இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? கள நிலவரம் என்ன?

இஸ்ரேல் மீது இரான் போர் தொடுத்தால் மூன்றாம் உலகப்போர் வெடிக்குமா? கள நிலவரம் என்ன?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

அக்டோபர் 7-ம் தேதியன்று ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய தாக்குதல், பின் இஸ்ரேலின் பதிலடித் தாக்குதலைத் தொடரந்து, அடுத்தக்கட்டமாக தற்போது காஸாப் பகுதியில் இஸ்ரேலின் படையெடுப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான மோதல், அதன் தாக்கம் மற்றும் அதன் முடிவு உள்ளிட்டவை குறித்து நூற்றக்கணக்கான கேள்விகளை பிபிசி பெற்றுள்ளது. மற்ற நாடுகளும் இந்த மோதலில் ஈடுபடுமா என பலர் கேட்டுள்ளார்கள்.

இந்தப் பகுதியில் இருந்து செய்தி சேகரித்துக் கொண்டிருக்கும் பிபிசியின் செய்தியாளர்கள் பலர், அடிக்கடி கேட்கப்படும் சில கேள்விகளுக்கு பதிலளித்துள்ளனர்.

இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், EPA-EFE/REX/SHUTTERSTOCK

இந்த மோதலில் இஸ்ரேலுக்கு எதிராக இரான் நேரடியாக போரில் இறங்கினால், அது அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் நேரடியாகப் போரில் சேரத் தூண்டுமா? இது மூன்றாம் உலகப் போருக்கு வழிவகுக்குமா? என பிரிட்டன் ஸ்கெல்மர்ஸ்டேலைச் சேர்ந்த கிரேக் ஜான்சன் கேட்டுள்ளார்.

அதற்கு, தெற்கு இஸ்ரேலில் இருந்து செய்தி சேகரிக்கும் எங்களது சர்வதேச செய்தி ஆசிரியர் ஜெர்மி போவன் பதிலளித்துள்ளார்.

அவர், “இரான் அல்லது அதன் லெபனான் கூட்டாளியான ஹிஸ்புல்லா தலையிடுவதற்கான சாத்தியக்கூறு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம் கேட்டபோது, ஜோ பைடன் “வேண்டாம்” என பதிலளித்தார். (அவர்கள் தலையிட வேண்டாம் என்ற பொருள்படும்படி ஆங்கிலத்தில் பதிலளித்திருந்தார்)

அமெரிக்கா தங்களது இரண்டு விமானம் தாங்கி போர்க்கப்பல்களை கிழக்கு மத்திய தரைக் கடலில் நிறுத்தியுள்ளது. அதன் மூலம் இரான் இதில் தலையிட வேணடாம் என்ற உறுதியான செய்தியை அமெரிக்கா அனுப்பியுள்ளது.

இரு தரப்புக்கும் தங்களது ஆபத்து தெரியும். ஒரு சுமூகமான உறவில் இருந்துவிட்டு, போருக்குச் சென்றால், அது உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய கிழக்கில் தீப்பொறியைப் பற்ற வைக்கும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலின் நோக்கம் என்ன?

“எதிர்பார்க்கப்படும் தரைப் போரில் இஸ்ரேலின் ஒட்டுமொத்த நோக்கம் என்ன ? “என ஸ்காட்டிஷ் எல்லையில் உள்ள லூசியானோ சிசி கேட்டுள்ளார்.

இதற்கு தெற்கு இஸ்ரேலில் உள்ள எங்கள் தலைமை சர்வதேச செய்தியாளர் லைஸ் டூசெட் பதிலளித்துள்ளார்.

“கடந்த காலப் போர்களில் “ஹமாஸை கடுமையாக தாக்குவதாக” இஸ்ரேல் சபதம் செய்தது. இஸ்ரேலுக்குள் ராக்கெட்டுகளை வீசும் அதன் திறன உட்பட, நிலத்தடி சுரங்கங்கள் என அனைத்தையும் அழித்துவிடும் எனக் கூறியிருந்தது.

ஆனால், தற்போது உள்ள சூழல் வேறு. இஸ்ரேல் “ஹமாஸை அழிப்பதாக” சபதம் செய்கிறது. ஐ.எஸ். இயக்கத்தைப் (Islamic State-IS) போல ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் என இஸ்ரேல் கூறுகிறது.

ஹமாஸின் உள்கட்டமைப்பை உடைக்கவும், அதன் சுரங்கப்பாதைகளை நசுக்கவும், அதன் கட்டுப்பாட்டு அமைப்பை முடக்கவும் இஸ்ரேலுக்கு ராணுவ வலிமை உள்ளது.

ஆனால், காஸாவில் என்ன காத்திருக்கிறது என்பது இஸ்ரேலுக்கு எவ்வளவு தெரியும் என தெளிவாகத் தெரியவில்லை. இஸ்ரேலிய பாதுகாப்பு கட்டமைப்பை தகர்க்கும் ஹமாஸின் ராணுவ வலிமை இஸ்ரேலியர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஹமாஸ், மூர்க்கமான இஸ்ரேலியர்களை எதிர்கொள்ளும்போதும் அதே நுட்பமான உத்திகளை பயன்படுத்தக் கூடும்.

ஐ.எஸ். குழுவைப் போலல்லாமல், ஹமாஸ் என்பது பாலத்தீன சமூகத்தில் பொதிந்துள்ள ஒரு அரசியல் மற்றும் சமூக அமைப்பாகும்.

ஒரு ராணுவத் தாக்குதல் அதன் கட்டடங்களையும், பிறவற்றையும் அழித்துவிடும். ஆனால், ஒரு உறுதியான காரணத்திற்காக இறக்கத் தயாராக உள்ளவர்களின் உறுதி மேலும் வலுவாகும்.”

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் என்ன?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

இங்கிலாந்தில் உள்ள ஆண்ட்ரூ பார்க்கர், ஹமாஸ் தாக்குதலின் நோக்கம் என்ன? எனக் கேட்டுள்ளார்.

அதற்கு எங்கள் பாதுகாப்பு செய்தியாளர் ஃபிராங்க் கார்ட்னர் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “ஹமாஸின் செய்தித் தொடர்பாளர் மொஹமட் அல்-டீஃப் இந்தத் தாக்குதலுக்கான காரணத்தை கூறினார்.

காஸா மற்றும் மேற்குக் கரையில் இஸ்ரேலியர்களால் பாலத்தீனர்கள் அனுபவித்த தொடர்ச்சியான அவமானங்களுக்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது என்று அவர் கூறினார்.

வேறு, சொல்லப்படாத காரணங்கள் இருக்கலாம் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

தாக்குதலுக்கு முன்பு, இஸ்ரேலும் சவுதி அரேபியாவும் உறவுகளை சீராக்குவதற்கான பாதையில் இருந்தன.

இதை ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவாளரான ஈரானும் எதிர்த்தன. தற்போது அந்த பேச்சுவார்த்தையை சவுதி நிறுத்தி வைத்துள்ளது.

பெஞ்சமின் நெதன்யாகுவின் வலதுசாரி அரசாங்கம் அறிமுகப்படுத்திய நீதித்துறை சீர்திருத்தங்களால் இஸ்ரேலிய சமுதாயத்தில் ஏற்பட்ட கூர்மையான பிளவுகளை ஹமாஸின் தலைமை கவனித்திருக்கும்.

அவர்கள் இஸ்ரேலுக்கு வலி மிகுந்த அடியை கொடுப்பதை நோக்கமாகக் கொண்டனர். அதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.

எகிப்து எல்லையை மூடி வைத்திருப்பது ஏன்?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

இஸ்லாமியர்கள் குடும்பம் மற்றும் இஸ்லாத்தின் சகோதரத்துவத்தைப் பற்றி பேசுகிறார்கள். எகிப்தில் உள்ள முஸ்லிம்கள் காஸாவுடனான எல்லையை மூடி வைத்திருப்பதை எப்படி நியாயப்படுத்த முடியும்? என இங்கிலாந்தில் உள்ள டயானா கேட்டுள்ளார்.

இதற்கு தெற்கு இஸ்ரேலில் இருந்து செய்தி சேகரிக்கும் எங்கள் சர்வதேச ஆசிரியர் ஜெர்மி போவன் பதிலளித்துள்ளார்.

அவர் கூறுகையில், “இஸ்லாம் ஒரு நம்பிக்கை. ஆனால் அது தேசிய பாதுகாப்பு அரசியலை தாண்டியது அல்ல.

லட்சக்கணக்கான எகிப்திய முஸ்லிம்கள் காஸாவில் உள்ள பொதுமக்களின் துன்பத்தைப் போக்க விரும்புகிறார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன்.

ஆனால், எகிப்திய அரசாங்கம், அமைதியான நேரங்களில் கூட, காஸாவிலிருந்து ரஃபா கடவுப்பாதை வழியாக வழக்கமான போக்குவரத்தை அனுமதிப்பதில்லை. 2007 இல் ஹமாஸ் காஸாவை கைப்பற்றியதில் இருந்து இஸ்ரேலின் ஒரு நட்பு நாடாக எகிப்து இருந்து வருகிறது.

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு எகிப்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பில் ஹமாஸ் அதன் வேர்களைக் கொண்டுள்ளது. சகோதரத்துவம் இஸ்லாமிய போதனை மற்றும் நம்பிக்கைக்கு ஏற்ப நாடுகளையும் சமூகத்தையும் மறுவடிவமைக்க விரும்புகிறது.

எகிப்திய ராணுவம் அந்த ஆசையை எதிர்க்கிறது. அது 2013 இல் தேர்ந்தெடுக்கப்பட்ட முஸ்லீம் ஜனாதிபதியை அகற்றியது.

எகிப்தின் தற்போதைய ஆட்சியானது ஹமாஸுடன் உறவுகளைக் கொண்டுள்ளது. கடந்த காலத்தில் ஹமாஸுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இணைப்பாக இருந்தது. ஆனால், பாலத்தீன அகதிகளின் வருகையை அது விரும்பவில்லை.

சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகும் புதிதாக சுதந்திரம் பெற்ற இஸ்ரேலில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை தங்க வைக்க காஸாவில் அகதிகள் முகாம்கள் உள்ளன. அவர்கள் ஒருபோதும் தங்களின் வீட்டிற்கு அனுமதிக்கப்படவில்லை.

ஹமாஸ் போர்க்குற்றம் செய்ததா?

இஸ்ரேல்-ஹமாஸ் மோதல்

பட மூலாதாரம், Getty Images

புதினுக்கு எதிராக உலகம் சர்வதேச கைது வாரண்ட் பிறப்பித்தது. ஹமாஸ் தலைமைக்கு எதிராக ஏன் அதே பதில் வரவில்லை? இது பெரிய அளவிலான போர்க்குற்றம் இல்லையா? என இங்கிலாந்தைச் சேர்ந்த சைமன் கேட்டுள்ளார்.

அதற்கு, நமது உலக விவகார நிருபர் பால் ஆடம்ஸ் பதிலளித்துள்ளார்.

அப்போது அவர், “முந்தைய சுற்று மோதல்கள் பல ஆண்டுகளாக நீடித்த போதிலும், அக்டோபர் 7 க்கு முன் ஹமாஸுடன் போரில் ஈடுபடுவதாக இஸ்ரேல் கருதவில்லை.

இஸ்ரேலைப் பொருத்தவரை இது ஒரு பயங்கரவாதச் செயல், போர் அல்ல.

பெஞ்சமின் நெதன்யாகுவின் அரசாங்கம் அதன் சொந்த வழியில் நீதியைப் பின்பற்றுகிறது. படுகொலைகளுக்குப் பொறுப்பாகக் கருதும் குறைந்தது இரண்டு ஹமாஸ் ஆயுதக்குழுவின் தளபதிகளை ஏற்கனவே கொன்றுவிட்டது.

அது இன்னும் பலரைக் கொல்ல முயற்சிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

கத்தார் மற்றும் லெபனானில் வசிக்கும் அந்த அமைப்பின் அரசியல் தலைமை பற்றி கேள்விகள் எழலாம். ஆனால், இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்தும் ராணுவப் பிரிவின் திட்டங்களைப் பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என சிலர் கூறுகிறார்கள்.”

இவ்வாறு அவர் கூறினார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *