நாடாளுமன்றத் தேர்தல்: நரேந்திர மோதி அரசின் வேளாண் திட்டங்கள் தமிழக விவசாயிகளை வந்தடைந்தனவா?

நாடாளுமன்றத் தேர்தல்: நரேந்திர மோதி அரசின் வேளாண் திட்டங்கள் தமிழக விவசாயிகளை வந்தடைந்தனவா?

மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 4.3 லட்சம் ஹெக்டருக்கும் அதிகமான பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இதில் திருச்சி, மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் அதிக அளவிலான நெல் சாகுபடி நடைபெறுகிறது.

மத்திய அரசின் இரட்டிப்பு விலை உத்தரவாதம், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், குளிர்பதன கிடங்குத் திட்டம், இயற்கை விவசாய திட்டம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அதனால் தாங்கள் லாபமில்லாமல் விவசாயம் செய்யவேண்டியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளை முழுமையாக சென்றுசேர்வதில் என்ன சிக்கல்?

மத்திய அரசின் திட்டம் எந்த அளவுக்கு விவசாயிகளைச் சென்று சேர்ந்திருக்கின்றன என்று அறிந்துகொள்வதற்காக காவிரி டெல்டா மாவட்டங்களான திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களுக்குப் பயணம் செய்து மத்திய அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளிடம் கேட்டறிந்தோம்.

விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் என்ன?

திருச்சி லால் குடியைச் சேர்ந்த விவசாயி வெற்றி வேல், தான் ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வரை செலவு செய்து விவசாயம் பார்த்தாலும் 30,000 ரூபாய் மட்டுமே வருமானம் கிடைக்கிறது என்கிறார்.

25 ஏக்கர் பரப்பளவில் நெல், வாழை, சிறு தானியம் என பல்வேறு பயிர்களை பயிரிட்டு விவசாயம் பார்க்கும் இவர், நெல் விதைப்பு, உரம், பூச்சிக் கொல்லி, இயந்திர அறுப்புக் கூலி என செலவு செய்து விவசாய பார்த்தாலும் நல்லவிலை விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை என்கிறார். “சில நேரம் செலவு செய்யும் அளவிற்கு கூட மகசூல் இல்லாமல் நஷ்டம் ஏற்படுகிறது. இதனால், சிறு விவசாயிகள் விவசாயத்தை தொடர்வது பெரும் சவாலாக இருக்கிறது,” என்கிறார்

கடந்த ஆண்டு 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 62 கிலோ எடையுள்ள ஒரு மூட்டை நெல் இந்த ஆண்டு அரிசி பற்றாக்குறையால் 1,800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. இது இந்த பகுதி விவசாயிகளுக்கு சற்று ஆறுதலாக உள்ளது.

“நரேந்திர மோதி அரசு விவசாயிகளின் லாபத்தை இரட்டிப்புச் செய்வேன், எம்.எஸ்.சாமிநாதனின் குறைந்தபட்ச விலை திட்டத்தை நிறைவேற்றுவேன் என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், தற்போதுவரை அதற்காக எதையும் செய்யவில்லை, மாறாக 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. விவசாயிகள் போராட்டம் நடத்திய பிறகு அந்த மூன்று சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற்றது,” என்கிறார் தென்னிந்திய நதிகள் இணைப்புச் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு.

ஆனால் இந்தக் கருத்தை ஏற்க மறுக்கு பாரதீய கிசான் சங்கத்தின் மாநில செயலாளர் வீர சேகரன் “நரேந்திர மோதி அரசு 2022-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளுக்கான வருவாயை இரட்டிப்பாகி தருவதாக கூறினார். ஆனால் அதைச் செய்யவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் 60% வருவாய் கொடுத்ததன் மூலம் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வருவாய் கிடைத்தது,” என்கிறார்.

“மாநில அரசு விவசாயிகளின் தேவைக்குத் தண்ணீர் திறக்காமல் காவிரியிலிருந்து 60 நாட்களில் 100 டி.எம்.சி நீரை சென்ற ஆண்டு திறந்ததால் விவசாயிகள் வேளாண்பணியை செய்ய கடும் நெருக்கடியை சந்தித்தனர். இதனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு மகசூல் குறைந்தது,” என்கிறார்

மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள்

குளிர்பதன கிடங்கைத் தேடி அலையும் விவசாயிகள்

விவசாயிகள் உற்பத்தி செய்த வேளாண் பொருட்களைச் சேகரித்து வைப்பதற்காக தமிழ்நாட்டில் 186 குளிர்பதன கிடங்குகள் உள்ளன. இவற்றில் மொத்தமாக 7,465 மெட்ரிக் டன் எடை கொண்ட வேளான் பொருட்களைச் சேமித்து வைத்து விற்பனை செய்யலாம். இந்த ஆண்டும் கூடுதலாக 8 இடங்களில் குளிர்பதன கிடங்குகள் திறக்கப்படுள்ளன. இது பலன் தந்திருக்கிறதா என்று விவாசயிகளிடம் கேட்டோம்.

“100 மெட்ரிக் டன் அளவுக்கு விளைபொருட்களைச் சேமிக்கக் கூடிய தஞ்சாவூர் திருக்காட்டுப்பள்ளி குளிர்பதன கிடங்கல் புளி, வாழை, மிளகாய், காய்கறிகள் ஆகியவற்றை அதிக விளச்சல் நேரத்தில் சேமித்து வைத்து, தேவை அதிகரிக்கும் போது விற்பனை செய்கிறோம். இது கணிசமான வருவாயை தருகிறது,” என்கிறார் விவசாயி திருமலை ராஜ்

ஆனால், தமிழ்நாட்டில் இந்த குளிர்பதனக் கிடங்கு வசதி போதிய அளவு இல்லை என்கின்றனர் விவசாயிகள். இதனால், விவசாயிகள் விளைபொருட்களை எடுத்துக் கொண்டு சேமிப்புக் கிடங்கு தேடி 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை செல்ல வேண்டியிருப்பதால் பலருக்கும் கூடுதல் செலவு ஏற்படுகிறது, என்கின்றனர். எனவே, பரவலாக விவசாயம் நடைபெறும் பகுதியை கண்டறிந்து சிறிய அளவிலான சேமிப்பு கிடங்குகள், விற்பனை நிலையம் ஆகியவை அமைத்தால் விவசாயிக்கு லாபாம் கிடைக்கும் என விவசாயிகள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில் பி.எம் கிசான் திட்டத்தின் நிலை என்ன?

‘பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி’ திட்டம் 2019-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன்மூலம் 2-5 ஏக்கர் நிலம் வைத்துள்ள சிறு குறு விவசாயிகளின் பொருளாதார உதவிக்காக நான்கு மாதத்திற்கு ஒரு முறை 2,000 ரூபாய் என ஆண்டுக்கு 6,000 ரூபாய் விவசாயிகளின் கணக்கில் வரவு வைக்கப்படும். இதில் தமிழ்நாட்டில் 2018-19 ஆண்டில் சுமார் 21.6 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். 2020-2021 ஆம் ஆண்டில் சுமார் 44.5 லட்சம் விவசாயிகள் பதிவு செய்திருந்தனர். பலர் கொரோனா காலத்தைப் பயன்படுத்தி இணைய தளத்தில் முறைகேடாக பதிவு செய்தது கண்டுபிடிக்கப்பட்ட போலியாக பதிவு செய்தவர்கள் நீக்கப்பட்டனர். இந்த திட்டத்தில் 2023-2024 (2023 ஜூலையில் இருந்து) சுமார் 21 லட்சம் விவசாயிகள் பயனடைந்து வருவதாக PIB-யின் தகவல் கூறுகிறது.

பி.எம் கிசான் திட்டத்தில் ஆவணங்கள் சரிபார்த்த பின்பே பதிவசெய்யப்படுவதால் முறைகேடுகள் தவிர்க்கப்படுகின்றன. ஆனால் நிதி வழங்குவதில் அவ்வபோது தாமதம் உள்ளது என ஒரு அதிகாரி தெரிவித்தார்.

மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள்
படக்குறிப்பு,

பி.ஆர். பாண்டியன்

‘பயிர் காப்பீடு பெற போராடும் நிலையில் உள்ளோம்’

பயிர்கள் புயல், வெள்ளம், நோய் தாக்கம், அல்லது வறட்சியால் பாதிக்கப்பட்டால் அவற்றிக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டுத் தொகை வழியாக பயிர் இழப்பீடுத் தொகை வழங்கப்படும் திட்டம் 2016-ஆம் ஆண்டில் இருந்து செயல்பட்டு வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட போது பயிருக்கான பீரிமியம் தொகையில் 49% மத்திய அரசும், 49% மாநில அரசும் 2% விவசாயிகளும் செலுத்தினர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மத்திய அரசு தன் பங்கினை 30%-ஆகக் குறைத்துக் கொண்டது.

“இதனால் மாநில அரசு 65 சதவீதம், விவசாயிகள் 5 சதவீதம் பிரீமியம் கட்ட வேண்டிய நிலை உள்ளது,” என ஒரு மாநில வேளாண் துறை அதிகாரி கூறினார்.

மெலும் பேசிய அவர், “தமிழ்நாடு அரசு 2022-2023-ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் 1,750 கோடி ரூபாயைப் பயிர் காப்பீட்டுக்கு ஒதுக்கியது. மத்திய அரசு 1,000 கோடி ரூபாய்க்கு குறைவாகவே கொடுத்தது. அடுத்த நிதியாண்டில் 1,775 கோடி ரூபாய் வேளாண் காப்பீட்டு தொகையாக நிதி ஒதுக்கீடு செய்யட்டுள்ளது. தமிழ்நாட்டில் சராசரியாக 25 லட்சம் விவசாயிகள் ஆண்டுதோறும் இத்திட்டத்தில் பதிவு செய்கின்றனர்,” என அந்த அதிகாரி கூறினார்.

தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் பிபிசியிடம் பேசுகையில், “பிதமரின் காப்பீடு திட்டத்தில் 100% நிலத்தில் 33% பாதிப்பு ஏற்பட்டால் மட்டுமே நெல் பயிராக இருந்தால் மூன்று ஆண்டுகளும், மற்ற பயிர்களுக்கு 5 ஆண்டுகளும் சராசரியைக் கணக்கீடு செய்து இழப்புத் தொகை வழங்கப்படுகிறது. இதனால், சிறு விவசாயகள் கடுமையாக பாதிப்பை சந்திக்கின்றனர். எனவே குஜராத் மாநிலம் செய்து இருப்பது போல விவசாயிகளுக்குத் தனிநபர் காப்பீடு திட்டத்தை மாநில அரசு கொண்டுவர வேண்டும். இதன் மூலம் ஒரு விவசாயி பாதிக்கப்பட்டாலும் அவருக்கான இழப்பு கிடைக்கும்,” என்றார்.

“மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் பிரச்சனையால் காவிரி நீரை நம்பி விவசாயம் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு இதை முதன்மை பிரச்சனையாக கருதி, தீர்வு கண்டால் மட்டுமே டெல்டாவில் விவசாயம் காக்கப்படும்,” என்கிறார் பி.ஆர். பாண்டியன்.

மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள்

‘இயற்கை விவசாயத்திற்கு சந்தை இல்லை’

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க மத்திய அரசு இயற்கை உரம் தயாரிப்பு, மண்புழு உரம் தயாரிக்க மானியங்கள் வழங்கி வருகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி திருநாவுக்கரசர், “இயற்கை விவசாயத்தில் விளை பொருள் உற்பத்தி, உரம் தயாரிப்பு, கூலி ஆட்கள் கிடைப்பது, பூச்சித் தாக்குதல் அபாயம், விளைந்த பொருளைச் சந்தைபடுத்துதல் ஆகியவை சிக்கல்களாக இருக்கின்றன,” என்கிறார்.

20 ஆண்டுக்கு முன்பு 50 ஏக்கரில் துவங்கிய இயற்கை விவசாயத்தை பராமரிக்க இயலாததால் இபோது 2 ஏக்கர் பரப்பில் மட்டுமே தற்போதுஅதைச் செய்துவருவதாகக் கூறினார் அவர். “ஆடு, மாடு, மீன் கோழி, என ஒருங்கிணைந்த இயற்கை பண்ணை விவசாயம் மட்டுமே இயற்கை விவசாயத்திற்கு கைகொடுக்கும். ஒரு சிறு விவசாயி ஒரு ஏக்கரில் அதனைச் செய்ய முடியாது,” என்கிறார் அவர்.

இன்னமும் சில விவசாயிகள், தென்னை, எள், கடலை ஆகிய விளை பொருட்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து அவற்றைலிருந்து எண்ணெய் தயாரித்து, பொது விநியோக கடையில் விற்பனை செய்ய வேண்டும் என பிபிசியிடம் கூறினர்.

மாநில அரசு என்ன சொல்கிறது?

விவசாயிகள் மத்திய அரசின் திட்டங்களின் மூலம் பலன்பெறுவதில் பல்வேறு சவால்களைச் சந்தித்து வருவதாக கூறும் இந்நிலையில், மாநில அரசு விவசாயிகளுக்கு இரு போக விவசாயத்தை உறுதி செய்யத் திட்டமிட்டு வருவதாகக் கூறுகிறார் வேளாண்துறையின் உற்பத்தி ஆணையர் அபூர்வா.

இது குறித்து பேசிய அவர், பயிரிடும்போது பூச்சி தாக்குதல், வறட்சி,வெள்ளம், போன்ற பல்வேறு காரணிகள் வேளாண் விளைச்சலை நிர்ணயம் செய்கின்றன, என்றார். தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகள் இரண்டு போக விவசாயத்தையாவது முழுமையாகச் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் வேளாண் துறை திட்டங்களை வகுத்து அதனை நோக்கித் செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

“மத்திய, மாநில அரசுகள் மற்றும் விவசாயிகள் விவசாயக் காப்பீட்டுத்

தொகைக்கான பிரீமியம் தொகையை சேர்ந்துதான் செலுத்துகிறார்கள்.

விவசாயிகள் தனிநபர் இழப்புக் காப்பீட்டுத் திட்டத்தை மாநில அரசே அமைக்க வேண்டும் என கேட்கின்றனர். ஆனால் மத்திய-மாநில அரசுகள் இணைந்துதான் இது குறித்து முடிவு செய்யவேண்டும்,” என்றார்.

மேலும் பேசிய அவர் “தமிழ்நாட்டில் விளையக்கூடிய தேங்காய், கடலை, எள் ஆகியவற்றில் இருந்து எண்ணெய் தயாரித்து அதனை பொது விநியோகக் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் இருக்கிறது. பின்னர் இது குறித்து முடிவெடுக்கப்படும்,” என்றார்.

“நெல் மற்றும் கரும்புக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை மாநில அரசு நிர்ணயம் செய்திருக்கிறது. கூடுதல் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை குறித்து அரசு ஆலோசித்து முடிவு செய்யும்,” என்றார்.

மத்திய அரசின் விவசாயத் திட்டங்கள்
படக்குறிப்பு,

அய்யாக்கண்ணு

விவசாயிகள் போராட்டம்

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான உத்தரவாதம், 2020-2021 போராட்டத்தின் போது விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறுவது, லக்கிம்பூர்-கேரி சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வேலையும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூபாய் 10 லட்சமும் வழங்கும் உத்தரவாதம் நிறைவேற்றப்படுவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியை நோக்கிச் செல்வதற்காக ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஹரியாணா எல்லையிலிருந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டங்களுக்கு முன்னுதாரணமாக 2017-ஆம் ஆண்டு தாங்கள்தான் டெல்லியின் ஜந்தர் மந்தரில் 141 நாட்கள் பல்வேறு வகையான போராட்டம் நடத்தினோம் என்கிறார் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிறுவனர் அய்யாக்கண்ணு.

“அதே கோரிக்கையான விவசாய விலை பொருளுக்கு அடிப்படைவிலை நிர்ணயம். 60 வயதுக்கு மேலான விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுக்கு ஆதரவாக நாங்களும் தமிழ்நாட்டில் போராட்டத்தை தொடர்ந்து வருகிறோம். மத்திய அரசு விவசாயிகளை வஞ்சிக்க கூடாது எஸ்.எஸ்.சுவாமிநாதன் ஆணையத்தின் பரிந்துரையை நிறைவேற்ற முன்வர வேண்டும்,” என்றார் அய்யாக்கண்ணு.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *