
விஸ்வா மீது பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விஸ்வா என்பவர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலைமறைவாக இருந்த விஸ்வாவை பிடிக்கச் சென்ற போது, போலீசாரை அவர் தாக்கி விட்டு தப்பிச்செல்ல முயன்றதாகவும், அப்போது போலீசார் அவரை சுட்டுக் கொன்றதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் தன்னை போலீசார் என்கவுன்ட்டர் செய்ய திட்டமிட்டிருப்பதாக கூடுதல் தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கு விஸ்வா கடந்த மாதமே எழுதிய கடிதம் வெளியாகியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிளாய் பகுதியைச் சேர்ந்தவர் குள்ள விஸ்வா (எ) விஸ்வநாதன். இவருக்கு வயது 34. இவர் மீது ஸ்ரீபெரும்புதூர், மணிமங்களம், ஒரகடம், புழல், எஸ்.வி.சத்திரம், மணவாள நகர், ஓசூர் என பல்வேறு காவல் நிலையங்களில் 24 வழக்குள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
விஸ்வா கடந்த ஆண்டு 25 கிலோ கஞ்சா வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிறையிலிருந்து பிணையில் வெளிவந்து ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கையெழுத்திடாமல் தலைமறைவாக இருந்து வந்ததாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஸ்வாவை தேடி சென்றுள்ளனர்
என்கவுண்டரில் விஸ்வா சுட்டுக்கொலை
காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திடாமல் தலைமைறைவாக இருந்ததால் போலீசார் பிடிவாரண்டுடன் விஸ்வாவை தேடி சென்றுள்ளனர்.
இந்த நிலையில், விஸ்வா, சுங்குவார்சத்திரம் அருகே பதுங்கியிருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததன் அடிப்படையில், அவரை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் அழைத்து வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அப்போது சோகண்டி அருகே வந்த போது போலீஸாரை தாக்கிவிட்டு விஸ்வா தப்பி ஓட முயன்றதாகவும், அப்போது தற்காப்புக்காக அவரை போலீசார் சுட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
உதவி ஆய்வாளர் முரளியை தாக்கிவிட்டு விஸ்வா தப்பி ஓட முயன்றார் என்றும் காவலர்கள் வாசு, ராஜேஷ் ஆகியோரை அரிவாளால் வெட்டி விட்டு விஸ்வா தப்ப முயன்றதாகவும், தற்காப்புக்காக அவரை காவல் உதவி ஆய்வாளர் முரளி சுட்டுக் கொன்றதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விஸ்வாவின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. காயமடைந்த காவலர்கள் இருவரும் காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விஸ்வா தாக்கியதில் காயமடைந்ததாக காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்களை நலம் விசாரித்த எ.டி.ஜி.பி அருண்
என்கவுண்டர் ஏன்? – போலீஸ் விளக்கம்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள காவலர்கள் இருவரையும் எ.டி.ஜி.பி அருண் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த பிரபல ரௌடி விஸ்வா மீது 25 வழக்குகள் மேல் உள்ளதாகவும், 5 கொலை வழக்குகள் உள்ளதாக கூறினார்.
வெடிகுண்டு வீச்சு வழக்கு, கஞ்சா வழக்குகள் உள்ளதாகவும், குற்ற வழக்குகளில் தேடி பிடிக்க முயன்ற போது காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தியதாகவும் தெரிவித்தார். காவலர்களை பாதுகாக்கவும், தற்காப்புக்காகவும் துப்பாக்கி சூடு நடத்தியதில் விஸ்வா உயிரிழந்ததாக விளக்கம் அளித்தார்.
மேலும், ஸ்ரீபெரும்பத்தூர், ஒரகடம், சுங்குவார் சத்திரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் ஸ்கிராப் டீல் எடுப்பதில் கட்டப்பஞ்சாயத்து நடப்பதாக கூறியுள்ள அவர், இதில் ரௌடியிசம் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

விஸ்வா எழுதியிருந்த கடிதம்
என்கவுண்டரை முன்கூட்டியே கணித்த விஸ்வா
இதனிடையே, தன் மீது என்கவுண்டர் நடந்தால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் பரந்தாமன், உதவி ஆய்வாளர் தயாளன் தான் காரணம் என்று என்கவுண்டர் செய்யப்பட்ட ரௌடி விஷ்வா உள்துறை கூடுதல் தலைமை செயலாளருக்கு அனுப்பிய கடிதம் வெளியாகி இருக்கிறது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 28 ஆம் தேதி உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு விஸ்வா கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.
அந்த கடிதத்தில், பிணையில் வெளிவந்தபின் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் தான் கையெழுத்திட சென்றபோது கையெழுத்து வாங்காமல் தன்னை சுட்டு விடலாமா என எஸ்.ஐ தயாளன் ஆய்வாளரிடம் பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.

காவல் நிலையத்தில் விஸ்வா நிற்கும் வீடியோவில் ஒரு காட்சி.
தன்னை ஆய்வாளர் என்கவுண்டரில் சுட திட்டமிட்டுள்ளதாக அஞ்சுவதாக குறிப்பிட்டிருந்த விஸ்வா, தன் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்ஐ தயாளன் உள்ளிட்ட காவல்துறையினரே பொறுப்பு என்றும் கடிதத்தில் கூறியுள்ளார்.
தன்னை போலி என்கவுன்ட்டரில் சுட்டு கொலை செய்ய ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் பரந்தாமன் மற்றும் எஸ்.ஐ தயாளன் ஆகியோர் திட்டமிட்டுள்ளது தொடர்பாக தக்க விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
விஸ்வா காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் இந்த கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஆனால், இந்த கடிதம் கிடைத்ததாக காவல் துறை அதிகாரிகளும், தலைமைச் செயலக அதிகாரிகளும் உறுதிப்படுத்தவில்லை.

பட மூலாதாரம், Getty Images
ரெளடி விஸ்வா திருந்தி வாழ ஆசைப்பட்டதாகக் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி கூறினார்.
திருந்தி வாழ ஆசைப்பட்டாரா விஸ்வா ?
விஸ்வா சனிக்கிழமை (செப்டம்பர் 16) மதியம் மூன்று மணியளவில் கைது செய்யப்பட்டதாகவும், அப்போது அவரை வலுக்கட்டாயமாக போலீசார் அழைத்துச் சென்றதாகவும் அவர் மனைவி மகா பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
“நானும் அவரும் திருத்தணி அருகே இருந்தபோது தான் போலீசார் அவரை கைது செய்தனர். அப்போது, எதற்காக கைது செய்கிறீர்கள், என்ன வழக்கு எனக்கேட்டபோது அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. நான் வீடியோ எடுக்க முயன்றபோதும் அவர்கள் என்னை தடுத்தனர். ஆனால், அவர்கள் வந்து சென்ற வாகன எண் வரை எனக்கு அனைத்தும் தெரியும்,” என்றார் விஸ்வாவின் மனைவி மகா.
இதனை “போலி என்கவுண்டர்” எனக்கூறிய விஸ்வாவின் தந்தை அன்பழகன், தன் மகன் மீது போலீசார் தொடர்ந்த பொய் வழக்கு பதிவு செய்வதாக கூறினார். “அவன் மீது 16 வழக்குகள்தான் உள்ளன. ஆனால், அவன் சிறையில் இருந்தபோது நடந்த கொலை வழக்குகள் எல்லாம் அவன் மீது போட்டுள்ளனர். என் மகன் இறப்புக்கு நியாயம் வேண்டும்,” என்றார் அன்பழகன்.
இதற்கிடையில், ரெளடி விஸ்வா திருந்தி வாழ ஆசைப்பட்டதாகக் கூறுகிறார்,உயர்நீதிமன்ற வழக்கறிஞர் புகழேந்தி.
பிபிசியிடம் பேசிய அவர்,“விஸ்வா, கடந்த வியாழன் அன்று வந்து என்னை சந்தித்துப்பேசினார். தற்போது தான் திருமணம் செய்துள்ளதாகவும், தான் திருந்தி வாழ ஆசைப்படுவதாகவும் கூறினார்.
அவர் சிறையில் இருந்தபோது அவர் மீது பதியப்பட்டிருந்த வழக்குகளில் பிணை வேண்டி உயர்நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், வழக்கை முடித்தபின், அவன் விரும்பியபடி வாழலாம் எனக்கூறியிருந்தேன்.” என்றார்.
மேலும், விஸ்வா கைது செய்யப்பட்ட உடனேயே, இதுவரை நடந்த சம்பவங்களை விவரித்து காஞ்சிபுரம் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு மின் அஞ்சல் அனுப்பியதாகக் கூறினார்.
விஸ்வாவின் குடும்பத்தினர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரிடம் கேட்டபோது, அவர் அதனை மறுத்தார். “அவர்கள் கூறும்படி எதுவும் நடக்கவில்லை. எல்லாம் சட்டத்திற்கு உட்பட்டு தான் நடந்தது,” என்றார்.
இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய காவல்துறை கூடுதல் இயக்குநர் (சட்டம் & ஒழுங்கு) அருண், விஸ்வாவின் குடும்பத்தினர் கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார்.
“அவர் ஒரு ஏ பிளஸ் பிரிவில் உள்ள ரெளடி. அவர் போலீசாரை தாக்கியதால்தான் தற்காப்புக்காக போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அவர் தாக்கியதில் காவலர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அதனால், இதில் எந்த விதிமீறலும் இல்லை,” என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்