் எடுத்தாக வேண்டும். கடினமான இலக்குடன் களமிறங்கியது இந்தியா. முழு கவனமும் சச்சின் பக்கமே இருந்தது. காரணம், 2003 ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் சச்சின் பிரமாதமாக ஆடினார்.
அந்த தொடரிலேயே அதிக ரன்களை சேர்த்த வீரர்களின் பட்டியலில் சச்சின் முதலிடத்தில் இருந்தார். தொடர் நாயகன் விருதும் சச்சினுக்கே கிடைத்தது.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த சச்சின், சேவாகுடன் இணைந்து ஓபனிங் ஆடினார். மெக் கிராத் வீசிய முதல் 3 பந்துகள் டாட் பால். 4வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார் சச்சின். ஆரங்கம் ஆர்ப்பரித்தது. ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
அடுத்த பந்தே சச்சின் ஆட்டமிழந்தார். இந்தியாவின் சரிவு ஆரம்பமானது. ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர். அடுத்து வந்த கங்குலியாலும் பெரிதாக மாயம் செய்ய முடியவில்லை. அந்த தொடரில் கங்குலியும் சிறப்பான பங்களிப்பை செய்திருந்தார். தொடரில் அதிக ரன் சேர்த்த வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் இருந்தார் கங்குலி. 3 சதங்களையும் அவர் பதிவு செய்திருந்தார்.
கங்குலியைத் தொடர்ந்து வந்த கைஃபும் டக் அவுட்டாக ஆட்டம் முற்றிலுமாக ஆஸ்திரேலியா பக்கம் திரும்பியது. இந்தியா 59 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்திருந்தது. தனி ஆளாக போராடிக்கொண்டிருந்த சேவாக், முடிந்தளவு ரன்களை சேர்க்கத் தொடக்கினார். மோசமான தவறால் சேவாக்கின் ஆட்டமும் ஒரு ரன் அவுட்டால் முடிவுக்கு வந்தது.
அது ஒரு தற்கொலைக்கு நிகரான ரன் அவுட் என அப்போது வர்ணிகப்பட்டது. சேவாக் 81 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார். இதுதான் அந்தப்போட்டியில் இந்திய அணியில் தனிநபர் விளாசிய அதிகபட்ச ஸ்கோர்.
டிராவிட்டை தவிர்த்து அடுத்து வந்த வீரர்கள் யாராலும் களத்தில் வெகு நேரம் தாக்குப் பிடிக்க முடியவில்லை. டிராவிட் 47 ரன்களில் ஆட்டமிழந்தார்.
2003க்கும் 2023க்கும் உள்ள ஒற்றுமை என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்தியா 234 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ரசிகர்கள் பலர் அழுகையில் மூழ்கினர். ஆஸ்திரேலியாவின் மாபெரும் வெற்றியால் 3வது முறையாக உலகக்கோப்பை அவர்கள் வசமானது.
தற்போது அதே பாணியில் நவம்பர் 19ம் தேதி இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் ஒருநாள் உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் களம் காண்கின்றன. இந்திய ரசிகர்கள் பலர் சமூக ஊடகங்களில், இந்தியா 2003 தோல்விக்காக ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டு வருகின்றனர்.
2003-ல் ஒரு போட்டியில் கூட தோற்காமல் உலகக்கோப்பையை வென்றது ஆஸ்திரேலியா. இந்தியா அந்த சமயம் 2 ஆட்டங்களில் தோற்று இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 2003 தொடரில் சச்சின் டெண்டுல்கர் டாப் ஸ்கோரராகத் திகழ்ந்தார். நடப்புத் தொடரில் விராட் கோலி டாப் ஸ்கோரராகத் திகழ்கிறார்.
இப்படியாக 2003 தொடருக்கும் நடப்புத் தொடருக்கும் இடையே சில ஒற்றுமைகளும் இருக்கத் தான் செய்கின்றன. 2003-க்குப் பிறகும் ஆஸ்திரேலியாவின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிடவில்லை.
2007,2015 என இரு முறை ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. 5 முறை சாம்பியன் பட்டம் வென்ற பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நவம்பர் 19ம் தேதி எதிர்கொள்கிறது இந்தியா. அன்று கங்குலியால் முடியாததை இன்று ரோஹித் முடித்துக் காட்டுவாரா? என்பதை பொருத்திருந்து பார்க்கலாம்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
