பட மூலாதாரம், TNDGP OFFICE
புதன் கிழமையன்று சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் மீது கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார்
ஆளுநர் மாளிகை முன்பாக பெட்ரோல் குண்டை வீசிய கருக்கா வினோத் என்பவரை ஜாமீனில் எடுத்தது பாஜக.வைச் சேர்ந்த வழக்கறிஞர் என தி.மு.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த பிற வழக்கறிஞர்கள் திமுக.வினர் எனக் குற்றம்சாட்டுகிறது பாஜக. என்ன நடந்தது?
புதன் கிழமையன்று சென்னை கிண்டியில் உள்ள தமிழக ஆளுநர் மாளிகையின் மீது கருக்கா வினோத் என்ற நபர் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினார். இது ஆளுநர் மாளிகை முன்புறத்தில் உள்ள சாலையில் விழுந்து வெடித்தது. ஆளுநர் மாளிகையின் முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அவரைப் பிடித்தனர்.
கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அந்த நபர், நீதித் துறை நடுவர் முன்பாக ஆஜர் செய்யப்பட்டு பிறகு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் மிகப் பெரிய அரசியல் சர்ச்சையாக உருவெடுத்தது. இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, “ஆளுநர் மாளிகை மீது இன்று பிற்பகலில் தாக்குதல் நடத்தப்பட்டது. வெடிகுண்டுகளை ஏந்திய விஷமிகள் பிரதான வாயில் வழியாக உள்ளே நுழைய முயன்றனர். எனினும் உஷாராக இருந்த காவலர்கள் தடுத்ததால், இரண்டு பெட்ரோல் குண்டுகளை ராஜ் பவனுக்குள் வீசி விட்டு தாக்குதல் நடத்தியவர்கள் தப்பினர்” என்று கூறியது.
பட மூலாதாரம், TNDGP OFFICE
சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் அன்றைய தினமே நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.
பட மூலாதாரம், RAJBHAVAN,TN/TWITTER
இதற்குப் பிறகு, வியாழக்கிழமையன்று மற்றொரு அறிக்கையை வெளியிட்ட ஆளுநர் மாளிகை, ஆளுநர் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாகவும் ஆனால், அந்தப் புகார்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப்படுவதில்லை என்றும் கூறியது.
பட மூலாதாரம், RAJBHAVAN,TN/TWITTER
இதற்குப் பிறகு மீண்டும் ஒரு ட்விட்டர் அறிக்கையை வெளியிட்ட ராஜ்பவன், “அவசர கதியில் கைது மேற்கொள்ளப்பட்டு, மாஜிஸ்ட்ரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுவிட்டதால், பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” என்று கூறியது.
பட மூலாதாரம், RAJBHAVAN,TN/TWITTER
இதையடுத்து தமிழ்நாடு காவல்துறையின் சார்பில் ஒரு விரிவான விளக்க அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டது ஒரே ஒரு நபர் என்றும் ஆளுநர் மாளிகை சொல்வதைப் போல பலர் ஈடுபடவில்லை என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
அதேபோல, முந்தைய சம்பவங்கள் எதிலும் ஆளுநர் தாக்கப்படவில்லையென்றும் ஆளுநரின் வாகன வரிசைக்குப் பின்னால் வந்த வாகனங்கள் மீதே கொடிகள் வீசப்பட்டன என்றும் அது தொடர்பாக வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது என்றும் விளக்கமளிக்கப்பட்டது.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்ட தமிழக சட்டத் துறை அமைச்சர் ஆர். ரகுபதி, ஆளுநர் மாளிகை சம்பவத்தில் ஈடுபட்ட கருக்கா வினோத்தை சிறையில் இருந்து ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பா.ஜ.கவைச் சேர்ந்தவர் எனக் குற்றம்சாட்டினார்.
பட மூலாதாரம், REGUPATHYMLA/TWITTER
இது தொடர்பான ஆதாரங்கள் தி.மு.கவின் ஐடி விங் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டன.
இதற்குப் பதில் சொல்லும் விதத்தில் தமிழ்நாடு பா.ஜ.கவின் சார்பில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவில், “ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்திய கருக்கா வினோத் என்ற நபரை சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே கொண்டு வந்தது, திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவர் என்பது தெரிய வருகிறது. பாஜக வழக்கறிஞர் என்று பரப்பப்படும் முத்தமிழ் செல்வன் என்பவர் தமிழக பாஜக கட்சி பொறுப்பிலிருந்து 2021ஆம் ஆண்டே விலகிவிட்டார்.
அது மட்டும் அல்லாது திமுக நிர்வாகிகள் இசக்கிபாண்டி மற்றும் நிசோக் ஆகிய இருவரும் முத்தமிழ் செல்வனிடம் அனுமதி பெறாமல் அவரது பெயரை பயன்படுத்தி ஜாமீன் பத்திரத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் என்று செய்திகளும் வருகிறது. தமிழக பாஜக அலுவலகத்தை தாக்கிய ஒருவரை திமுகவினர் ஜாமினில் எடுத்துள்ளது. இதில் திமுகவினர் சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற சந்தேகத்தை வலுப்படுத்துகிறது” என்று கூறப்பட்டிருந்தது.
கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த முத்தமிழ் செல்வன் யார் ?
பட மூலாதாரம், HANDOUT
உண்மையில், கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் முத்தமிழ் செல்வன் யார், அவர் ஏன் கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்தார்?
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் ஒரு சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளி. கடந்த 2015ஆம் ஆண்டு தியாகராய நகரில் உள்ள தெற்கு போக் சாலையில் இருக்கும் டாஸ்மாக் கடை மீது இவரும் இவருடைய கூட்டாளிகள் சிலரும் பெட்ரோல் குண்டு வீசினர். இதையடுத்து அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி இதனைச் செய்ததாகச் சொன்னார். இதற்குப் பிறகு 2017ஆம் ஆண்டில் தேனாம்பேட்டை காவல் நிலையம் மீது மண்ணெண்ணெய் குண்டு வீசியதற்காக கைதுசெய்யப்பட்டார்.
இதற்குப் பிறகு, 2022ஆம் ஆண்டு பிப்ரவரி பத்தாம் தேதி தமிழ்நாடு பா.ஜ.க. தலைமையகமான கமலாலயம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசினார். நீட் விவகாரம் தொடர்பான பா.ஜ.கவின் நிலைப்பாட்டைக் கண்டித்து இந்த குண்டுகளை வீசியதாகச் சொன்னார். அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்தது காவல்துறை.
இவர் மீது 4 கொலை முயற்சி வழக்கு உட்பட பத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசிய விவகாரத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கருக்கா வினோத், விசாரணைக் கைதியாகவே சிறையில் இருந்துவந்தார்.
இந்த நிலையில்தான் அவர் பிணையில் வெளிவந்து இந்த குண்டு வீச்சில் ஈடுபட்டிருக்கிறார். அவருக்கான பிணை மனுவை பி. முத்தமிழ் செல்வகுமார் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்து, அவருக்கான பிணையை பெற்றுத் தந்திருக்கிறார்.
இது குறித்து வழக்கறிஞர் முத்தமிழ் செல்வகுமாரிடம் கேட்டபோது, “இந்த விவகாரத்திற்கும் அரசியலுக்கும் சுத்தமாக தொடர்பே கிடையாது. வினோத் விசாரணைக் கைதியாகவே நீண்ட நாட்கள் சிறையில் இருந்தார். அவருடைய பெற்றோரும் அவரை சிறையில் இருந்து வெளியில் கொண்டுவருவதில் ஆர்வம் காட்டவில்லை.
இதனால், அவரை பிணையில் கொண்டுவர உதவும்படி அவருடைய மனைவி கேட்டுக்கொண்டார். அதன் அடிப்படையிலேயே அவருக்கான பிணை மனுவை தாக்கல் செய்தேன். இதில் வேறு எந்த அரசியலும் இல்லை” என்று தெரிவித்தார்.
அவருடைய பா.ஜ.க. தொடர்புகளைப் பற்றிக் கேட்டபோது, “நான் 2020ல் பா.ஜ.கவில் இருந்தேன். ஆனால், அதற்குப் பிறகு 2021வாக்கில் விலகிவிட்டேன். இப்போது எந்தக் கட்சியிலும் இல்லை” என்றார் அவர்.
அந்த மனுவில் இடம்பெற்றுள்ள ஏ. எசக்கி பாண்டி, வி.ஜி. நிஷோக் ஆகிய வழக்கறிஞர்கள் குறித்தும் 2022ல் மீண்டும் பா.ஜ.கவில் அவர் பொறுப்பில் நியமிக்கப்பட்டதாக கூறப்படுவது குறித்தும் கேட்டபோது, “எசக்கி பாண்டியும் நிசோக்கும் என்னுடைய ஜூனியர்கள். அதில் எந்த அரசியலும் இல்லை. 2021க்குப் பிறகு நான் எந்த அரசியல் கட்சியிலும் இல்லை” என்கிறார் முத்தமிழ் செல்வகுமார்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
