பட மூலாதாரம், RAJAB FAMILY
சிறுமி ஹிந்த் ரஜாப்
கடந்த மாதம் காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜாப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களின் உடல்கள் இருந்த காரில் சிறுமியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை காப்பாற்ற முயன்ற இரண்டு செஞ்சிலுவைச் சங்க ஊழியர்களின் உடல்களும் அருகிலேயே கண்டெடுக்கப்பட்டன.
இஸ்ரேலிய டாங்கிகள் தாக்கியதில் அச்சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஹிந்த் ரஜாப் என்ற இந்த சிறுமி தனது உயிரைக் காப்பாற்றுவதற்காக காஸா நகரிலிருந்து தனது மாமா மற்றும் அத்தையுடன் காரில் தப்பித்து சென்று கொண்டிருந்தார். மேலும் அவரது மாமாவின் பிள்ளைகள் மூவர் அந்த காரில் இருந்தனர்.
ஹிந்த் ரஜாப் மற்றும் அவசர உதவிக்கு போன் செய்து பேசிய இறுதி உரையாடல் பதிவுகள் மூலம், அப்போது காரில் உயிர் பிழைத்திருந்தவர் ஹிந்த் ரஜாப் மட்டுமே என தெரியவந்தது. இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து தனது உயிரைக் காப்பாற்ற, இறந்த உறவினர்களின் உடல்களுக்கு இடையே அவர் மறைந்திருந்தார்.
யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்கள் என்று அவர் தொலைபேசியில் கெஞ்சினார், ஆனால் திடீரென்று பலத்த துப்பாக்கிச் சத்தம் கேட்டது, பின்னர் தொலைபேசி இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதற்குப் பிறகு, அவசரகால ஊழியர்களால் ஹிந்த் ரஜாப் உடன் பேச முடியவில்லை.
பல நாட்களுக்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட சடலங்கள்
போர் காரணமாக இந்தப் பகுதிக்கு செல்லும் சாலைகள் மூடப்பட்டன. சனிக்கிழமையன்று, பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட் (PRCS) பணியாளர்களால் அந்தப் பகுதியை அடைய முடிந்தது.
ஹிந்தின் குடும்பத்தினர் பயணம் செய்த கருப்பு கியா காரை அவர்கள் கண்டுபிடித்தனர். இதில் காரின் கண்ணாடி மற்றும் டேஷ்போர்டு கண்ணாடி உடைந்து சாலையில் சிதறிக் கிடந்தது. காரில் டஜன்கணக்கான புல்லட்கள் துளைத்ததற்கான அடையாளங்கள் தெளிவாகக் காணப்பட்டன.
காருக்குள் ஹிந்த் ரஜாப் உட்பட ஆறு பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக ரெட் கிரெசன்ட் ஊழியர் ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அனைவரது உடலிலும் தோட்டாக் காயங்கள் காணப்பட்டன என்றார்.
இந்த காரில் இருந்து சிறிது தூரத்தில் மற்றொரு கார் எரிந்து நாசமாகி கிடந்தது. மேலும் இந்த காரின் இன்ஜின் வெடித்து சாலையில் சிதறிக் கிடந்தது.
அது உண்மையில் ஹிந்த் ரஜாபைத் தேடி அனுப்பப்பட்ட ஆம்புலன்ஸ் என்று செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது.
இந்த ஆம்புலன்சில் யூசுப் அல்-சீனோ மற்றும் அகமது அல்-மதூன் ஆகியோர் பயணித்ததாகவும், அவர்கள் இஸ்ரேல் ராணுவத்தின் ஷெல் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் அந்த அமைப்பு கூறுகிறது.
பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கம் குற்றச்சாட்டு

இஸ்ரேல் வேண்டுமென்றே ஆம்புலன்ஸ்களை குறிவைத்ததாக தனது அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளது பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்ட். ஜனவரி 29 அன்று, ஹிந்தின் கார் இருந்த இடத்தை ஆம்புலன்ஸ் சென்றடைந்தவுடன், அதன் மீது குண்டுகள் வீசப்பட்டன என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, “ஹிந்த் ரஜாபைக் காப்பாற்றுவதற்காக இந்த பகுதிக்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப ரெட் கிரெசன்ட் குழு தேவையான அனுமதியைப் பெற்றிருந்தது. ஆனால் இந்தப் பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலியப் படைகள் செஞ்சிலுவைச் சங்க அமைப்பினரை வேண்டுமென்றே குறிவைத்தன.”
ரெட் கிரெசன்ட் குழு பிபிசியிடம் கூறியதாவது, “ஹிந்த் ரஜாபுக்கு உதவுவதற்கு இஸ்ரேலிய இராணுவத்திடம் இருந்து பல மணிநேரம் போராடி அனுமதி பெற வேண்டியிருந்தது”
அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் நிபால் ஃபர்சாக், ஒரு வாரத்திற்கு முன்பு பிபிசியிடம் பேசியபோது, “நாங்கள் ஒருங்கிணைந்து முயற்சி செய்து இதற்கான கிரீன் சிக்னல் பெற்றோம். அங்கு சென்றதும், ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்கள் ஹிந்த் ரஜாப் மறைந்திருந்த காரைக் கண்டுபிடித்ததை உறுதிப்படுத்தினர். அவர்களால் அந்த காரைப் பார்க்க முடிந்தது. நாங்கள் கடைசியாகக் கேட்டது துப்பாக்கிச் சத்தம் தான்” என்று கூறியிருந்தார்.

முடிவில்லாத காத்திருப்பு
அவசர அழைப்பு ஆபரேட்டருடன் ஹிந்த் ரஜாப் பேசிய முழு தொலைபேசி உரையாடலையும் பொதுவில் வெளியிட்டது செஞ்சிலுவைச் சங்கம். மேலும், ஹிந்த் ரஜாப்புக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிய ஒரு பிரசாரத்தைத் அது தொடங்கியுள்ளது.
ஹிந்த் ரஜாப்பின் தாய் விஸ்ஸாம் பிபிசியிடம் கூறுகையில், “என் மகள் எந்த நேரத்திலும் என் முன்னால் வந்து நிற்பாள் என்ற நம்பிக்கையில், அவள் உடல் கிடைக்கும் வரை இரவும் பகலும் காத்திருந்தேன்.” என்கிறார்.
ரஜாப்பின் மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என அவர் விரும்புகிறார்.
ஹிந்த் ரஜாப்பின் தாயார் பிபிசியிடம், “எனது குரலைக் கேட்டவர்கள், என் மகளின் உதவிக்காக கெஞ்சும் குரலைக் கேட்டவர்கள், ஆனால் அவளைக் காப்பாற்ற அவர்கள் எதுவும் செய்யவில்லை, அவர்கள் அனைவரையும் இறுதித்தீர்ப்பு நாளில் கடவுளின் முன் நிற்க வைத்து கேள்வி கேட்பேன்” என்று கூறினார்.
“காஸா மற்றும் அதன் மக்களைத் தாக்க, நெதன்யாகு, பைடன் மற்றும் அவர்களுடன் கைகோர்த்த அனைவருக்கும், நான் என் இதயத்திலிருந்து வணக்கம் செலுத்துகிறேன்.” என்று அவர் கூறுகிறார்.
மருத்துவமனையில் தன் மகளைப் பற்றிய செய்திக்காக கையில் ஒரு சிறிய இளஞ்சிவப்பு நிற பையுடன் காத்திருந்தார் தாய் விஸ்ஸாம். அந்த பையை அவர் ஹிந்த் ரஜாப்புக்கு கொடுக்க வைத்திருந்தார். அதில் ஒரு நோட்புக் இருந்தது, அதைத் தான் கையெழுத்துப் பயிற்சிக்காக சிறுமி ஹிந்த் பயன்படுத்தி வந்தார்.
“இன்னும் எத்தனை தாய்மார்கள் இதுபோன்ற வலியை அனுபவிக்க வேண்டுமென காத்திருக்கிறீர்கள்? இன்னும் எத்தனை குழந்தைகள் இறக்க வேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?” என்று கேள்வியெழுப்புகிறார் விஸ்ஸாம்.
போரின் போது கடைப்பிடிக்கப்படும் விதிகள்
அன்றைய இராணுவ நடவடிக்கை, ஹிந்த் காணாமல் போனது மற்றும் அவரைத் தேடச் சென்ற ஆம்புலன்ஸ் பற்றிய தகவல்களை பிபிசி இரண்டு முறை இராணுவத்திடம் கேட்டது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
செஞ்சிலுவைச் சங்கம் முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து அறிந்துகொள்ளவும் சனிக்கிழமையன்று இஸ்ரேல் இராணுவத்தையும் பிபிசி தொடர்பு கொண்டது.
போர் விதிகள் பற்றி பேசுகையில், “மருத்துவ ஊழியர்கள் போரின் போது களத்தில் குறிவைக்கப்படுவதில்லை, மாறாக அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. போர்க்களத்தில் காயம் அடைந்தவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி விரைவில் வழங்கப்படுகிறது.” என்று இராணுவத் தரப்பு கூறுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, காஸா நகரங்கள் மீது விரைவான தாக்குதல்களை நடத்தி பதிலடி கொடுக்கத் தொடங்கியது இஸ்ரேல்.
மருத்துவமனைகள், நிவாரண முகாம்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அடியில் கட்டப்பட்ட சுரங்கப் பாதைகளில் ஹமாஸ் போராளிகள் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது.
ஹமாஸ் போராளிகள் ஆம்புலன்ஸ்கள் மூலம் ஆயுதங்கள் மற்றும் தங்கள் போராளிகளை ஏற்றிச் செல்வதாகவும் இஸ்ரேல் முன்பு கூறியிருந்தது.
அவசர எண்ணில் கடைசியாக பேசிய ஹிந்த் ரஜாப்
ரெட் கிரெசன்ட் குழுவின் ராணாவுடன் இறுதியாக தொலைபேசி மூலம் பேசியிருந்தார் ஹிந்த் ரஜாப்.
“எனக்கு எதிரே ஒரு டாங்கி இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து வருகிறது” என்று அந்த தொலைபேசி அழைப்பில் கூறியிருந்தார்.
“அது மிகவும் அருகில் இருக்கிறதா?” எனக் கேட்டார் ராணா.
அதற்கு ஹிந்த், “மிகவும் அருகில் இருக்கிறது, எனக்கு ரொம்ப பயமாக இருக்கிறது. என்னை வந்து காப்பாற்றுவீர்களா?” எனக் கேட்டிருந்தார்.
ஹிந்தின் குடும்பம் எங்கே போனது?
ஜனவரி 29 அன்று, காஸா நகரின் மேற்கே வாழும் மக்களை கடல் எல்லையை ஒட்டிய சாலை வழியாக தெற்கே செல்லுமாறு கேட்டுக் கொண்டது இஸ்ரேலிய இராணுவம்.
ஹிந்தின் குடும்பம் காஸா நகரில் இருந்தது. அவரது குடும்பம் கிழக்கு நோக்கி சென்று அல்-அஹ்லி மருத்துவமனையில் தஞ்சம் புகுந்தது. இந்த இடம் தங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்று நம்பினார்கள். அப்பகுதியில் கடும் ஷெல் தாக்குதல் நடந்ததாக விஸ்ஸாம் கூறுகிறார்.
“நாங்கள் மிகவும் பயந்தோம். எங்கள் உயிரைக் காப்பாற்ற, வான்வழித் தாக்குதலில் இருந்து தப்பிக்க ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஓடிக் கொண்டிருந்தோம்.”
விஸ்ஸாமும் அவரது மூத்த பிள்ளைகளும் மருத்துவமனையை நோக்கி நடந்து சென்றுள்ளனர்.
“அதிக குளிராக இருந்தது, மழையும் பெய்து கொண்டிருந்தது. மாமாவின் காரில் செல்லும்படி ஹிந்திடம் கேட்டுக் கொண்டேன். அவர் மழையில் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை.” என்று கூறுகிறார் விஸ்ஸாம்.
மாமாவின் கியா பிகாண்டோ காரில் ஏறி அமர்ந்தாள் ஹிந்த். காசாவின் புகழ் பெற்ற அல்-அசார் பல்கலைக் கழகத்தை நோக்கி அந்த கார் சென்று கொண்டிருந்தது, ஆனால் துரதிர்ஷ்டவசமாக அந்த காருக்கு முன்னால் இஸ்ரேலிய டாங்கிகள் வந்தன.
உதவிக்காக பரிதவித்த குடும்பம்
காரில் இருந்தவர்கள் அங்கிருந்து 80 கிலோமீட்டர் தொலைவில், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீன செஞ்சிலுவைச் சங்கமான ரெட் கிரெசன்டின் அவசரகால தலைமையகத்தை உதவிக்கு தொடர்பு கொண்டனர். சிறிது நேரம் கழித்து, மதியம் 2.30 மணியளவில், ரெட் கிரெசன்ட் குழு ஹிந்தின் மாமாவை தொடர்பு கொண்டார். 15 வயது லயன் அப்போது பேசினார்.
தனது பெற்றோரும் உடன்பிறந்தோரும் கொல்லப்பட்டுவிட்டனர் என கூறினார் லயன். தனது காருக்கு அருகில் ஒரு டாங்கி இருப்பதாகவும், அது காரை நோக்கி தொடர்ந்து குண்டுகளை வீசுவதாகவும் கூறியிருந்தார். துப்பாக்கிச் சத்தத்திற்கு நடுவே, பலத்த அலறல் சத்தம் கேட்டது. பின்னர் தொலைபேசி துண்டிக்கப்பட்டது.
ரெட் கிரெசன்ட் குழு மீண்டும் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டபோது, இம்முறை ஹிந்த் பதிலளித்தார். அவரது குரலில் அதிக பயம் தெரிந்தது. காரில் இருந்த அனைவரும் இறந்து விட்டதாகவும், தான் மட்டும் உயிருடன் இருப்பதாகவும் கூறினார் ஹிந்த்.
“இருக்கைக்கு கீழே ஒளிந்துகொள், யார் கண்ணிலும் பட்டுவிடாதே,” என்று குழுவினர் அவருக்குத் தொலைபேசியில் கூறினர்.
ஹிந்த் ரஜாப் உடன் சில மணிநேரம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார் ராணா பகிஹ். அதேநேரத்தில் இஸ்ரேலிய இராணுவத்தைத் தொடர்புகொண்ட ரெட் கிரெசன்ட் குழு, தங்களின் ஆம்புலன்ஸ்களை நகருக்குள் அனுமதிக்க கோரிக்கை வைத்தது.
தோல்வியில் முடிந்த மீட்பு முயற்சி

சிறுமியின் தாத்தா பஹா ஹமாதா
இந்தத் தொலைபேசி அழைப்பு துவங்கி மூன்று மணிநேரம் கழித்து ஹிந்த் இருந்த பகுதிக்கு ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.
அதற்குள் ரெட் கிரெசன்ட் குழு, ஹிந்தின் தாய் விஸ்ஸாமைத் தொடர்பு கொண்டனர். அவரையும் அந்த அழைப்பில் இணைத்தனர். தனது தாயின் குரலைக் கேட்டதும் ஹிந்த் மேலும் அழத் துவங்கினார், என்கிறார் ராணா.
“அவள் அழைப்பைத் துண்டிக்க வேண்டாம் என்று கெஞ்சினாள். நான் அவளிடம் எங்கு அடிபட்டிருக்கிறது என்று கேட்டேன். அவளோடு சேர்ந்து குர்ஆன் வாசித்து பிரார்த்தனை செய்யத் துவங்கினேன். அவள் நான் சொன்ன ஒவ்வொரு வார்த்தையையும் திருப்பிச் சொன்னாள்,” என்கிறார் விஸ்ஸாம்.
மாலை இருட்டிய பின்பு ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர்களான யூசுப் மற்றும் அகமது, அலுவலகத்தைத் தொடர்புகொண்டு அவர்கள் ஹிந்த் இருந்த இடத்தை நெருங்கிவிட்டதாகவும், அவர்களை இஸ்ரேலிய ராணுவம் சோதனை செய்ய போவதாகவும் தெரிவித்தனர்.
அதுதான் அவர்களிடமிருந்தும் ஹிந்திடமிருந்தும் கிடைத்த கடைசித் தகவல். இரண்டு இணைப்புகளும் அதன்பின் துண்டிக்கப்பட்டன.
ஹிந்தின் தொலைபேசி இணைப்பு மேலும் சில நொடிகள் நீடித்திருந்தது எனவும், அப்போது அவரது தாய் விஸ்ஸாம் கார் கதவு திறக்கப்படும் சத்தத்தைக் கேட்டதாகவும், ஹிந்த் அவரிடம் தொலைவில் ஆம்புலன்ஸ் தென்படுவதாகவும் கூறியதாக சிறுமியின் தாத்தாவான பஹா ஹமாதா பிபிசியிடம் தெரிவித்திருந்தார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
