இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம், பாகிஸ்தானை பொருளாதாரத்தில் முந்தியது எப்படி?

இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம், பாகிஸ்தானை பொருளாதாரத்தில் முந்தியது எப்படி?

பாகிஸ்தான் vs வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் தேதி பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திடம் இருந்து சுதந்திரம் பெற்ற பிறகு, பாகிஸ்தானின் மேற்கு மற்றும் கிழக்குப் பகுதிகள் இணைந்து சுதந்திரப் பயணத்தைத் தொடங்கின. ஆனால் அடுத்த பத்து-பன்னிரெண்டு ஆண்டுகளில் இரு பகுதிகளுக்கும் இடையிலான சமூக மற்றும் பொருளாதார இடைவெளி விரிவடைந்தது.

இது குறித்து ஜி.டபிள்யூ.சௌத்ரி ‘தனது லாஸ்ட் டேஸ் ஆஃப் யுனைடெட் பாகிஸ்தான்’ (Last Days of United Pakistan) என்ற புத்தகத்தில் 1960-ல் மேற்கு பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) மக்களின் தனிநபர் வருமானத்தை விட 32 சதவீதம் அதிகமாக இருந்தது என்றும் அடுத்த பத்து ஆண்டுகளில் இந்த வேறுபாடு 81 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

பாகிஸ்தானில் ஜெனரல் யஹ்யா கான் அரசில் அமைச்சராக இருந்தவர் ஜி.டபிள்யூ சவுத்ரி.

16 டிசம்பர் 1971 இல் கிழக்கு பாகிஸ்தான் வங்கதேசமாக உருவானபோது, ​​பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பொருளாதார குறிகாட்டிகள் மிகவும் வேறுபட்டவையாக இருந்தன. இதில் நாட்டின் பொருளாதார முன்னேற்ற விகிதம், பொருளாதாரத்தின் அளவு, தனிநபர் வருமானம் மற்றும் ஏற்றுமதி ஆகியவை அடங்கும்.

ஆனால், கடந்த இருபது ஆண்டுகளில் வங்கதேசத்தில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரணமாக, சுதந்திரம் அடைந்து 52 ஆண்டுகளுக்குப் பிறகு, வங்கதேசத்தின் பொருளாதாரக் குறிகாட்டிகள் பாகிஸ்தானைக் காட்டிலும் மிகச் சிறப்பாக உள்ளன.

வங்கதேசம் கடந்த 52 ஆண்டுகளில் பாகிஸ்தானை விட பொருளாதார ரீதியாக முன்னேறி தனது வெளிநாட்டு வர்த்தகத்தை வெகுவாக அதிகரித்துள்ளது. அதே நேரம், வறுமை விகிதமும் குறைந்துள்ளது. பொருளாதாரத் துறையில் பெண்களின் முன்னேற்றம் பாகிஸ்தானை விட அதிகமாக உள்ளது.

பாகிஸ்தானில் கடந்த பல ஆண்டுகளாக அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதம் மற்றும் மோசமான அமைதியின்மை மற்றும் பாதுகாப்பு சூழ்நிலையால் தொழில்துறை முன்னேற்றம் ஒருபுறம் பெரும் அளவில் தடைபட்டுள்ளது. மறுபுறம் வெளிநாட்டு வர்த்தகம், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, தனிநபர் வருமானம் போன்ற துறைகளில் அதிக முன்னேற்றம் ஏற்படவில்லை.

52 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பொருளாதார நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால், வங்கதேசம் சில விஷயங்களில் பாகிஸ்தானை மிஞ்சியுள்ளது. இதில் ஆடை ஏற்றுமதி துறை குறிப்பிடத்தக்கது.

தற்போது, ​​சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மிகப்பெரிய ஜவுளி ஏற்றுமதி செய்யும் நாடாக வங்கதேசம் மாறியுள்ளது. மறுபுறம், ஆடை ஏற்றுமதி செய்யும் முதல் ஐந்து நாடுகளில் பாகிஸ்தான் கணக்கில் கூட இல்லை.

வங்கதேசத்தின் ஜவுளி ஏற்றுமதித்துறை வெற்றியும் ஆச்சரியமளிக்கிறது. ஏனெனில் அது பருத்தியை உற்பத்தி செய்யவில்லை. ஆனால் பாகிஸ்தான் பருத்தியின் முக்கிய உற்பத்தியாளராக உள்ளது. ஆனால் தற்போது ஜவுளி ஏற்றுமதியில் வங்கதேசத்தை விட பின்தங்கியுள்ளது.

ஐம்பத்திரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் பொருளாதார முன்னேற்றம், மொத்த உள்நாட்டு உற்பத்தி, தனிநபர் வருமானம், வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் வறுமை ஆகிய பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் உலக வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில் ஒப்பிடப்பட்டது.

இந்தியாவின் உதவியுடன் பிறந்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

1972 ஆம் ஆண்டில், வங்கதேசம் மைனஸ் 13 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.

வங்கதேசம் – பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம்

1971 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி நிறுவப்பட்ட முதல் ஆண்டில் அதாவது 1972 ஆம் ஆண்டில், வங்கதேசம் மைனஸ் 13 சதவிகித பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.

உலக வங்கி இணையதளத்தில் உள்ள தரவுகளின்படி, அதே ஆண்டில் பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் 1 சதவீதமாக இருந்தது.

இரு பிராந்தியங்களின் பொருளாதாரமும் போரினால் சீரழிந்தது. ஆனால் பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் அடுத்த ஆண்டில் ஏழு சதவீதமாக இருந்தது, வங்கதேசத்தின் வளர்ச்சி விகிதம் எதிர்மறையாக இருந்தது.

வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1 ஆம் தேதி தொடங்கி அடுத்த ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி முடிவடைகிறது.

52 ஆண்டுகளுக்குப் பிறகு, பொருளாதார ஆய்வின்படி, பாகிஸ்தானின் வளர்ச்சி விகிதம் ஜூன் 30-2023 இல் முடிவடைந்த நிதியாண்டில் 1 சதவீதத்திற்கும் குறைவாக அதாவது 0.29 சதவீதமாக இருந்தது.

மறுபுறம், அதே நிதியாண்டில் வங்கதேசத்தின் பொருளாதார மதிப்பாய்வின் படி, அதன் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6 சதவீதமாக இருந்தது.

வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 12-13 ஆண்டுகளாக தொடர்ந்து 6 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்பதை அறியலாம். மறுபுறம், பாகிஸ்தானின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த பத்து-பன்னிரெண்டு ஆண்டுகளில் மூன்று முதல் நான்கு சதவீதமாக உள்ளது. அதில் இரண்டு ஆண்டுகளாக ஒரு சதவீதத்திற்கும் குறைவாக இருந்தது.

தற்போது, ​​வங்கதேசத்தின் பொருளாதாரத்தின் அளவு 454 பில்லியன் டாலர்கள். பாகிஸ்தானின் பொருளாதாரம் 340 பில்லியன் டாலர்கள்.

பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரான அடில் மாலிக் பிபிசியிடம் பேசுகையில், வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1990 இல் 0.2 சதவீதமாக இருந்தது. அதன் பிறகு அது மேம்படத் தொடங்கியது. மேலும் அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து 2022க்குள் ஆறு சதவிகிதம் என்ற நிலையை எட்டியது என்றார்.

இந்தியாவின் உதவியுடன் பிறந்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.

இரு நாடுகளின் தனிநபர் வருமானம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் தனிநபர் வருமானமும் கடந்த 52 ஆண்டுகளில் மிகப்பெரிய வித்தியாசத்தைக் கண்டுள்ளது. உலக வங்கியின் தரவுகளின்படி, வங்காளதேசத்தின் தனிநபர் வருமானம் 1972 இல் 90 டாலர், பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் 150 டாலர்.

இந்த காலகட்டத்தில் வங்காளதேசத்தின் தனிநபர் வருமான வளர்ச்சி சீராக உயர்ந்து வருகிறது. அதே நேரத்தில் பாகிஸ்தானின் தனிநபர் வருமான வளர்ச்சி இந்தக் காலகட்டத்தில் ஏறி இறங்குகிறது.

பாகிஸ்தானின் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த நிதியாண்டின் இறுதியில் பாகிஸ்தானின் தனிநபர் வருமானம் 1,568 டாலர். ஒப்பிடுகையில், வங்கதேசத்தின் பொருளாதார மதிப்பாய்வின்படி, அந்நாட்டு குடிமக்களின் தனிநபர் வருமானம் 2,687 டாலர்.

இந்தியாவின் உதவியுடன் பிறந்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தொழில் துறையில் முதலீடு செய்பவர்களைப் பயன்படுத்திக்கொள்வதில் வங்கதேச அரசு முனைப்பு காட்டுகிறது.

இரு நாடுகளின் ஏற்றுமதி

கடந்த 52 ஆண்டுகளில் வெளிநாட்டு வர்த்தகத் துறையில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் செயல்பாடுகளும் நிறைய மாறியுள்ளன.

உலக வங்கியின் கூற்றுப்படி, 1972 இல் வங்கதேசத்தின் ஏற்றுமதி 350 மில்லியன் டாலராக இருந்தது. அந்த ஆண்டு பாகிஸ்தானின் ஏற்றுமதி வங்கதேசத்தின் 675 மில்லியன் டாலர்களை விட இருமடங்காக இருந்தது.

52 ஆண்டுகளில் ஏற்றுமதி துறையில் வங்கதேசத்தின் முன்னேற்றம் வியக்க வைக்கிறது. குறிப்பாக கடந்த இருபது ஆண்டுகளில் இதன் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது.

கடந்த நிதியாண்டில் வங்கதேசத்தின் பொருட்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 64 பில்லியன் டாலர்கள் ஆகும், இதில் 55 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதியும், 9 பில்லியன் டாலர் அளவுக்கு சேவைகளும் ஆகும்.

ஒப்பீட்டு அளவில் பார்த்தால், கடந்த நிதியாண்டில் பாகிஸ்தானின் மொத்த ஏற்றுமதி 35 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதில் 27 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், 8 பில்லியன் டாலர்கள் அளவுக்கு சேவைகள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

இந்தியாவின் உதவியுடன் பிறந்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

தொழில் துறையை வலிமையான துறையாக மாற்ற வங்கதேச அரசு பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் வறுமை விகிதம்

பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தின் வறுமை விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், கடந்த 52 ஆண்டுகளில் பெரும் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, வங்கதேசத்தில் வறுமை விகிதம் 2016ல் 13.47 சதவீதமாக இருந்தது. 2022ல் 10.44 சதவீதமாகக் குறைந்தது.

உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி, வங்கதேசத்தில் வறுமை விகிதம் 2000 இல் 49 சதவீதமாக இருந்தது. ஆனால் அதன் விகிதம் இரண்டு தசாப்தங்களில் கணிசமாகக் குறைந்துள்ளது.

உலக வங்கியின் கூற்றுப்படி, பாகிஸ்தானின் வறுமை விகிதம் கடந்த நிதியாண்டில் 39.4 சதவீதத்தை எட்டியுள்ளது, அதே நேரத்தில் பாகிஸ்தானின் வறுமை விகிதம் 2018 இல் 22 சதவீதமாக இருந்தது.

இந்தியாவின் உதவியுடன் பிறந்த வங்கதேசம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வங்கதேசத்தில் மேற்கொள்ளப்படும் ஆடைத் தொழில் துறையில் பெண்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

பாகிஸ்தானை விட வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கான காரணம் என்ன?

இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து வங்கதேசத்தின் பொருளாதார வெற்றிக்கான காரணங்கள் குறித்து பொருளாதார நிபுணர்களிடம் கேட்டபோது, ​​ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியரான அடில் மாலிக், “வங்கதேசத்தின் வளர்ச்சி மற்றும் நடப்பு நூற்றாண்டில் பாகிஸ்தானின் வளர்ச்சியை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டால், இரு நாடுகளிலும் பின்தங்கியிருப்பதற்கு மிகப்பெரிய காரணம் தற்போதுள்ள மேல்தட்டு வர்க்கத்தின் சிந்தனை மற்றும் பார்வையில் வேறுபாடு உள்ளது என்பது தான்,” என்றார்.

“வங்கதேசத்தில் சிறப்பு வகுப்பாக இருந்தாலும், அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, தொழிலதிபர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் ஒரு விஷயத்தில் உடன்படுகிறார்கள். அதாவது நாட்டில் தொழில்துறையை ஊக்குவிப்பதன் மூலம் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்.”

மேலும், “பிரதமர் முதல் தொழிற்சாலை ஊழியர்கள் வரை இதில் ஒருமித்த கருத்து உள்ளது. மறுபுறம் பாகிஸ்தானில் அரசியல் மற்றும் ராணுவத்தின் உயரடுக்குகளில் இருப்பவர்கள் ரியல் எஸ்டேட் துறையில் முழு கவனம் செலுத்தி அனைவரும் அதில் வேலை செய்து வருகின்றனர்,” என்றார்.

முன்னாள் அதிபரும் ராணுவ தளபதியுமான பர்வேஸ் முஷாரஃப், “ஒரு காலத்தில் பாகிஸ்தானுக்கு ஏராளமான வெளிநாட்டு பணம் வந்தது, ஆனால் அது அனைத்தும் ரியல் எஸ்டேட்டில் இழக்கப்பட்டது. இதற்கிடையில் வங்கதேசம் உற்பத்தி துறையில் கவனம் செலுத்தி எங்களை முந்தியது,” என்று கூறினார்.

அடில் மாலிக் கூறுகையில், “வங்கதேசத்தில் உயரடுக்கு நலன்கள் தொழில்துறையுடன் தொடர்புடையவை என்பதுடன் பாகிஸ்தானில் உயரடுக்கு நலன்கள் ரியல் எஸ்டேட்டுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன. இதுவே மிகப்பெரிய வித்தியாசம். இது கடந்த 20 ஆண்டுகளில் இரு நாடுகளிலும் வெவ்வேறு பொருளாதார நிலைமைகளை உருவாக்கியுள்ளது,” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “வங்கதேசத்தை பாகிஸ்தான் மற்றும் இந்தியாவிலிருந்து வேறுபடுத்துவதற்கான மற்றொரு காரணம், முதலில், நிலச் சீர்திருத்தத்தின் மூலம் அங்கு ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்டது. இரண்டாவதாக, இந்தியாவைப் போல சாதிப் பிரச்சனை இல்லை,” என தெளிவுபடுத்தினார்.

“தொழிற்சாலை உரிமையாளர் மற்றும் அவரது தொழிலாளர்களின் சமூக அந்தஸ்து சமமாக உள்ளது என்பதுடன் ஒரு தொழிலாளி அங்கு முன்னேறி ஒரு தொழிற்சாலையை நிறுவினால், அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.”

அடிலின் கூற்றுப்படி, வங்கதேசத்தின் கல்வி முறை உலகமயமாக்கப்பட்டுள்ளது, இதன் காரணமாக அனைவருக்கும் கல்வி எளிதாகக் கிடைக்கிறது.

“எனவே இன்றைய நிலைமை என்னவென்றால், பாகிஸ்தானில் தற்போது 22 மில்லியன் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் உள்ளனர். வங்கதேசத்தில் அத்தகைய குழந்தைகளின் எண்ணிக்கை 72 ஆயிரம் மட்டுமே.”

எல்லாவற்றிற்கும் மேலாக, வங்கதேசத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதி நிலவுகிறது, இதன் காரணமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி சாத்தியமாகிறது. மறுபுறம், பாகிஸ்தான் அரசியல் ஸ்திரமின்மை, பயங்கரவாதம் மற்றும் அமைதி காக்கும் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. இது பொருளாதாரத்தை மோசமான நிலைக்கு தள்ளியதுடன் பாகிஸ்தானின் கொள்கைகளின் தொடர்ச்சியாக ஒரு பற்றாக்குறையும் இருந்தது.

பிபிசியிடம் பேசிய பாகிஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆப் டெவலப்மென்ட் பொருளாதார நிபுணர் டாக்டர். ஹஃப்சா ஹினா, “பாகிஸ்தானுக்கு பல சவால்கள் உள்ளன. மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால் ஸ்திரத்தன்மையற்ற நாணய மாற்று விகிதமாகும். இது எப்போதும் கட்டுப்படுத்த முயற்சி செய்யப்பட்டுவந்தாலும், பாகிஸ்தானின் ஏற்றுமதியை வெகுவாகப் பாதித்துள்ளது.”

“அதேபோல், நாட்டில் உள்ள தொழில்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்காக கட்டணங்கள் மிக அதிக அளவில் இருக்கின்றன. இதன் காரணமாக விளைந்த ஒரு பாதக அம்சமாக பாகிஸ்தானின் தொழில்துறை சர்வதேச போட்டிக்கு தயாராக முடியவில்லை. உள்நாட்டு நுகர்வைச் சார்ந்து ஏற்றுமதி துறை வளர்ச்சியடையவில்லை. மறுபுறம், பாகிஸ்தானில் எரிசக்தி கட்டணங்கள் தொழில்துறையில் மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாக உலகளவில் போட்டியிடும் அளவுக்கு பாகிஸ்தானால் முன்னேற முடியவில்லை.”

ஆடை ஏற்றுமதியில் பாகிஸ்தான் எப்படி பின்தங்கியது?

கடந்த இரண்டு தசாப்தங்களில் வங்கதேசம் ஆடைத் துறையில் அபரிமிதமான முன்னேற்றத்துடன் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பாகிஸ்தானின் ஜவுளி ஏற்றுமதியான 10 பில்லியன் டாலர்களுடன் ஒப்பிடுகையில், வங்கதேசம் கடந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளுக்கு 42 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.

ஆடைத் துறையில் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய நாடு வங்கதேசம்.

பேராசிரியர் அடீலின் கூற்றுப்படி, வங்கதேசம் ஆடைத் துறையில் மட்டும் மூன்றரை பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

உலகின் பிற நாடுகளைத் தவிர, பாகிஸ்தானில் இருந்தும் வங்கதேசத்தில் மூலதனம் முதலீடு செய்யப்பட்டது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த ஆடைத் தொழிலதிபரான ஃபரூக் இக்பால், வங்கதேசத்தில் பணிபுரிந்து, அங்கு அலுவலகம் நடத்தி வருகிறார்.

பிபிசியிடம் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட அவர், “அங்குள்ள நல்ல அமைதியும், ஒழுங்கும்தான் பெரிய காரணம். யாருக்கும் பிஸ்டல் லைசென்ஸ் கூட கொடுப்பதில்லை. இரண்டாவதாக, சகிப்புத்தன்மை அதிகம், அதற்கு உதாரணம் என்றால் ஒரு வெளிநாட்டு முதலீட்டாளர் அங்கு வரும் போது, அதைப் பயன்படுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.”

அவரது அனுபவத்தின் அடிப்படையில், “அங்குள்ள உழைப்பு மிகவும் மலிவானது என்பதுடன் அவர்களின் தயாரிப்புகளின் தரம் மிகவும் நன்றாக உள்ளது. எரிவாயு மற்றும் மின்சாரம் கிடைப்பதில் தடைகள் இல்லை என்பதுடன் அதற்கான கட்டணங்களும் மலிவானதாகவே இருக்கிறது.”

பாகிஸ்தானின் சிந்துவில் இருந்து வங்கதேசத்தில் ஆடைத் துறையில் முதலீடு செய்துள்ள அட்னான் ஜாபர், “வங்கதேசத்தில் உள்ள தொழிற்சாலைகளுக்கு ஏராளமான வசதிகள் அளிக்கப்படுகின்றன. எளிமையாக இரண்டு நாட்களுக்குள் மின்சாரம், எரிவாயு மற்றும் நீர் இணைப்புகள் கிடைக்கும். அதே நேரத்தில் எரிவாயு இணைப்புகளும் வேகமாக வழங்கப்படுகின்றன. இது போன்ற எந்த வசதியும் பாகிஸ்தானில் இல்லை. அங்கே மின்சார இணைப்பு பெற இரண்டு ஆண்டுகள் ஆகும்,” என்றார்.

வங்கதேசத்தில் உள்ள தனது தொழிற்சாலையின் பணிகளை பாகிஸ்தானில் இருந்து ஆன்லைனில் பார்த்து வருவதாகவும், இதுவரை எந்த பிரச்னையையும் சந்திக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

பாகிஸ்தானில் உள்ள ஆடைத் துறை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் அஜாஸ் கோகர் கூறுகையில், ஆடைத் துறையில் வங்கதேசம் முன்னேறுவதற்கு அதன் தயாரிப்பு வரிசையும் ஒரு காரணம் என்றார்.

“அவர்கள் பிராந்தியத்தில் நிறைய தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறார்கள். அதே நேரத்தில் நாங்கள் இதுவரை நான்கைந்து தயாரிப்புகளை மட்டுமே ஏற்றுமதி செய்ய முடிந்தது.”

“பெண்களின் உள்ளாடைகளில் வங்கதேசம் முன்னணியில் இருக்கும் போது பாகிஸ்தானில் மிகக் குறைவான சட்டைகள், குறிப்பாக பெண்களுக்கான ஆடைகள் தயாரிக்கப்படுகின்றன” என்று அவர் கூறினார்.

“அவர்களின் பணியாளர்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர். வங்காளதேசத்தில், ஆடைத் துறையில் 80 சதவீத பணியாளர்கள் பெண்கள் மற்றும் 20 சதவீதம் ஆண்கள்,” என்று அவர் கூறினார்.

“பெண்கள் எட்டு மணி நேர ஷிப்டில் ஏழரை மணி நேரம் வேலை செய்கிறார்கள். மறுபுறம், ஆண்களுக்கு இது ஐந்து முதல் ஆறு மணி நேரம் மட்டுமே,” என்று அவர் கூறினார்.

“பாகிஸ்தானில் பெண்கள் ஆடைத் துறையில் பத்து சதவீதம் மட்டுமே வேலை செய்கிறார்கள்.”

“மேலும் வங்காளதேசத்தில் பெரிய ஆடைத் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது என்பதுடன் அது முப்பது முதல் நாற்பது சதவிகிதம் வரை உள்ளது. பாகிஸ்தானில் இது ஏழு சதவிகிதம் மட்டுமே.”

பாகிஸ்தானில் தொழில் துறையில் பணிபுரியும் பெண்கள் குறித்து டாக்டர் ஹஃப்சா கூறுகையில், வங்கதேசத்தில் தொழிற்சாலை மிகவும் ஈர்க்கக்கூடியதாக உள்ளது. ஆனால் பாகிஸ்தானில் அதற்கு நேர்மாறாக உள்ளது.

“அரசாங்கம் பெண்களுக்கு எந்த தொழில்நுட்பக் கல்வியையும் வழங்குவதற்குப் பதிலாக, ஒவ்வொரு அரசாங்கமும் வெவ்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் வழங்கும் சில ஆயிரம் ரூபாய்களை வழங்குகிறார்கள். அப்படியிருக்கும்போது பெண்கள் எவ்வாறு உற்பத்தி அமைப்பில் ஒரு பகுதியாக இருக்க முடியும்?”

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *