மாரிமுத்து: ஆதி குணசேகரனாக தமிழக வீடுகளில் நீங்கா இடம் பிடித்தது எப்படி?

மாரிமுத்து: ஆதி குணசேகரனாக தமிழக வீடுகளில் நீங்கா இடம் பிடித்தது எப்படி?

மாரிமுத்து: தமிழக ஆதி குணசேகரன்களின் திரைப் பிம்பம்

பட மூலாதாரம், MARIMUTHU

படக்குறிப்பு,

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை என்ற ஊரைச் சேர்ந்தவர் நடிகர் மாரிமுத்து.

தமிழ் சினிமாவிலும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வந்த மாரிமுத்து, ஆணாதிக்கமும் சாதிய மனப்பான்மையும் மிகுந்த தமிழ் ஆண்களின் உருவமாகத் தன்னை முன்னிறுத்திக்கொண்டார்.

தமிழ்த் திரைப்பட இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து, மாரடைப்பால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 57.

தேனி மாவட்டம் வருசநாடு பகுதியில் உள்ள பசுமலை என்ற ஊரைச் சேர்ந்த மாரிமுத்து, துணை நடிகராக வாழ்க்கையைத் தொடங்கி, இயக்குநராக வளர்ந்தவர். பிறகு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் மிகவும் பிரபலமானவர்.

வெள்ளிக்கிழமையன்று (செப்டம்பர் 8) காலையில், வளசரவாக்கத்தில் உள்ள ஒரு டப்பிங் ஸ்டுடியோவில் தொலைக்காட்சித் தொடர் ஒன்றுக்கான டப்பிங்கில் இருந்த மாரிமுத்துவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

உடனே அவர் வடபழனியில் உள்ள சூர்யா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அதற்குள்ளேயே அவருடைய உடல்நிலை மோசமடைந்து உயிரிழந்தார்.

அவரது உடல் வெள்ளிக்கிழமையன்று சிறிது நேரம் விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. பிறகு சொந்த ஊரான வருசநாட்டிற்குக் கொண்டு செல்லப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் மாரிமுத்து வாழ்க்கைப் பயணம்

பட மூலாதாரம், MARIMUTHU

படக்குறிப்பு,

குஷி, அன்பே ஆருயிரே, நியூ ஆகிய படங்களில் இணை இயக்குநராக மாரிமுத்து பணியாற்றியுள்ளார்.

மாரிமுத்துவுக்கு சினிமா ஆசையை விதைத்த திரைப்படம்

மாரிமுத்து பள்ளிப்படிப்பை முடித்த பிறகு சிவகாசியில் இருந்த ஒரு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார்.

அப்போது பாரதிராஜா இயக்கிய ‘முதல் மரியாதை’ திரைப்படம் வெளியானது. அந்தப் படத்தை இயக்கிய பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, பாடலாசிரியர் வைரமுத்து ஆகியோர் தேனி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.

அதன் காரணமாக, நாமும் ஏன் சினிமாவில் முயற்சி செய்யக்கூடாது என மாரிமுத்து கருதினார். முடிவில் 1990ஆம் ஆண்டுவாக்கில் சென்னைக்கு வந்தார்.

உதவி இயக்குநர் வாய்ப்பு

தலைநகருக்கு வந்தவுடன் சில உணவகங்களில் பணியாற்றினார். பிறகு வைரமுத்துவிடம் உதவியாளராக வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு, இயக்குநர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்தார். ராஜ்கிரண் இயக்கிய ‘அரண்மனைக் கிளி’, ‘எல்லாமே என் ராசாதான்’ ஆகிய படங்களில் பணிபுரிந்தார். இந்தத் தருணத்தில் வடிவேலுவுடன் மிகவும் நெருக்கமானார்.

பிறகு வசந்த் இயக்கிய ‘ஆசை’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகச் சேர்ந்தார். தொடர்ந்து ‘நேருக்கு நேர்’, ‘பூவெல்லாம் கேட்டுப் பார்’, ‘ரிதம்’ ஆகிய படங்களிலும் பணியாற்றினார். சீமான் இயக்கிய ‘பாஞ்சாலங்குறிச்சியிலும்’ உதவி இயக்குநராக இருந்தார்.

இதற்குப் பிறகு, இயக்குநர் வசந்திடம் இன்னொரு உதவி இயக்குநராக இருந்த எஸ்.ஜே. சூர்யா படங்களை இயக்க ஆரம்பித்தபோது, அவரிடம் இணை இயக்குநராகச் சேர்ந்தார்.

குஷி, அன்பே ஆருயிரே, நியூ ஆகிய படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மாரிமுத்து, மணிரத்னம், ராஜீவ் மேனன் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார்.

நடிகர் மாரிமுத்து

இயக்குநரான மாரிமுத்து

இதற்குப் பிறகு 2008ஆம் ஆண்டில் பிரசன்னா, உதயதாரா, வடிவேலு ஆகியோர் நடிக்க ‘கண்ணும் கண்ணும்’ என்ற படத்தை மாரிமுத்து இயக்கினார்.

இந்தப் படம் வர்த்தக ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் கதைக்காக பலரது கவனத்தைப் பெற்றது.

அதன் பிறகு 2014இல் வெளியான ‘புலி வால்’ என்ற படத்தை விமல், பிரசன்னா, ஓவியா ஆகியோர் நடிக்க இவர் இயக்கினார்.

இயக்குநராக வாய்ப்பு தேடிவந்த காலகட்டத்திலேயே பல படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார் மாரிமுத்து.

இதற்கிடையே எஸ்.ஜே. சூர்யா இயக்கிய ‘வாலி’ படத்தில் ஒரு மிகச் சிறிய வேடத்தில் நடித்தார். இதற்குப் பிறகு 2011இல் வெளியான ‘யுத்தம் செய்’ படத்தில் எசக்கிமுத்து என்ற காவல்துறை அதிகாரியின் பாத்திரத்தில் நடித்தார். இந்தப் படம் அவரது திரைவாழ்வில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக அமைந்தது.

இதற்குப் பிறகு, ‘ஆரோகணம்’, ‘நிமிர்ந்து நில்’, ‘கொம்பன்’, ‘மருது’, ‘குற்றமே தண்டனை’, ‘பைரவா’ உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

திரும்புமுனை திரைப்படம்

நடிகர் மாரிமுத்து

பட மூலாதாரம், X/@MARIMUTHU

படக்குறிப்பு,

கடந்த 2018இல் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்பு முனை திரைப்படமாக அமைந்தது.

கடந்த 2018இல் வெளிவந்த ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படம் இவருக்கு ஒரு திருப்பு முனை திரைப்படமாக அமைந்தது.

அந்தப் படத்தில், கதாநாயகி ஆனந்தியின் தந்தையாக நடித்த மாரிமுத்து, சாதி உணர்வுமிக்க தென்மாவட்ட ஆதிக்க சாதி ஆணை திரையில் கொண்டு வந்தார்.

அந்தப் படத்தில் கதாநாயகன் கதிரை அவர் நடத்தும் விதமும் பிறகு இறுதியில் மனம் மாறுவதும் ரசிகர்களிடம் பெரும் கவனிப்பைப் பெற்றன.

இதற்குப் பிறகு ஏகப்பட்ட படங்களில் நடித்துக் குவித்தார் மாரிமுத்து. சமீபத்தில் ரஜினிகாந்த் நடித்து வெளிவந்த ‘ஜெயிலர்’ படத்தில், ஏகப்பட்ட உச்ச நட்சத்திரங்கள் இருந்தாலும் கறுப்பு வேஷ்டி – கறுப்பு சட்டையுடன் வந்த மாரிமுத்துவின் பாத்திரம் நல்ல கவனத்தைப் பெற்றது.

தற்போது அவர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்கும் இந்தியன்-2 திரைப்படத்தில் நடித்து வந்தார்.

எதிர்நீச்சலில் வெகுஜன கவனம் பெற்றவர்

திரைப்படங்களில் நடித்து வந்ததன் மூலம் மாரிமுத்து பெரும் கவனத்தைப் பெற்றிருந்தார். ஆனாலும் தற்போது சன் டிவியில் வெளியாகிவரும் ‘எதிர்நீச்சல்’ தொடர்தான் அவரை எல்லா வீடுகளுக்கும் கொண்டு போய் சேர்த்தது.

கடந்த 2022ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் கடந்த சில மாதங்களாக டி.ஆர்.பியில் முன்னணியில் இருந்து வருகிறது. மறுநாள் காலையில் மறு ஒளிபரப்பு செய்யப்படும்போதும் இந்தத் தொடருக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.

இந்தத் தொடரில் கனிகா, ப்ரியதர்ஷினி, ஹரிப்ரியா, மதுமிதா ஆகியோரோடு ஆதி குணசேகரன் என்ற பாத்திரத்தில் மாரிமுத்து நடித்து வந்தார். இந்தத் தொடரில் அவரது பாத்திரமும் வசன உச்சரிப்புகளும் மிகப் பிரபலமாகிவிட்டன.

பிரபலமான ‘ஏய் இந்தாம்மா’ வசனம்

குறிப்பாக இந்தத் தொடரில் ஹரிப்ரியாவை பார்த்து, மாரிமுத்து சொல்லும் ‘ஏய் இந்தாம்மா’ என்ற வசனம் சமூக ஊடகங்களிலும் நேர்ப் பேச்சுகளிலும் ஒரு நீங்காத இடத்தைப் பிடித்துவிட்டது.

இந்தத் தொடர் நெடுக, பெண்களை ஒடுக்குபவராகவும் தான் செய்வதே சரி என்ற பிடிவாத குணம் கொண்ட மனிதராகவும் வரும் ஆதி குணசேகரனின் பாத்திரத்தைப் பார்ப்பதற்காகவே பலர் மீண்டும் தொலைக்காட்சியின் பக்கம் வந்தனர்.

நடிகர் மாரிமுத்து

பட மூலாதாரம், MARIMUTHU

இந்த ஆதி குணசேகரனின் பாத்திரம், பல விதங்களில் ரசிகர்களைக் கவர்ந்தது. தொலைக்காட்சித் தொடர்களில் சமீப காலமாக தகாத உறவுகள், மாமியார் – மருமகள் மோதல் என்பவையே மையப்புள்ளியாக இருந்த நிலையில், ஆணாதிக்கமும் திமிரும் உருவெடுத்ததைப் போல வந்த ஆதி குணசேகரன் ஒரு மாறுபட்ட பாத்திரமாகத் தெரிந்தார்.

தொடரின் நடுவில் அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டு, ஒரு கை இயங்காமல் போய்விட, அதை அவர் எதிர்கொள்ளும் காட்சிகள் மிகுந்த வரவேற்பைப் பெற்றன.

“அது ஒரு வித்தியாசமான பாத்திரமல்ல, எல்லா ஊர்களிலும் நகரங்களிலும் இதுபோன்ற ஆதி குணசேகரன்கள் இருக்கிறார்கள். மனைவியைத் துன்புறுத்துகிறார்கள். அதற்குத்தான் நான் உருவமளிக்கிறேன்,” என்று ஊடகப் பேட்டிகளில் சொல்லி வந்தார் மாரிமுத்து.

இந்த எதிர்நீச்சல் தொடரும் அதில் நடித்த மாரிமுத்துவின் தொழில் வாழ்க்கையும் உச்சத்தில் இருந்த நேரத்தில், காலம் குறுக்கிட்டுவிட்டது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *