IND vs AUS – ரிங்கு சிங்: மரண ஓவர் அதிரடி பற்றி தோனி கூறிய அறிவுரை என்ன?

IND vs AUS - ரிங்கு சிங்: மரண ஓவர் அதிரடி பற்றி தோனி கூறிய அறிவுரை என்ன?

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

18-ஆவது ஓவரில் இந்திய அணி 190 ரன்கள், 20வது ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் என்றால் நம்பமுடிகிறதா? ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்ததே காரணம். ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவுக்குப் பின் 9 பந்துகளில் 30 ரன்களுக்கு மேல் அடித்த 2வது பேட்டர் ரிங்கு சிங்தான்.

திருவனந்தபுரத்தில் நடந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதற்கு முக்கியக் காரணமாக இருந்தது ரிங்கு சிங்கின் அதிரடி ஆட்டம்தான்.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் குவித்தது. ஏறக்குறைய பந்துகளைவிட இருமடங்கு ரன்கள். 236 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் கடின இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு191 ரன்கள் சேர்த்து 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி முன்னிலை

இந்த வெற்றி மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது. இந்திய அணிக்கு வலுவான அடித்தளம் அமைத்துக் கொடுத்து 25 பந்துகளில்53 ரன்கள் சேர்த்தும், இரு அருமையான கேட்சுகளைப் பிடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி சேர்த்த 5-வது அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. இந்திய அணி வலுவான ஸ்கோர் சேர்ப்பதற்கு ஜெய்ஸ்வால்(53), கெய்க்வாட்(58), இஷான் கிஷன்(52) ஆகிய 3 பேரும் முக்கியக் காரணமாக அமைந்தனர். இதில் கெய்க்வாட் பொறுமையாக ஆடி கடைசி நேரத்தில்தான் அரைசதத்தை பதிவுசெய்தார்.

ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் விளாசல்

ஆனால், கடந்தகால சேவாக்கின் ஆட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் ஆடிவரும் ஜெய்ஸ்வால், தொடக்கத்திலேயே எதிரணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கி 25 பந்துகளில் அரைசதத்தை விளாசி வலுவான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார்.

அதேபோல இஷான் கிஷன் முதல் 22 ரன்களைச் சேர்க்க 26 பந்துகளை எடுத்துக்கொண்டாலும், அடுத்த 10 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்து அரைசதத்தை நிறைவு செய்தார். இந்திய அணி மட்டும் கடைசி 7 ஓவர்களில் மட்டும் 111 ரன்கள் சேர்த்தது. இந்த ஸ்கோர் உயர்வுக்கு ஃபினிஷிங் டச் கொடுத்தவர் ரிங்குசிங்தான்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஃபினிஷிங் டச் ரிங்கு சிங்

9 பந்துகளை மட்டும் சந்தித்த ரிங்கு 31 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 190ரன்கள்தான் சேர்த்திருந்தது. ஆனால், 2 ஓவர்களில் மட்டும் 45 ரன்களைச் சேர்த்தது என்றால் அதற்கு முக்கியக் காரணம் ரிங்குசிங்தான். அதிலும் அபாட் வீசிய 19-வது ஓவரில் மட்டும் 2 சிக்ஸர்கள், 3பவுண்டரிகள் என 25 ரன்களை ரிங்கு சிங் சேர்த்தார்.

நெருக்கடி தரும் பந்துவீச்சு

இந்திய பேட்டர்கள் மிகப்பெரிய ஸ்கோரை அமைத்துக்கொடுத்ததால்தான் பந்துவீச்சாளர்களால் நெருக்கடி இன்றி நேற்று பந்துவீச முயன்றது. பேட்டர்கள் அமைத்துக்கொடுத்த ரன்கள் பந்துவீச்சாளர்களுக்கு “குஷன்” போன்று அமைந்தது.

ரவி பிஷ்னோய், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணியின் சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர். அதிலும் நடுப்பகுதியில் அக்ஸர் படேல், ரவி பிஸ்னோய் அளித்த நெருக்கடி ஆஸ்திரேலிய பேட்டர்களை விக்கெட்டுகளை இழக்க வைத்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

மிரட்டிய டேவிட்-ஸ்டாய்னிஷ் கூட்டணி

இந்திய அணிக்கு நெருக்கடி அளித்தது என்பது ஸ்டாய்னிஸ்- டிம் டேவிட் கூட்டணி மட்டும்தான். இருவரும் 5-வது விக்கெட்டுக்கு 38 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றனர். ஆனால், பிஸ்னாய் ஓவரில் டேவிட் 37 ரன்களிலும், முகேஷ் குமார் ஓவரில் ஸ்டாய்னிஷ் 45 ரன்களில் ஆட்டமிழந்ததும் ஆஸ்திரேலிய அணியின் போராட்டமும் முடிவுக்கு வந்தது.

16 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள்

35 ரன்களுக்கு முதல் விக்கெட்டை இழந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 23 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின்புதான் ஸ்டாய்னிஷ்-டேவிட் கூட்டணி அணியைத் தூக்கி நிறுத்தி 81 ரன்கள் சேர்த்தனர். ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், விரைவாக 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா பறிகொடுத்தது. 139 ரன்கள் வரை 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த 16 ரன்களில் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

அக்ஸர், பிஸ்னோய், பிரசித் பந்துவீச்சு

திருவனந்தபுரம் க்ரீன்பீல்ட் ஆடுகளம் பேட்டர்களுக்கு சொர்க்கபுரி. இந்த ஆடுகளத்தில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீசியது உண்மையில் பாராட்டுக்குரியதுதான். பிரசித் கிருஷ்ணா தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், தனது 2வது ஸ்பெல்லில் கட்டுக்கோப்பாக துல்லியமான யார்கர்களாக வீசி டெய்லண்டர்கள் பேட்டர்களை வெளியேற்றினார்.

ஆஸ்திரேலிய பேட்டர்களின் சரிவுக்கு முக்கியக் காரணமாக இருந்தது ரவி பிஸ்னாய் லெக் ஸ்பின்தான். டிம் டேவிட், ஷார்ட், இங்கிலிஸ் ஆகிய 3 பேட்டர்களையும் விரைவாக வெளியேற்றி திருப்புமுனையை ஏற்படுத்தினார். நடுப்பகுதியில் அக்ஸர் படேல் வீசிய சில ஓவர்கள்தான் ஆஸ்திரேலிய அணிக்கு பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது.

கட்டுக்கோப்பாகப் பந்துவீசிய அக்ஸர் படேல் 4 ஓவர்களில் 25 ரன்கள் கொடுத்து மேக்ஸ்வெல் விக்கெட்டையும் வீழ்த்தி முக்கியப் பங்காற்றினார். பேட்டர்களுக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் அக்ஸர் படேல் மட்டும்தான் மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசியுள்ளார்.

மற்றவகையில் இந்திய பந்துவீச்சாளர்கள் அனைவருமே ஓவருக்கு 10 ரன்களுக்கு மேல்தான் வழங்கினர். வேகப்பந்துவீச்சாளர்கள் கடைசி டெத் ஓவர்களில் மட்டுமே ஓரளவுக்கு சிறப்பாகப் பந்துவீசினர், தொடக்கத்திலேயே இந்த ஒழுக்கத்தை வெளிப்படுத்தி இருந்தால், ஆஸ்திரேலிய அணி இன்னும் குறைந்த ரன்களில் சுருண்டிருக்கும்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ஏமாற்றிய காலநிலை

இரவு நேரத்தில் பனிப்பொழிவு இருக்கும் என்ற நம்பிக்கையில்தான் ஆஸ்திரேலிய கேப்டன் மேத்யூ வேட் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தார். ஆனால், நேற்று பனிப்பொழிவும் பெரிதாக இல்லை, காற்றில் ஈரப்பதமும் குறைவாக இருந்தது. இதனால் ஆஸ்திரேலிய கேப்டன் நினைத்ததற்கு மாறாக அனைத்தும் நடந்து சுழற்பந்துவீச்சுக்கு நன்றாக மைதானம் ஒத்துழைத்து, விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது. இதனால் வெற்றிக்குத் தேவைப்படும் ரன்ரேட் 12க்கும் மேல் அதிகரித்ததால் நெருக்கடி ஏற்பட்டு விக்கெட்டுகளை இழந்தது.

ஒரு கட்டத்தில் 31 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்த ஆஸ்திரேலிய அணி அடுத்த 27 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது, தேவைப்படும் ரன்ரேட் அதிகரித்தது முக்கியக் காரணமாகும். ரன்களை விரைவாகச் சேர்க்க வேண்டும் என்ற நெருக்கடியில் பவர்ப்ளே ஓவருக்குள் 3 விக்கெட்டுகளை ஆஸ்திரேலிய அணி இழந்தது தோல்விக்கு முக்கியக் காரணமாகும்.

தோனிக்கு அடுத்தாற்போல் ஃபினிஷர்

தோனிக்கு அடுத்தாற்போல் இந்திய அணிக்கு ஒரு “ கிரேட் ஃபினிஷர்” உருவாகி வருகிறார் என்றால் அது ரிங்கு சிங்தான். முதல் டி20 போட்டியில் கடைசிப் பந்தில் ஒரு ரன் வெற்றிக்குத் தேவை என்றபோது, சீன் அபாட் ஓவரில் லாங் ஆன் திசையில் சிக்ஸர் விளாசி ரிங்கு சிங் அணியை வெற்றி பெறச் செய்தார்.

அதன்பின அது நோபாலாக அறிவிக்கப்பட்டதால், சிக்ஸர் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. இது குறித்து அர்ஷ்தீப் சிங் , ரிங்கு சிங்கிடம் ஓய்வறைக்குச் சென்றபின் நோபால் தெரிவித்துள்ளார். ஆனாலும் அது குறித்து கவலைப்படாத ரிங்கு சிங், இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டதே அதுபோதும் என்று ஓய்வறையில் தெரிவித்ததாக தகவல்கள் வெளியானது.அந்த போட்டியில் 14 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்து ரிங்கு சிங் கிரேட் ஃபினிஷராக ஜொலித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

344 ஸ்ட்ரைக் ரேட்டில் பயணித்த ரிங்கு

திருவனந்தபுரத்தில் நடந்த ஆட்டத்திலும் 9 பந்துகளில் 31 ரன்கள் விளாசி இந்திய அணி இமாலய ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக அமைந்தார் ரிங்கு. அதிலும் 19-வது ஓவரில் ரிங்கு சிங் அடித்த 25 ரன்களும், கடைசி ஓவரில் வெளுத்த ரன்களும் கிரேட் ஃபினிஷிங் டச்சுக்கு உதாரணமாகும். ரிங்கு சிங்கின் நேற்றைய ஸ்ட்ரைக் 344 ஆகும்.

ஹர்திக்கிற்கு அடுத்து ரிங்கு

ஐசிசி முழுநேர உறுப்பு நாடுகளுக்கு எதிராக 9 பந்துகளில் ஹர்திக் பாண்டியா சேர்த்த 32 ரன்கள்தான் அதிகபட்சம். அதற்கு அடுத்தார்போல் தற்போது ரிங்கு சிங் 31 ரன்களைக் குவித்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில்தான் ரிங்கு சிங் இந்திய டி20 அணியில் அறிமுகமாகினார்.

இதுவரை 4 போட்டிகளில் மட்டுமே ஆடிய ரிங்கு சிங் 128 ரன்கள் குவித்து, 216 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார், ஒருமுறை மட்டுமே அவுட் ஆகியுள்ளார். இந்த ரன்களை ரிங்கு சிங் சேர்த்தபோது, அவர் 5முதல் 7-வது பேட்டராக களமிறங்கி சேர்த்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு ஐபிஎல் சீசனில் ரிங்கு சிங்கின் ஆட்டம் பெரிதாக பார்க்கப்பட்டு, அனைவராலும் கவனிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சயத் முஸ்தாக் அலி கோப்பையில் லக்னௌ அணிக்காக விளையாடி, 2வது அதிகபட்சமாக 256 ரன்களைச் சேர்த்ததும் ரிங்கு சிங்தான், இதலும் ரிங்கு சிங்கின் ஸ்ட்ரைக் ரேட் 170 ஆக இருந்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

தோனியின் அறிவுரை

தோனியின் அறிவுரையை தொடர்ந்து பின்பற்றுவதால்தான் என்னால் இப்படி சிறப்பாக ஆட முடிகிறது என்று ரிங்கு சிங் பிசிசிஐ சேனலுக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் கூறுகையில் “ஒருமுறை மகிபாயிடம்(தோனி) சென்று கடைசி சில ஓவர்களில் மட்டும் எவ்வாறு அதிரடியாக பேட் செய்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு மகிபாய் என்னிடம் “ கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக, மனதை ஒருமுகப்படுத்தி இருக்க வேண்டும், பதற்றப்படக்கூடாது. பெரும்பாலும் ஸ்ட்ரைக் ஷாட்களாகவே அடிக்க முயல வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார். இன்றுவரை மகிபாய் கூறிஅறிவுரைப்படியே விளையாடுகிறேன். கடைசி ஓவர்களில் பேட் செய்யும்போது அமைதியாக இருப்பேன், எந்த உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாமல் இருக்க முயல்வேன், இது எனக்கு பெரிதாக உதவியது” எனத் தெரிவித்தார்.

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட்

பட மூலாதாரம், Getty Images

ரிங்குவை புகழ்ந்த சூர்யகுமார்

ரிங்கு சிங் குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவும் புகழ்ந்துள்ளார். வெற்றிக்குப்பின் சூர்யகுமார் கூறுகையில் “ விசாகப்பட்டிணத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் ரிங்கு சிங் பேட் செய்ய களமிறங்கியபோது, இந்திய அணி வெற்றிக்கு 22 பந்துகளில் 44 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் ரிங்கு ஆடியவிதம், அற்புதமானது, கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிவிட்டார். அதுபோலத்தான் 2வது டி20 ஆட்டத்திலும் கடைசி இரு ஓவர்களில் ஆட்டத்தின் போக்கை திருப்பிவிட்டார் ரிங்குசிங். இவரின் பினிஷிங் யாரையோ எனக்கு நினைவூட்டுகிறது” எனத் தெரிவித்தார்.

டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்களே இருக்கும்நிலையில் ஹர்திக் பாண்டியா “ஆங்கர் ரோல்” எடுத்தாலும், இந்திய அணிக்கு மிகச்சிறந்த ஃபினிஷர் தேவை. அந்தவகையில் தோனிக்கு அடுத்தார்போல் “ கிரேட் ஃபினிஷராக” ரிங்கு சிங் உருவாகலாம்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *