பட மூலாதாரம், Getty Images
சமீபத்தில் ஆஸ்திரேலியா அரசு கோல்டன் விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இருந்த இந்த விசாவினால் அந்நாட்டிற்கு எந்த ஒரு பொருளாதார நன்மைகளும் இல்லை என்பதை அதன் அரசாங்கம் கண்டறிந்தது.
2021 ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்தன.
ஆனால் இந்த கோல்டன் விசா என்றால் என்ன, பணக்காரர்கள் ஏன் இந்த விசாவிற்காக மற்ற நாடுகளில் கோடிகளில் முதலீடு செய்ய தயாராக இருக்கிறார்கள், இந்த விசாக்கள் ஏன் இப்போது ரத்து செய்யப்படுகின்றன போன்றவற்றை இக்கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
கோல்டன் விசா என்றால் என்ன?
பட மூலாதாரம், SANJAY DUTT/TWITTER
இந்த விசாக்கள் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன, இதனால், முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற அதிக அளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள்.
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த விசா வழங்குவதில் ஒவ்வொரு நாட்டிலும் தனி விதிகள் இருக்கின்றன.
‘இன்வெஸ்டோபீடியா’ இணையதளத்தின்படி, கோல்டன் விசா என்பது முதலீட்டாளர் ஒரு நாட்டில் அதிக முதலீடு செய்வதன் மூலம் தனது குடும்பத்துடன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு வகையான முதலீட்டுத் திட்டமாகும்.
கோல்டன் விசாவின் கீழ், பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெருமளவு வரி விலக்கும் கூட பெறுவார்கள். இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் மூதலீட்டிற்காக சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.
கோல்டன் விசாவின் கீழ் பல்வேறு ‘முதலீட்டு திட்டங்கள்’ இருக்கிறது, அதற்காக ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும்.
ஹென்லி & பார்ட்னர்ஸின் கருத்துகளின் படி , பொதுவாக கோல்டன் விசா திட்டத்தின் கீழ் விசாவைப் பெற குறைந்தது 12 மாதங்கள் வரை ஆகலாம்.
கோல்டன் விசாவுக்குப் பதிலாக இனி ‘திறன்மிகு தொழிலாளர் விசா’
பட மூலாதாரம், Getty Images
சிட்னியைச் சேர்ந்த பிபிசி பத்திரிகையாளர் ஹன்னா ரிச்சியின் அறிக்கையின்படி, இந்த விசா கொள்கையானது ஆஸ்திரேலியாவால் வெளிநாட்டு வணிகர்களுக்காகவே தொடங்கப்பட்டது, ஆனால் அதனால், பலன்கள் சரியாக இல்லாததால், குடியேற்றக் கொள்கையில் திருத்தங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே இந்தக் கொள்கையை, சட்டவிரோத பணப்புழக்கம் செய்யும் ஊழல்வாதிகள் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கூறினார்கள்.
அந்த அறிக்கையின்படி, இதற்கு பதிலாக ‘திறன்மிகு தொழிலாளர் விசா’ (திறமையான தொழிலாளர்களுக்கான விசா) கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆஸ்திரேலிய கோல்டன் விசாவின் கீழ், முதலீட்டாளர்கள் குறைந்தது 3.3 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும்.
பல விசாரணைகளுக்குப் பிறகு, இந்தக் கொள்கையால் அதன் இலக்கை நிறைவேற்ற முடியாது என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் புரிந்து கொண்டது.
இந்த விசாவை ரத்து செய்வதன் மூலம், தங்கள் நாட்டிற்கு வந்து, ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் திறமையானவர்களுக்கான விசாக்களை கொண்டு வருவார்கள் என்று அரசாங்கம் கூறியது.
இது குறித்து ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்த விசா நமது பொருளாதார எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தெளிவாகிறது’ என்றார்.
கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்?
பட மூலாதாரம், Getty Images
குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை ஆகியவற்றை கோல்டன் விசாவை வைத்து ஒருவர் அவரது குடும்பத்துடன் அந்த நாட்டில் வசிக்கவும் பணி புரியவும் அனுமதிக்கிறது.
சில சூழ்நிலைகளில், ஒருவர் நிரந்தர குடியுரிமை அல்லது அந்த நாட்டின் குடியுரிமையையும் பெறலாம். முன்னதாக இதற்கு ஸ்பான்சர் தேவைப்பட்டது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றோர்களும் நிதியுதவி செய்யலாம்.
பயணம் – ஒரு நாட்டின் கோல்டன் விசாவைப் பெற்றால், ஒருவர் அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாகச் செல்லலாம். சில ஐரோப்பிய நாடுகளின் கோல்டன் விசா வைத்திருப்பவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எங்கு வேண்டுமென்றாலும் பயணிக்க அனுமதிக்கின்றது.
கல்வி மற்றும் சுகாதாரம் – பல்வெறு நாடுகளில் கோல்டன் விசாவுடன் ஒருவர் அந்த நாட்டின் உள்ளூர் கல்வி முறை மற்றும் சுகாதார அமைப்பின் வசதிகளையும் பெறலாம்.
வரி – பல்வெறு நாடுகளில் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில அல்லது முழு வரி விலக்கும் அளிக்கின்றன.
எந்த நாடுகளில் எல்லாம் கோல்டன் விசா சர்ச்சை இருக்கிறது?
பட மூலாதாரம், Getty Images
கோல்டன் விசா கொள்கையை ஒரு நாடு ரத்து செய்வது இது முதல் முறை அல்ல, இதற்கு முன், 2022 ஆம் ஆண்டில் பிரிட்டனும் இந்தக் கொள்கையை ரத்து செய்தது.
மிகவும் பணக்கார ‘ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள்’ அங்கு குடியுரிமை பெறத் தொடங்கிய போது ஐரோப்பிய நாடுகளான மால்டாவிலும் இந்த விசா பற்றிய கவலைகள் எழுந்தன.
பண மோசடி, வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் ஊழல் வழக்குகள் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது.
பிபிசி செய்தியின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில், ஐரோப்பிய நாடுகளை ‘கோல்டன் விசா’ மூலம் தங்கள் நாட்டில் குடியுரிமை பெறும் முதலீட்டாளர்களிடம் கவனமாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கேட்டுக் கொண்டது.
ஊடகத்தில் வெளிவந்த அறிக்கைகளின்படி, பாலிவுட் நடிகர்கள் உட்பட இந்தியாவின் பல பிரபலங்கள் துபாயில் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அங்கு தங்கி பல வசதிகளை பெற முடியும்.
டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் கோல்டன் விசாவைப் பெறும் நபர்களின் பட்டியலில் இந்திய குடிமக்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது, அதாவது இந்த விசாவைப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்காவது அதிகமாக இருந்தது.
மற்ற நாடுகளில் கோல்டன் விசா பெற எவ்வளவு செலவாகும்?
அமெரிக்கா – 5 மில்லியன் டாலர்கள்
ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் – ஒரு லட்சம் டாலர்கள்
சைப்ரஸ் – இரண்டு மில்லியன் யூரோக்கள்
அயர்லாந்து குடியரசு – ஒரு மில்லியன் யூரோக்கள்
செயின்ட் கிட்ஸ் – 1,50,000 டாலர்கள்
வனுவாட்டு – 1,60,000 டாலர்கள்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
