
பட மூலாதாரம், QUEEN MARGARET UNIVERSITY
நமது அன்றாட வாழ்வில் அதிகமாகப் பயன்படுத்தும் ஒரு பொருள் பாமாயில்.
சோப்பு, ஷாம்பூ போன்ற கழிவறைப் பொருட்கள் முதல், நாம் உண்ணும் பிஸ்கட், கேக் போன்ற தின்பண்டங்கள் வரை பாமாயில் பயன்படுத்தப்படுகிறது.
அதனாலேயே, ஈடுசெய்ய முடியாத மூலப்பொருளாக இது பார்க்கப்படுகிறது.
ஆனால், ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓர் ஆய்வுக் குழு, பாமாயிலுக்கு ஒரு மாற்றைக் கண்டறிந்துள்ளது. தங்கள் கண்டுபிடிப்பு பாமாயிலுக்குச் சரியான மாற்றாக இருக்கும் என்று இக்குழுவினர் நம்புகின்றனர்.
தவிர்க்க முடியாத பாமாயில் பயன்பாடு
பல்பொருள் அங்காடிகளில் நாம் பார்க்கும் அனைத்து உணவு மற்றும் அழகு சாதனப் பொருட்களில் கிட்டத்தட்ட பாதிப் பொருட்களில் பாமாயில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
பாமாயிலுக்கான அதீத தேவைக்காக, பூமத்திய ரேகைக்கு அருகில் பனை மரங்களை வளர்க்க, இயற்கையான காட்டுப் பகுதிகள் மிகப்பெரிய அளவில் அழிக்கப்பட்டுள்ளன.
எடின்பரோவில் உள்ள குயின் மார்கரெட் பல்கலைக்கழகத்தின் (Queen Margaret University, Edinburgh) உணவு நிபுணர்கள், அவர்களின் புதிய கண்டுபிடிப்பு, 100% தாவர அடிப்படையிலானது என்றும், சுற்றுச்சூழலுக்கு 70% சிறந்தது என்றும் கூறுகிறார்கள்.
பாமாயிலை விடவும் ஆரோக்கியமானதா?

பட மூலாதாரம், Getty Images
‘PALM-ALT’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இது, 80% குறைவான நிறைவுற்ற கொழுப்பு (saturated fat) மற்றும் 30% குறைவான கலோரிகளை கொண்ட ஓர் ஆரோக்கியமான மாற்று என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
இந்தக் குழுவின் முன்னணி ஆய்வாளர்களில் ஒருவரான கேட்ரியோனா லிடில், இந்த மாற்று பாமாயிலின் அதே சுவை மற்றும் அமைப்பைக் கொண்டிருப்பதாகக் கூறுகிறார்.
“நாங்கள் தயாரித்திருக்கும் மாற்று பாமாயிலுக்கும், இயற்கையான பாமாயிலுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கண்டறிய முடிகிறதா என்பதை அறிய, இரண்டையும் ஒரு சோதனைக் குழுவிடம் கொடுத்து சுவைத்துப் பார்க்கச் சொன்னோம். அவர்களால் வித்தியாசத்தைக் கண்டறிய முடியவில்லை,” என்கிறார் அவர்.
PALM-ALT மயோனைஸ் போன்ற திடத்தைக் கொண்டிருப்பதாக அவர்கள் கூறுகிறார்கள். இதில் பனை மற்றும் தேங்காய் பொருட்கள் இல்லை. கூடுதல் சுவையூட்டிகள், சர்க்கரை, செயற்கை இனிப்பான்கள், பதப்படுத்தும் ரசயனங்கள் மற்றும் செயற்கை வண்ணங்கள் போன்றவை இல்லை.
இது ஆளிவிதை தொழிற்சாலைக் கழிவுகள், இயற்கை நார், மற்றும் ராப்சீட் (rapeseed) எண்ணெய் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
பாமாயில் அதிக வெப்பநிலையில் அதன் பண்புகளை இழக்காமல் இருப்பதால், சமையலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
பாமாயில் ஏன் விரும்பப்படுகிறது?
இயற்கைக்கான உலகளாவிய நிதியத்தின் (World Wide Fund for Nature WWF) கூற்றுப்படி, பாமாயில் உலகில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் தாவர எண்ணெயாக உள்ளது, அதாவது உலகளாவிய உணவு எண்ணெய் தயாரிப்பில் இது 40% பங்கு வகிக்கிறது.
இது உணவு மற்றும் அழகுசாதன நிறுவனங்களில் மிகவும் பிரபலமாக உள்ளது. ஏனெனில் இது மணமற்ற, சுவையற்ற மற்றும் நிறமற்ற எண்ணெய். இது பொருட்களின் வாசனை, சுவை அல்லது தோற்றத்தை மாற்றாமல் ஒரு மென்மையான அமைப்பைச் சேர்க்கிறது.
மேலும் இயற்கையான உணவு பதப்படுத்தும் பொருளாகச் செயல்படுகிறது. இது அதிக வெப்பநிலையில் அதன் பண்புகளை இழக்காமல் இருக்கிறது, சமையலுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.
இது சாக்லேட் முதல் ஷாம்பூ, பீட்சா, பற்பசை மற்றும் டியோடரன்ட் என நம் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் பொருட்கள் எல்லாவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது.
பாமாயில் தயாரிப்பு எவ்வளவு பெரிய தொழில்?

பட மூலாதாரம், Getty Images
பாமாயில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில் 85% இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் உள்ளது.
பாமாயில் சாகுபடி செய்யப்படும் நிலப்பரப்பில் 85% இந்தோனீசியா மற்றும் மலேசியாவில் உள்ளது. 1970இல் 80 லட்சம் ஏக்கராக இருந்த இந்த நிலப்பரப்பு, 2020இல் 700 ஏக்கராக, கிட்டத்தட்ட ஒன்பது மடங்கு அதிகரித்துள்ளது.
நிதி அடிப்படையில், 2021 தரவுகளின் படி, உலகளாவிய பாமாயில் தொழில்துறையின் மதிப்பு 4 லட்சம் கோடி ரூபாய் என்று ஓர் அறிக்கை மதிப்பிடுகிறது. தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இந்த எண்ணிக்கை 2028க்குள் 6 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிபிசி வானொலியின் குட் மார்னிங் ஸ்காட்லாந்து நிகழ்ச்சியில் பேசிய கேட்ரியோனா லிடில், “உணவுத் தொழிலில் பாமாயில் கொழுப்பாகப் பயன்படுத்தப்படுகிறது. இது உணவுப் பொருட்களை நீடித்திருக்க வைக்கிறது. குறிப்பாக அடுமனைத் தயாரிப்புகளில், இது கிட்டத்தட்ட ஈடுசெய்ய முடியாத ஒரு மூலப்பொருளோக உள்ளது,” என்றார்.
பாமாயில் ஈடு செய்ய முடியாததா?
ஆனால், இந்த ஆராய்ச்சிக் குழு தங்களது ‘PALM-ALT’க்கு சர்வதேச அறிவுசார் சொத்துரிமை கோரி விண்ணப்பித்திருக்கிறது. மேலும் இக்குழு வருங்கால உற்பத்தியாளர்களுடன் விவாதங்களைத் தொடங்கும் நிலையில், பாமாயில் ஈடுசெய்ய முடியாதது என்னும் நிலை மாறக்கூடும்.
“நாங்கள், ரொட்டி, கேக், பிஸ்கட் என எல்லோரும் சாப்பிட விரும்பும், ஆனால் ஆரோக்கியமானவை அல்லாத பேக்கரி தயாரிப்புகளில் இருந்து தொடங்கினோம்,” என்று லிடில் கூறுகிறார்.
“நாங்கள் 80% குறைவான நிறைவுற்ற கொழுப்பு மற்றும் 30% குறைவான கலோரிகளைக் கொண்ட ஒரு தயாரிப்பை உருவாக்கியுள்ளோம், எனவே இது பாமாயிலைவிட குறிப்பிடத்தக்க ஆரோக்கியமான தயாரிப்பு.
கரிம வெளியேற்றத்தைப் பொறுத்தவரை இது சுற்றுச்சூழலுக்கு 70% சிறந்தது. இப்போது இதைத் தயாரிப்பதற்காக தொழில்சார் துறையினருடன் கலந்துரையாடி வருகிறோம். இது உற்சாகமாகமளிப்பதாக இருக்கிறது,” என்கிறார் லிடில்.
பாமாயில் தயாரிப்பு பூமிக்கு ஏன் பாதகமானது?

பட மூலாதாரம், Getty Images
பாமாயில் தயாரிக்க காடுகளை எரிப்பதால் ஒராங்குட்டான் போன்ற உயிரினங்கள் பாதிக்கப்படுகின்றன.
பாமாயில் தயாரிப்பு மலிவானது. மற்ற எண்ணெய்களுக்குப் பதிலாக உணவு மற்றும் பிற பொருட்களில் இது பயன்படுத்தப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன.
ஆனால் பாமாயில் தயாரிக்கப்படும் விதம் சுற்றுச்சூழலுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்துகிறது.
பாமாயில் ஆப்பிரிக்க எண்ணெய் பனம்பழத்தில் இருந்து வருகிறது. இது நாம் பயன்படுத்தும் ஷாம்பு, சோப்பு போன்றவற்றில் இருந்து, பிஸ்கட் போன்ற தின்பண்டங்கள் வரை இடம்பெற்றுள்ளது.
எண்ணெய்ப் பனை மரங்களை வளர்ப்பது பூமிக்கு மிகவும் கேடு விளைவிப்பது என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வாதிடுகின்றனர்.
கடந்த 1990 மற்றும் 2008ஆம் ஆண்டுக்கு இடையில் உலகில் நடந்த காடழிப்பில் சுமார் 8% பாமாயில் உற்பத்திக்காக நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
எண்ணெய்ப் பனைகளை சாகுபடி செய்வதற்காக காடுகள் சட்டவிரோதமாக எரித்து அழிக்கப்படுகின்றன.
காடுகளை எரிப்பதால் தாவரங்களும் காட்டுயிர்களும் வாழும் இடங்கள் அழிக்கப்படுகின்றன, பல்லுயிர்ப் பெருக்கம் வெகுவாகக் குறைகிறது. ஒராங்குட்டான், காண்டாமிருகம், யானை, புலி போன்ற உயிரினங்கள் இதனால் பாதிக்கப்படுகின்றன.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்