பட மூலாதாரம், Narendra modi/Twitter
- எழுதியவர், ஜோயா மாட்டின்
- பதவி, பிபிசி செய்தியாளர்
-
இந்தியாவின் சாலையோரங்களில் காணப்படும் இதுபோன்ற விளம்பர பலகைகளில், சாதாரண நாட்களில் சினிமா நடிகர்கள் பலவற்றையும் விளம்பரப்படுத்துவதை காணலாம்.
ஆனால், கடந்த ஓராண்டாக இத்தகைய விளம்பரங்களுக்கு பதிலாக நாடு முழுவதும் ஜி-20 மாநாடு தொடர்பான விளம்பரங்கள் இடம் பெற்றுள்ளன. மின் கம்பங்கள் முதல் இ-ரிக்ஷாக்கள் வரை எதிலும் ஜி-20 தொடர்பான விளம்பரங்கள் காணப்படுகின்றன. பெரிய எல்.இ.டி. திரைகளிலும் ஜி-20 விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.
இந்த சுவரொட்டிகளில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ ஜி-20 லோகோ பிரதானமாக தெரிகிறது. அதனுடன், பூமிப் பந்து, மலர்ந்த தாமரையும் அதில் இடம் பெற்றுள்ளன. மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் சின்னமாகவும் தாமரை உள்ளது. இந்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படமும் இடம் பெற்றுள்ளது.
இந்த விளம்பரங்கள் மூலம் இந்தியா தற்போது உலக அரங்கில் முக்கிய இடத்துக்கு வந்துவிட்டது என்ற செய்தியை மத்திய அரசு தெரிவிக்க விரும்புகிறது.
பட மூலாதாரம், Getty Images
ஜி-20 மாநாடு நடத்த எவ்வளவு செலவாகும்?
ஜி-20 நிகழ்வுகளுக்கு 100 மில்லியன் டாலருக்கு (இந்திய மதிப்பில் சுமார் 830 கோடி ரூபாய்) மேல் செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஜி-20 உச்சிமாநாட்டிற்கு முன்பு நாட்டின் 50க்கும் மேற்பட்ட நகரங்களில் சுமார் 200 கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. யோகா, கலாச்சார நிகழ்வுகள், பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட உணவுகள் போன்றவையும் இதில் அடங்கும்.
கடந்த பல மாதங்களாக, இந்திய செய்தி சேனல்களில் ஜி-20 கூட்டங்கள் தொடர்பான செய்திகள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. வெளியுறவுக் கொள்கையின் நுணுக்கங்களைப் பற்றி பொதுவாக அறியாத மக்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.
ஜி-20 உச்சி மாநாடு இன்று தொடங்கும் நிலையில், தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜி-20 முக்கிய கூட்டத்திற்கு இப்போது ஒரு நாள் மட்டுமே உள்ளது. நாட்டில் ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இது போன்ற உயரிய நிகழ்ச்சிக்கு தலைநகர் டெல்லி தயாராகியுள்ளது.
நகரம் முழுவதும் அற்புதமான நீரூற்றுகள், பூந்தொட்டிகள் மற்றும் தேசியக் கொடிகள் நிறுவப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள ஏராளமான வரலாற்று நினைவுச்சின்னங்கள் ஒளிரூட்டப்பட்டுள்ளன.
பட மூலாதாரம், Getty Images
இவற்றின் அருகில் இருந்து செல்ஃபி எடுக்க எடுக்க மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. நகரின் முக்கிய பூங்காக்கள் பொலிவு பெற்றுள்ளன. பூங்காவில் உள்ள மரங்களில் இலைகள் வெட்டப்பட்டு அவற்றில் ஜி-20 மாநாட்டில் பங்கேற்கும் நாடுகளின் கொடிகள் நிறுவப்பட்டுள்ளன.
ஜி-20 மாநாட்டுக்கு தலைநகரை தயார்படுத்தியதில் இன்னொரு விஷயம் குறித்து பேசவேண்டியிருக்கிறது. டெல்லியில் உள்ள பல சேரிகளும் துணிகளை கொண்டு மறைக்கப்பட்டுள்ளன. சில இடங்களில் குடியிருந்த மக்கள் அகற்றப்பட்டுள்ளனர். நகரின் முக்கிய இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் அகற்றப்பட்டுள்ளனர். எங்கு கொண்டு செல்லப்பட்டனர் என்பது தெரியவில்லை.
டெல்லியில் மூன்று நாட்களுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான பள்ளிகள், அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளன.
சில சாலைகளில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளது. மாநாட்டை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இவை தவிர நூற்றுக்கணக்கான விமானங்கள் மற்றும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்தியா இதற்கு முன்பு இத்தனை சர்வதேச தலைவர்கள் ஒரே நேரத்தில் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியை நடத்தியது இல்லை.
பட மூலாதாரம், Rishi Sunak/Twitter
யுக்ரேன் விவகாரம் டெல்லியில் எதிரொலிக்குமா?
ரஷ்யா- யுக்ரேன் இடையேயான விவகாரம் டெல்லியில் நடைபெறும் ஜி-20 மாநாட்டில் முக்கிய இடத்தை பிடிக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் இந்திய தூதர் ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகையில், “வெளிநாட்டு விவகாரங்களுக்கும் உள்நாட்டு அரசியலுக்கும் இடையிலான எல்லையை மங்கலாக்க இந்தியா முயற்சிக்கிறது” என்றார். இதை அடைய ஜி-20 மிக முக்கியமான மன்றமாகும். இது இந்திய அரசுக்கு நன்றாக தெரியும்.
கடந்த ஆண்டு இந்தோனீசியாவின் பாலியில் நடந்த ஜி-20 உச்சிமாநாட்டின் போது நடந்தது போல, திருவிழா போன்ற சூழ்நிலையில் கூட, யுக்ரைன் போர் போன்ற பிரச்சினைகள் மாநாட்டின் லட்சியங்களை சிதைக்காமல் இருப்பதை உறுதிசெய்யும் நுட்பமான பணி இந்தியாவுக்கு இருக்கும்.
“யுக்ரைன் போன்ற பிளவுபடுத்தும் பிரச்சினைகளை விவாதிப்பதை விட ஒருமித்த பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று இந்தியா நினைக்கிறது. ஆனால், இதுவரை இதைச் செய்ய முடியவில்லை, தற்போது இந்தியா இதனை சிறப்பாக கையாளும் என நினைக்கிறேன்” என்று ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.
சக்தி வாய்ந்த நாடுகள் வரிசையில் இந்தியா
ஜி-20 தலைவர் பதவியை ஏற்றுக்கொண்ட பின்னர் பருவநிலை மாற்றம், வளரும் நாடுகளின் அதிகரித்து வரும் கடன் சுமை, டிஜிட்டல் மாற்றம், அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் உணவு-ஆற்றல் பாதுகாப்பு போன்ற வளரும் நாடுகளை பாதிக்கும் விஷயங்களை உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் சேர்க்க விரும்புவதாக இந்தியா கூறியது.
ஹேப்பிமேன் ஜேக்கப் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சர்வதேசக் கொள்கை தொடர்பாக வகுப்பெடுத்து வரும் ஜேக்கப் இது தொடர்பாக பேசும்போது, லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா, ஆசியாவின் வளரும் நாடுகள் போன்ற உலகளாவிய தெற்கு நாடுகள்(Global South)சர்வதேச அமைப்பில் ஒரு முக்கிய பங்குதாரராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள முடிந்த நேரத்தில் இந்த உச்சி மாநாடு நடக்கிறது என்று குறிப்பிட்டர்.
பட மூலாதாரம், Narendra modi/Twitter
அதேபோல், மேற்கத்திய நாடுகளும் தங்களால் மட்டுமே முழு உலகத்தின் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்துள்ளன.
அதிகரித்து வரும் சமத்துவமின்மை, உணவு, எண்ணெய் விலை அதிகரிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுக்கு மத்தியில் பல நாடுகள் இப்போது ஜி020 போன்ற மேற்கத்திய மேலாதிக்க மன்றத்தின் தேவையை கேள்விக்குள்ளாக்குகின்றன. இது பழைய உலகளாவிய அதிகார பரவலை அடிப்படையாகக் கொண்டது என்று அவர்கள் கூறுகின்றனர்.
கொரோனா காலத்தில் இது தெளிவாக தெரிந்ததாக குறிப்பிடும் அவர், “ஆப்ரிக்கா, தெற்காசியா மற்றும் சீனாவுக்கு இந்தியா உதவியபோது மேற்கத்திய நாடுகள் தங்களில் சொந்த பிரச்னைகளில் மட்டுமே மூழ்கியிருந்தன” என்றார்.
“உங்களுடன் நாங்கள் இருக்கிறோம் என்பதுதான் உள்நாட்டு மக்களுக்கும் தெற்கு நாடுகளுகும் உள்ள செய்தி. முன்னணியில் இருந்து வழிநடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். உலகின் இந்த பகுதியில் இருந்து இந்தியாவின் தலைமைத்துவம் வருகிறது என்பதுதான் சர்வதேச சமூகத்திற்கான செய்தி” என்றும் அவர் கூறுகிறார்.
இந்த உதாரணத்தை மேற்கோள் காட்டி, ஜி 20 இல் ஆப்பிரிக்க யூனியனை சேர்க்கும் முன்மொழிவு வளரும் நாடுகளை ஆதரிக்கும் இந்தியாவின் விருப்பத்தை காட்டுகிறது என்று ஜிதேந்திர நாத் மிஸ்ரா கூறுகிறார்.
உலகின் முன்னணி பொருளாதாரங்களில் ஒன்றாக திகழும் இந்தியா இதை அடைவதற்கான திறன், வழிமுறைகள் ஆகியவற்றை தான் கொண்டுள்ளதாக கருதுகிறது.
ஆனால், புவிசார் அரசியலில் சிக்கலான சூழ்நிலையில் இருக்கும் இந்தியாவுக்கு வளர்ச்சியடைந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே பாலமாக இருக்க முயற்சிப்பது எளிதானதாக இருக்காது.
பட மூலாதாரம், Narendra modi/Twitter
ஜி-20 உச்சி மாநாடும் உள்நாட்டு அரசியலும்
பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில், ஜி20 மாநாட்டை நடத்துவதில் இந்தியா அதிக முதலீடு செய்துள்ளது. குறிப்பாக அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முன்பாக, உலக அளவில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்த தன்னால் முடியும் என்பதைக் காட்ட அவர் விரும்புகிறார். இதன் மூலம் தேர்தலில் சாதகமான முடிவுகள் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
பொதுவாக, பாகிஸ்தான், சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் தொடர்பானவையாக இருந்தாலொழிய இந்தியாவின் தேர்தல் அரசியலில் வெளியுறவுக் கொள்கை பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தாது.
ஆனால் பிரதமர் மோதியின் ஆட்சியில் இந்த நிலை மாறி வருகிறது. இந்தியர்கள் உலக அளவிலான தங்கள் மீதான இமேஜைப் பற்றி கவலைப்படுகிறார்கள், மோதியும் அதையே செய்கிறார்.
“மோதி ஓர் உலகளாவிய அரசியல்வாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜி-20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடிப்பது அவர் மீதான பிம்பத்தை மேலும் பிரகாசமாக்கும்” என்று ஜேக்கப் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
மறுபுறம், “ஒருவேளை உச்சிமாநாட்டில் யுக்ரேன் விவகாரம் பாதிப்பை ஏற்படுத்தினாலும் இந்தியாவின் மதிப்பை இந்த மாநாடு சர்வதேச அளவில் உயர்த்தியிருப்பதாகவே இந்தியர்கள் நினைப்பார்கள்” என மிஸ்ரா தெரிவித்தார்.
ஆனால், உள்நாட்டில் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது போன்ற பலவற்றை பிரதமர் மோதி செய்ய வேண்டி இருக்கிறது.
மனித உரிமைகள் தொடர்பான கேள்விகளும் முன்வைக்கப்படுகின்றன. 2014ல் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு முஸ்லிம்கள் மற்றும் பிறருக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகளும் ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த குற்றச்சாட்டுகளை மோதி அரசு மறுத்து வருகிறது. தனது கொள்கைகள் அனைத்து இந்தியர்களையும் உள்ளடக்கியவை என்று அவர் கூறுகிறார். இந்த உச்சிமாநாட்டின் போது நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் பிரதமர் மோதி சொல்ல விரும்பும் செய்தியும் இதுதான்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
