இஸ்ரேல் – காஸா போர்: மத்திய கிழக்கில் மேலும் பல போர்களுக்கு வித்திடும் ஆபத்து இருப்பது ஏன்?

இஸ்ரேல் - காஸா போர்: மத்திய கிழக்கில் மேலும் பல போர்களுக்கு வித்திடும் ஆபத்து இருப்பது ஏன்?

இஸ்ரேல்-காஸா போர் எப்படி வித்தியாசமானது?

பட மூலாதாரம், Getty Images

இந்த காஸா போர் மற்ற எல்லா போர்களையும் போலவே இருந்திருந்தால், போர் நிறுத்தம் இப்போது நடைமுறையில் இருந்திருக்கும்.

இறந்தவர்கள் புதைக்கப்பட்டிருப்பார்கள் மற்றும் இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையுடன் மறு கட்டமைப்புக்காக காஸாவுக்குள் எவ்வளவு சிமென்ட் கொண்டு வர முடியும் என்று வாதிட்டுக் கொண்டிருக்கும்.

ஆனால் இந்தப் போர் அப்படியல்ல. முதலில் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய கொடூர தாக்குதலில் உயிரிழந்த மக்களில் பெரும்பாலானோர் இஸ்ரேலிய குடிமக்கள்.

அதைத் தொடர்ந்து, இஸ்ரேலின் “வலிமையான பழிவாங்குதல்” என்று அதன் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறிய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பாலத்தீனிய குடிமக்கள். ஆனால், இந்தப் போர் மற்ற போர்களில் இருந்து வேறுபட்டது எனக் கூறுவதற்கு இந்தக் கொடூர கொலைகள் காரணமல்ல.

மத்திய கிழக்கைப் பிளவுபடுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வரும் நேரத்தில் இது நிகழ்வதால், இந்தப் போர் மற்றவற்றிலிருந்து வேறுபட்டது. குறைந்தது இருபது ஆண்டுகளாக, இப்பிராந்தியத்தின் பிளவுபட்ட புவிசார் அரசியல் நிலப்பரப்பில் இரானின் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும், அமெரிக்காவின் நண்பர்கள் மற்றும் நட்பு நாடுகளுக்கும் இடையே மிகக் கடுமையான பிளவு ஏற்பட்டுள்ளது.

இரான் வலைப்பின்னலின் மையமானது, லெபனானில் உள்ள ஹெஸ்புலா, சிரியாவில் அசாத் ஆட்சி, யேமனில் உள்ள ஹூதிகள் மற்றும் இரானால் ஆயுதம் வழங்கப்பட்டு மற்றும் பயிற்சியளிக்கப்பட்ட பல்வேறு இராக்கிய போராளிகளால் ஆனது. ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாத் போன்ற அமைப்புகளுக்கும் இரானியர்கள் ஆதரவு அளித்துள்ளனர். சில நேரங்களில் “எதிர்ப்பின் அச்சு” என்று அழைக்கப்படுவது இதுவே.

இரான், ரஷ்யா மற்றும் சீனாவுடன் நெருங்கி வருகிறது. யுக்ரேனில் ரஷ்யாவின் போர் முயற்சியில் இரான் குறிப்பிடத்தக்க சக்தியாக மாறியுள்ளது. சீனா இரானின் கச்சா எண்ணெய்யை அதிக அளவில் வாங்குகிறது.

காஸாவில் போர் நீண்டுகொண்டே செல்கிறது. பாலத்தீனிய குடிமக்களை இஸ்ரேல் கொன்று பல்லாயிரக்கணக்கான வீடுகளை அழித்து வருகிறது. இதனால், அந்த இரு முகாம்களில் இருப்பவர்களும் இந்த மோதலில் தலையிடும் அபாயம் உள்ளது.

இஸ்ரேலுக்கு தொடரும் அமெரிக்காவின் வலுவான ஆதரவு

இஸ்ரேல்-காஸா போர் எப்படி வித்தியாசமானது?

பட மூலாதாரம், Reuters

இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லை மெதுவாகவும் சீராகவும் சூடுபிடித்து வருகிறது. இஸ்ரேலோ அல்லது ஹெஸ்புலாவோ முழு வீச்சிலான போரை விரும்பவில்லை. ஆனால் அவர்கள் இப்போதே கடுமையாக மோதிக் கொண்டிருப்பதால் நிலைமை அவர்கள் கட்டுப்பாட்டில் இருக்காது.

யேமனில் உள்ள ஹூதிகள் இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை ஏவி வருகின்றனர். அவை அனைத்தும், இதுவரை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அல்லது செங்கடலில் நிலைநிறுத்தப்பட்டிருக்கும் அமெரிக்க கடற்படை போர்க் கப்பல்கள் மூலம் தவிர்க்கப்பட்டுள்ளன.

இராக்கில், இரானால் ஆதரிக்கப்படும் போராளிகள் அமெரிக்க தளங்களைத் தாக்கியுள்ளனர். சிரியாவில் உள்ள சில தளங்களில் அமெரிக்கா பதிலடி கொடுத்தது. மீண்டும், அனைத்து தரப்பினரும் மோதலைக் கட்டுப்படுத்த முயல்கின்றனர், ஆனால் ராணுவ நடவடிக்கையின் தீவிரத்தைக் கட்டுப்படுத்துவது எப்போதும் கடினம்.

அமெரிக்காவின் பக்கத்தில் இஸ்ரேல், வளைகுடா எண்ணெய் நாடுகள், ஜோர்டான் மற்றும் எகிப்து உள்ளன. பல பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்படுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் பகிரங்கமாகக் கூறியுள்ளார்.

பல பாலத்தீன குடிமக்களை இஸ்ரேல் கொல்வது குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு தர்மசங்கடமாக இருப்பது தெளிவாகத் தெரிந்தாலும், இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து வலுவான ஆதரவை அளித்து வருகிறது.

அல் நக்பா பேரழிவு

இஸ்ரேல்-காஸா போர் எப்படி வித்தியாசமானது?

பட மூலாதாரம், WAEL HAMZEH/EPA-EFE/REX/SHUTTERSTOCK

அமெரிக்காவின் அரேபிய நட்பு நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் செய்வதைக் கண்டித்து போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. லட்சக்கணக்கான பாலத்தீனியர்கள் வடக்கு காஸாவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி, தெற்கு நோக்கி சாலைகளில் நடந்து செல்லும் காட்சி, 1948இல் நடந்த சுதந்திரப் போரில் அரேபியர்களுக்கு எதிரான இஸ்ரேல் வெற்றியின் பயங்கரமான நினைவுகளை கண் முன்னே நிறுத்துகிறது.

ஏழு லட்சத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் இஸ்ரேலியர்களால் துப்பாக்கி முனையில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதுவே பாலத்தீனியர்களால் அல் நக்பா – பேரழிவு என்று குறிப்பிடப்படுகிறது. 1948 அகதிகளின் சந்ததியினரே காஸா பகுதியின் பெரும்பாலான இன்றைய மக்கள் ஆவர்.

பாலத்தீனியர்கள் மீது மற்றொரு நக்பாவை நடத்துவது பற்றி பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கத்தை ஆதரிக்கும் தீவிர யூத தேசியவாதிகள் சிலரின் ஆபத்தான பேச்சு அமெரிக்காவின் முகாமில் உள்ள அரபு நாடுகளை, குறிப்பாக ஜோர்டான் மற்றும் எகிப்தை அச்சுறுத்துகிறது.

நெதன்யாகுவின் அரசாங்கத்தில் உள்ள ஒரு அமைச்சர், ஹமாஸை சமாளிக்க காஸா மீது அணுகுண்டு வீசுவது பற்றிப் பேசியிருந்தார். அவர் கண்டிக்கப்பட்டார், ஆனால் பணிநீக்கம் செய்யப்படவில்லை.

போரின் பின்விளைவுகளை எப்படிக் கையாள்வது?

இஸ்ரேல்-காஸா போர் எப்படி வித்தியாசமானது?

பட மூலாதாரம், Reuters

இவை அனைத்தும் வெறித்தனமான சிறு குழுவினரின் ஆவேசங்கள் என்று நிராகரிக்கப்படலாம். ஆனால் ஜோர்டான் மற்றும் எகிப்தில் இது தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இஸ்ரேலிடம் நிறைய அறிவிக்கப்படாத ஆயுதங்கள் உள்ளன. இருப்பினும் கவலை அதுவல்ல. ஆயிரக்கணக்கான பாலத்தீனியர்கள் தங்கள் எல்லைகளுக்குள் வலுகட்டாயமாக நுழைவார்கள் என்பதுதான்.

காஸாவில் நடக்கும் போரைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் உறுதியான நட்பு நாடுகளைச் சேர்ந்த மூத்த மேற்கத்திய தூதர்கள் பிபிசியிடம், போரை முடிப்பதும் அதன் பின்விளைவுகளைக் கையாள்வதும் “கடினமானதாக, குழப்பமானதாக இருக்கும்” என்று கூறினர்.

“பாலத்தீனியர்களுக்கான அரசியல் தளத்தை மீண்டும் உருவாக்குவதே ஒரே வழி” என்று ஒருவர் கூறினார். அவர், இஸ்ரேலுடன் சேர்த்து சுதந்திரமான பாலத்தீனமும் இருப்பதைக் குறிப்பிடுகிறார். ஒரு கோஷமாக மட்டுமே நிலைத்து நிற்கும் ஒரு தோல்வியுற்ற யோசனையான ‘இரு-நாடு தீர்வு’ எனக் குறிப்பிடப்படுவது இதுவே.

இஸ்ரேல் மற்றும் அரேபியர்களுக்கு இடையே இப்படி ஒரு தீர்வு புத்துயிர் பெறுவது ஒரு லட்சிய திட்டம், மேலும் இதுவொரு சிறந்த யோசனையாக இருக்கலாம். ஆனால் வலி, எச்சரிக்கை மற்றும் வெறுப்பு ஆகியவற்றின் தற்போதைய சூழலில் அது சாத்தியமாவது மிகவும் கடினமாக இருக்கும்.

பாலத்தீனியர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் தற்போதைய தலைமைகளின் கீழ் இது நடக்காது.

காஸாவில் போர் முடிந்த பிறகு என்ன திட்டம் என்பதை பிரதமர் நெதன்யாகு இன்னும் தெரிவிக்கவில்லை. பாலத்தீனிய அதிகாரத்தின் தலைவர் மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான அரசாங்கத்தை நிறுவும் அமெரிக்காவின் யோசனையை அவர் நிராகரித்தார்.

எதிர்காலத்தில் பல போர்கள் ஏற்படும் அபாயம்

இஸ்ரேல்-காஸா போர் எப்படி வித்தியாசமானது?

பட மூலாதாரம், Getty Images

பெஞ்சமின் நெதன்யாகு தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் எதிர்த்த இரு நாடு தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளே அமெரிக்கத் திட்டத்தின் இரண்டாம் பகுதியாகும்.

நெதன்யாகு பாலத்தீனியர்களின் சுதந்திரத்திற்கு எதிரானவர் மட்டுமல்ல. ஜோர்டான் நதிக்கும் மத்திய தரைக்கடலுக்கும் இடையே உள்ள முழுப் பகுதியும் கடவுளால் யூத மக்களுக்கு வழங்கப்பட்டதாகவும், அவை அனைத்தும் இஸ்ரேலின் எல்லைக்குள் இருக்க வேண்டும் என்றும் நம்பும் மிகத் தீவிரமான யூதவாதிகளின் ஆதரவை நம்பியே அவர் பிரதமராக நீடிக்க முடியும்.

பல இஸ்ரேலியர்கள் அவர் வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். அக்டோபர் 7 தாக்குதல்கள் நடக்க அனுமதித்த பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தோல்விகளுக்கு அவரைக் குற்றம் சாட்டுகின்றனர்.

பாலத்தீனிய அதிபர் அப்பாஸ் தனது 80களின் பிற்பகுதியில் இருக்கிறார். மேலும் அவர் 2005 முதல் தேர்தலைச் சந்திக்கவில்லை. வாக்காளர்களின் பார்வையில் மதிப்பிழந்தவர். பாலத்தீனிய அதிகாரம் மேற்குக் கரையில் பாதுகாப்பு விவகாரங்களில் இஸ்ரேலுடன் ஒத்துழைக்கிறது. ஆனால் ஆயுதமேந்திய யூத குடியேறிகளிடம் இருந்து அதன் சொந்த மக்களைப் பாதுகாக்க முடியவில்லை.

ஆனால், இந்தப் பயங்கரமான போரின் முடிவில் இஸ்ரேலியர்கள், பாலத்தீனியர்கள் மற்றும் அவர்களது சக்தி வாய்ந்த நட்பு நாடுகள் சமாதானம் மற்றும் அமைதியைக் கொண்டு வர முயற்சி செய்யவேண்டும். இந்தப் போர் அவர்களை அதற்கு கட்டாயப்படுத்தவில்லை என்றால், எதிர்காலம் மேன்மேலும் பல போர்கள் நிறைந்ததாக மட்டுமே இருக்கும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *