
பட மூலாதாரம், Getty Images
40 ஆண்டுகளாக கியூபாவுக்காக உளவு பார்த்ததாகக் கூறி அமெரிக்க தூதரக அதிகாரி கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
கொலம்பிய நாட்டை பூர்வீகமாகக் கொண்ட 73 வயதான விக்டர் மானுவல் ரோச்சா, டொமினிகன் குடியரசு, அர்ஜென்டினா மற்றும் கியூபாவில் உள்ள அமெரிக்க தூதரகங்களில் பதவிகளை வகித்தவர். 1999 மற்றும் 2002 க்கு இடையில் பொலிவியாவுக்கான அமெரிக்க தூதராகவும் இருந்தார்.
மியாமியில் உள்ள நீதிமன்றத்தில் திங்களன்று அரசுத் தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டின்படி, ரோச்சா தனது உளவு நடவடிக்கையை 1981 இல் தொடங்கியிருக்கிறார்.
“ரோச்சா கியூபா குடியரசை ரகசியமாக ஆதரித்தது மட்டுமல்லாமல் அதன் ரகசிய சேவைகளின் ஏஜென்டாக பணியாற்றியதாக அமெரிக்க அரசுத்தரப்பு தெரிவிக்கிறது. இதன்மூலம் அமெரிக்காவிற்கு எதிரான உளவுத்துறை தகவல்களை சட்டவிரோதமாக சேகரிக்கும் பணியில் ரோச்சா ஈடுபட்டதாக அமெரிக்கா தெரிவிக்கிறது.
2022 மற்றும் 2023 க்கு இடையில் நடைபெற்ற பல கூட்டங்களில் ஒரு இரகசிய FBI முகவரிடம் ரோச்சா உண்மைகளை ஒப்புக்கொண்டதாக அரசுத் தரப்பு வாதிடுகிறது.

பட மூலாதாரம், Getty Images
“இந்த நடவடிக்கை ஒரு வெளிநாட்டு முகவரால் அமெரிக்க அரசாங்கத்திற்குள் மிக நீண்ட மற்றும் நீண்டகால ஊடுருவல்களில் ஒன்றை அம்பலப்படுத்துகிறது” என்று அமெரிக்க அட்டர்னி ஜெனரல் மெரிக் பி. கார்லேண்ட் எழுத்துப்பூர்வ அறிக்கையில் தெரிவித்தார்.
தனது அறிக்கையில், ரோச்சா அமெரிக்க அரசாங்கத்தில் பதவிகளை வகித்ததாகவும், நாட்டின் வெளியுறவுக் கொள்கையைப் பாதிக்கும் வகையிலான ரகசிய தகவல்களைப் பெறுவதற்கும் அவருக்கு அனுமதி இருந்ததாகவும் மெரிக் சுட்டிக்காட்டினார்.
அவரது இந்த உளவு செயல்பாடு 2012 வரை நீடித்தது. அப்போது அவர் கியூபா தொடர்பான பாதுகாப்பு விஷயங்களைக் கண்காணிக்கும் அமெரிக்க இராணுவத்தின் தெற்குக் துறையின் ஆலோசகராகப் பணிபுரிந்தார்.
அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை ரோச்சாவிடம் இருந்து எந்த அறிக்கையும் வரவில்லை.
ரோச்சா மீதான மூன்று குற்றச்சாட்டுகள் என்ன?
ரோச்சா மூன்று குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்: ஒன்று, சதி செய்ததற்காக, மற்றொன்று வெளிநாட்டு அரசாங்கத்தின் ஏஜென்டாக செயல்பட்டதற்காக மற்றும் மூன்றாவது தவறான தகவல்களை கொடுத்து பெறப்பட்ட பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதற்காக.
கியூபா பொதுப் புலனாய்வு இயக்குநரகத்தின் (DGI) பிரதிநிதியாகக் காட்டிக் கொண்ட ஒரு இரகசிய FBI முகவரிடம் கியூபாவுக்கான தனது “பத்தாண்டுகள்” பணியை ரோச்சா ஒப்புக்கொண்டதாக அரசுத்தரப்பின் ஆவணம் கூறுகிறது.
நேரில் சந்திப்பதற்கு முன், ரோச்சாவுக்கு வாட்ஸ்அப் மெசேஜிங் செயலியில் ஒரு செய்தி வந்தது. அதில், “ஹவானாவில் உள்ள உங்கள் நண்பர்களிடமிருந்து உங்களுக்கு ஒரு செய்தி உள்ளது. மிகவும் முக்கியமான விஷயம்.”
இந்த செய்திக்கான தனது பதிலில் “எனக்கு நீங்கள் சொல்வது புரியவில்லை, ஆனால் நீங்கள் எனக்கு தொடர்புகொள்ளுங்கள்” என்று ரோச்சா பதிலளித்ததாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மியாமியில் நிகழ்ந்து பதிவு செய்யப்பட்ட நேரில் நடந்த உரையாடல்களில், FBI முகவர், “ஒரு புதிய தகவல் தொடர்புத் திட்டத்தை நிறுவ” தன்னைத் தொடர்பு கொண்டதாக முகவர் சுட்டிக்காட்டியபோது, ரோச்சா அதற்கு சம்மதித்தாக கூறப்படுகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக அமெரிக்க அரசாங்கத்திற்குள் எப்படி ஊடுருவ முடிந்தது என்பதையும் ரோச்சா முகவரிடம் கூறியிருந்தார் என அரசு கூறுகிறது.
“எனக்கு அதை எப்படி செய்வது என்று நன்றாகத் தெரியும், கியூபாவின் உளவுத்துறை எனக்கு ஆதரவளித்தது… இது ஒரு நீண்ட செயல்முறை மற்றும் இது எளிதானது அல்ல,” என்று அவர் FBI முகவரிடம் கூறியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர் அமெரிக்காவை “எதிரி” என்றும், தன்னையும் கியூபா அரசாங்கத்தையும் குறிக்க “நாங்கள்” போன்ற சொற்களைப் பயன்படுத்தினார், மேலும் ஃபிடல் காஸ்ட்ரோவை “தளபதி” என்று அழைத்தார் எனவும் கூறப்படுகிறது.
கொலம்பியாவில் பிறந்த ரோச்சா, நியூயார்க்கில் குடியேறிய தொழிலாள வர்க்க குடும்பத்தில் வளர்ந்தார்.
யேல், ஹார்வர்ட் மற்றும் ஜார்ஜ் டவுன் ஆகிய புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் இருந்து பட்டங்களைப் பெற்றார்.
1978-இல் ரோச்சா ஒரு இயற்கையான அமெரிக்கரானார் மற்றும் 1981-இல் தூதரக அதிகாரியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்.
பல அமெரிக்க பாஸ்போர்ட்களை வைத்திருந்த ரோச்சா, டொமினிகன் பாஸ்போர்ட்டையும் வைத்திருந்தார். ஹோண்டுராஸ், டொமினிகன் குடியரசு மற்றும் மெக்சிகோ போன்ற இடங்களில் தூதரக பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.
1994-ஆம் ஆண்டில், கியூபா தொடர்பான பிரச்சினைகளுக்கு சிறப்புப் பொறுப்புடன், அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்க நாடுகளுக்கிடையேயான விவகாரங்களுக்கான துணை இயக்குநராக நியமிக்கப்பட்டார். கரீபியன் தீவில் உள்ள முக்கிய அமெரிக்க நலன்கள் பிரிவின் துணை இயக்குநராகவும் இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
பின்னர், 1999ல் பொலிவியாவுக்கான தூதராக நியமிக்கப்பட்டார்.
அங்கு அவர் 2002 ஜனாதிபதித் தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன்பு ஒரு சர்ச்சையில் சிக்கினார்.
ரோச்சா, பொலிவிய மக்களுக்கு ஒரு எச்சரிக்கையை விடுத்தார். இடதுசாரி தலைவரும் முன்னாள் கொக்கா தொழிலாளியுமான ஈவோ மோரல்ஸ் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால், மில்லியன் கணக்கான டாலர் உதவியை அமெரிக்கா நிறுத்தும் எனக் கூறினார்.
அவரது இந்தக் கருத்து பரவலாக பரப்பப்பட்டன மற்றும் பொலிவியாவில் அமெரிக்க தலையீடு இருப்பதாகவும் பார்க்கப்பட்டது.
முதல் முறையாக ஜனாதிபதியாக பதவியேற்க முயன்ற மொரேல்ஸ், தேர்தல் போட்டியில் தோல்வியடைந்தார், ஆனால் 2005 தேர்தல்களில் தேர்ந்தெடுக்கப்பட்டார், பொலிவியாவில் பூர்வீக வம்சாவளியைச் சேர்ந்த முதல் ஜனாதிபதியானார்.
மிக சமீபத்தில், ரோச்சா தனியார் துறையில் பல பதவிகளை வகித்தார். அவர் டொமினிகன் குடியரசில் ஒரு தங்க சுரங்கத்தின் தலைவராக இருந்தார் மற்றும் ஒரு செப்பு ஏற்றுமதி நிறுவனத்தின் சட்ட மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பணியாற்றினார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்