
திருவண்ணாமலை அருகே அம்மன் கோவிலுக்குள் வந்து பட்டியலின மக்கள் வழிபாடு செய்ய தொடங்கியதால் மற்ற சமூக மக்கள் ஒன்று சேர்ந்து தங்களுக்கென புதிய கோவில் கட்ட தொடங்கியுள்ளனர்.
தண்டராம்பட்டு அடுத்த தென்முடியனூர் கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த முத்து மாரியம்மன் ஆலயத்திற்குள் கடந்த 80 ஆண்டுகளாக அனுமதிக்கப்படவில்லை.
80 ஆண்டு போராட்டத்துக்குப் பிறகு கடந்த ஆண்டில்தான் பட்டியலின மக்கள் கோவிலுக்குள் சென்று வழிபட அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த நிலையில், பட்டியலின மக்கள் கோவிலுக்குள் நுழைந்ததால் மற்ற பிரிவு மக்கள் தங்களுக்கென வேறொரு கோவிலை கட்டத் தொடங்கியிருப்பது புதிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.
அம்மன் கோவிலில் பட்டியலின மக்கள் வழிபட மற்ற பிரிவினர் எதிர்ப்பு
கடந்த ஆண்டு பொங்கல் தினத்தன்று முத்து மாரியம்மன் கோவிலில் 12 நாட்கள் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எங்களையும் திருவிழா நடத்த ஒரு நாள் அனுமதிக்க வேண்டும் மற்றும் கோவில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
ஆனால் ஊர்ப்பகுதி மக்கள் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதையடுத்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கோவிலின் உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருவண்ணாமலை இந்து சமய அறநிலைத்துறையிடம் மனு அளித்தனர்.
இந்த மனுவின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் இப்பகுதியில் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் கடந்த 80 ஆண்டுகளாக பட்டியலின மக்கள் கோவிலுக்குள் அனுமதிக்க படவில்லை என தெரியவந்தது.

அதன் அடிப்படையில் பட்டியலின மக்கள் கோவிலுக்கு உள்ளே செல்லலாம் என்றும் கோவில் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டது என்றும் கடந்த ஆண்டு ஜனவரி 30 ஆம் தேதி இந்து சமய அறநிலைத்துறை துறையினர் கூறினர்.
ஊர்பகுதி மக்களால் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க இந்த கிராமத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.
பட்டியலின மக்களை கோவிலுக்கு உள்ளே அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதை அறிந்த ஊர்பொதுமக்கள் கோவிலுக்கு உள்ளே அவர்களை அனுமதிக்க கூடாது, இந்த கோவில் எங்களுக்கு சொந்தமான கோவில் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இருப்பினும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிகாரிகள் முன்னிலையில் முத்துமாரியம்மன் கோவில் கதவை திறந்து 80 ஆண்டுகளுக்குப் பிறகு கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்தனர்.

“பட்டியலினத்தவர் நுழைந்த கோவில் எங்களுக்கு வேண்டாம்”
இந்நிலையில் பல மாதங்களாக ஊர் பகுதியைச் சேர்ந்த மக்கள் முத்து மாரியம்மன் கோவிலில் வழிபாடு செய்வதை கைவிட்டனர். மேலும் அவர்கள் ஒன்று கூடி பேசி அந்த கோவில் நமக்கு வேண்டாம் என்றும் புதிதாக ஒரு கோவிலை கட்டி வழிபாடு செய்வோம் என்றும் முடிவெடுத்தனர். இது தொடர்பாக பெயர் கூற விரும்பாத ஊர் பகுதியைச் சேர்ந்த நபர் பிபிசி தமிழிடம் தொலைபேசியில் பேசினார்.
“எங்கள் கிராமத்தில் பலதரப்பட்ட சமூகங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றோம். எங்களுக்குள் எந்த பிரச்னையும் இல்லை. நாங்களும் பிரச்னை செய்ய போவதில்லை. தேவையில்லாமல் எங்களுக்கு கோவில் சார்ந்த பிரச்னை ஏற்பட்டது. நாங்கள் பட்டியிலினத்தவர் என்று தனியாக இடம் ஒதுக்கி கோவில் கட்டித் தந்தோம். அதில் அவர்கள் தொடர்ந்து வழிபாடும் நடத்தி வந்தனர்.”
“அப்படி இருக்கும் போது, தேவையில்லாமல் எங்கள் பகுதியில் இருக்கும் கோவிலுக்கு வழிபட வந்தது வருத்தத்தை அளித்தது. எனவே பிரச்னைக்குரிய அந்த கோவில் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டோம். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளதால் அந்த கோவிலை அனைவரும் சொந்தம் கொண்டாடுகின்றனர்” என்று தன் சமுதாயத்தின் கருத்தை வெளிப்படுத்தினார்.
தங்கள் சொந்த பணத்தை வைத்து இரண்டு சென்ட் நிலத்தை வாங்கி அதில் கோவில் கட்டவுள்ளனர்.

இதுகுறித்து பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த நபர், தாங்கள் கோவிலுக்கு சென்று வந்ததால் ஊர் பொதுமக்கள் யாரும் தங்களிடம் பேசுவதில்லை என்று தெரிவித்தார்.
பெயர் குறிப்பிட விரும்பாத அவர் பிபிசி தமிழிடம் பேசிய போது, “சாமி எல்லாவற்றுக்கும் பொதுவானது தானே? நாங்கள் அப்படித்தான் நினைத்து கும்பிட்டோம். இந்நிலையில் அவர்கள் தனியாக கோவில் கட்ட முடிவெடுத்தது அவர்கள் விருப்பம். இதில் நான் என்ன சொல்ல முடியும்” என்று கூறினார்.
வழக்கறிஞரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான முத்தையன் ராமர் கோயிலுக்கு அனைத்து சமூகத்தினரும் செல்லும் போது ஏன் முத்துமாரியம்மன் கோயிலுக்குள் அனைவரும் செல்லக் கூடாது என்று கேள்வி எழுப்பினார்.
“தனியாக இடம் வாங்கி அதில் புதிதாக கோவில் கட்டினால் அதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் ஏற்கனவே வழிபாடு செய்து கொண்டிருந்த கோவிலை தவிர்த்து அது வேண்டாம் என்று கூறி ஒதுங்கி வேறு ஒரு கோவிலை கட்டுவது என்பது ஏற்றுக்கொள்ள இயலாது” என்று கூறிய அவர், இடதுசாரி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்க்கிறோம் என்றும் கூறினார்.
மேலும், “ஏன், தற்பொழுது கூட அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோயில் விசேஷத்திற்கு அனைத்து சமூக மக்களுமே சென்றார்கள். இது எல்லோருக்குமே தெரியும். இங்கு எல்லோரும் இணக்கத்துடன் வாழ வேண்டும்.” என்றார். இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறாமல் அரசு கண்காணிக்க வேண்டும் என்றும், சமூக நல்லிணக்கத்துடன் வாழ சமாதான பேச்சுவார்த்தை நடத்தி மக்களுக்கு புரிதல் ஏற்படுத்த வேண்டும்” என்றும் தெரிவித்தார்.

வழக்கறிஞர், சிபிஐஎம்
மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர் கோயில் வழிபாடு குறித்த விதிகளை விளக்கினார். யார் ஒருவரும் தனியாக கோயில் கட்டிக் கொள்வதை சட்டம் அனுமதிக்கிறது என்றாலும், சாதி அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவது சட்டப்படி குற்றம் என்று கூறினார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பட்டி இரண்டு வகை கோவில்கள் உள்ளன. ஒன்று பொது கோவில், மற்றொன்று தனிநபர் கோவில். இதில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி தனி நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் இணைந்து தனியாக கோவில் கட்டி வழிபடுவதை யாரும் தடுக்க முடியாது. தனியார் கோவில்களான மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில், ஸ்ரீபுரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களிலும் பொதுஜன வழிபாடு தற்போது நடைபெற்று வருகிறது. இதற்கு அவர்கள் அனுமதி வழங்கி உள்ளனர்.”

மத்திய அரசு வழக்கறிஞர் சங்கர்
“பொதுக் கோவில்கள் எனப்படும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கு அனைவரும் வந்து வழிபாடு செய்யலாம். அதாவது உண்டியல் வைத்து நிதி சேர்த்து அதை கோவில் புனரமைப்பு பணிகளுக்கு பயன்படுத்தினால் அது அனைவரும் வந்து வழிபடும் கோவில் என்று எளிதாக புரியும்படி கூறலாம்.”
“ஆனால் உண்டியல் இல்லாமல் தனி நபர்கள் கட்டி அவர்கள் சார்ந்தவர்கள் மட்டுமே வந்து வழிபாடு செய்யவும் சட்டத்தில் இடம் உள்ளது. எனினும், சாதி ,மொழி அடிப்படையில் விலக்கி வைப்பது தவறு. ஆனால் எங்களுக்கான கோவில் நாங்கள் வழிபாடு செய்ய அமைத்துக் கொள்கிறோம் என்பதை யாராலும் தடுக்க முடியாது.” என்றார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
