கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் சிதைவது எப்படி? என்ன நடக்கிறது?

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் சிதைவது எப்படி? என்ன நடக்கிறது?

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?
படக்குறிப்பு,

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரை சேர்ந்தவர் சிம்ரன்ஜித் கௌர்.

“கனடாவுக்கு வர வேண்டும் என்ற எனது கனவு ஆறு முறை உடைந்து போனது, ஏழாவது முறையாக கனடா வந்தபோதும், நான் இன்னும் கடினமான சூழலில் சிக்கியிருக்கிறேன்.”

சஹஜ்ப்ரீத் சிங்கின் வார்த்தைகள் இவை. அவர் சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்தார், ஆனால் முகவர் மற்றும் கல்லூரியின் மோசடிக்கு பலியாகிவிட்டார்.

சஹஜ்ப்ரீத் சிங்கின் மாணவர் விசா தூதரகத்தால் ஆறு முறை நிராகரிக்கப்பட்டது. சஹஜ்பிரீத்தின் கூற்றுப்படி, சண்டிகர் முகவர் அவரை ஒரு தனியார் கல்லூரியில் சேர்த்தார், அதன் அடிப்படையில் அவர் எதிர்காலத்தில் பணி அனுமதி பெற முடியாது. இந்த விஷயம், கனடாவுக்கு வந்த பிறகுதான் வருக்குத் தெரியவந்தது.

சஹஜ்ப்ரீத்தின் கூற்றுப்படி, கல்லூரி இனி அவருக்கு எந்த வகையிலும் உதவ தயாராக இல்லை.

இந்த விஷயம் தொடர்பாக பேச முயற்சி செய்தபோது, முகவர் தொலைபேசியை எடுக்கவில்லை என்றும், இதுதொடர்பாக கல்லூரி எந்த உறுதியான பதிலையும் கொடுக்கவில்லை என்றும் சஹஜ்ப்ரீத் சிங் கூறுகிறார்.

சண்டிகரை சேர்ந்த முகவர் தான் தனது படிப்பு மற்றும் கல்லூரியை முடிவு செய்ததாகவும், விசாவைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதாகவும் அவர் கூறுகிறார்.

சஹஜ்ப்ரீத்தின் விசா வந்ததும், சம்பந்தப்பட்ட முகவர் தனது விளம்பரத்திற்காக ஒரு வீடியோவை உருவாக்கினார், அதில் அவர் தனது விசாவை ஆறு முறை நிராகரித்த பிறகு, கனடா தூதரகத்திலிருந்து விசா கிடைத்தது எப்படி என்று அந்த முகவர் கூறினார். சம்பந்தப்பட்ட முகவரின் சமூக ஊடகங்களில் இந்த வீடியோ இன்னும் உள்ளது.

சஹஜ்ப்ரீத் சிங், முகவர் தன்னிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பெற்றதாகக் கூறுகிறார், அதில் 14,000 டாலர்கள் கல்லூரிக் கட்டணம், ஜிஐசி (GIC) எனப்படும் முதலீட்டு இருப்பு உறுதிப்படுத்துதல் சான்றிதழ் மற்றும் பிற செலவுகள் அடங்கும்.

கல்லூரி கட்டணம் குறித்து முகவர் பொய் சொல்லியதாக கூறும் அவர், தன் கல்விக் கட்டணம் 8000 டாலர்கள் என்றும் மீதமுள்ள பணத்தை முகவரே வைத்துக்கொண்டதாகவும் கூறுகிறார். இந்த விவகாரத்தில், பிபிசி சஹஜ்ப்ரீத் சிங்கின் சண்டிகரைச் சேர்ந்த முகவரைத் தொலைபேசியில் பலமுறை தொடர்புகொள்ள முயன்றும், அவர் எங்களிடம் பேசவில்லை.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?
படக்குறிப்பு,

சஹஜ்ப்ரீத் சிங், முகவர் தன்னிடம் இருந்து ரூ.12 லட்சத்தை பெற்றதாகக் கூறுகிறார்.

கனடா வருவதற்கு கல்வி ஒரு படிக்கல்லா?

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் வசிப்பவர் 23 வயதான சஹஜ்ப்ரீத் சிங். 19 லட்சம் செலவு செய்து முகவர் உதவியுடன் 2023 நவம்பர் மாதம் படிப்புக்காக கனடா வந்தார். இவர் மருத்துவமனை நிர்வாகத்தில் இரண்டாண்டு படிப்புக்காக கனடா வந்தார்.

கடந்த மூன்று மாதங்களில் ஒருமுறை கூட படிப்பிற்காக கல்லூரிக்கு செல்லவில்லை என்று சஹஜ்ப்ரீத் சிங் கூறுகிறார். இவர் தன் குடும்பத்தில் ஒரே மகன்.

அவரது கல்லூரி சர்ரேயில் உள்ளது. சஹஜ்ப்ரீத் பிராம்ப்டனில் வசிக்கிறார். ஒருநாள் தனது நண்பர்களுடன் கல்லூரியைப் பார்க்கச் சென்றிருந்ததாகவும், ஆனால் அங்கு சென்றபோது, ​​அப்படியொரு கல்லூரியே இல்லையென்றும் அவர் கூறினார்.

சஹஜ்ப்ரீத் சிங் கூறுகையில், ”அங்கு வாகன நிறுத்துமிடம் மட்டுமே இருந்தது, கல்லூரி கட்டடத்தில் இரண்டு அறைகள் மட்டுமே இருந்தன. உள்ளே வரவேற்பறையும், இரண்டு அறைகளும் காலியாக இருந்தன. வரவேற்பறையில் இரண்டு பெண்கள் இருந்தனர், இதைத் தவிர எந்த வகுப்பறையோ அல்லது பணியாளர்களோ இல்லை” என்றார்.

”எல்லாமே இணையத்தில் உள்ளது, கல்லூரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை” என தன் படிப்பு குறித்து அவர் கூறினார்.

வருகைப்பதிவு மற்றும் ஆவணங்கள் கூட இணையத்தில் உள்ளன. அவர் தனது மடிக்கணினியை என் முன் திறந்து, கல்லூரி இணையதளத்தைக் காட்டினார். அதில் அவருக்கு 97% வருகை இருந்தது.

படிப்பு சார்ந்த பணிகளை (assignment) தானே தயார் செய்வதில்லை என்றும், இந்தியாவிலிருந்து 500 ரூபாய் செலுத்தி அவற்றைத் தயார் செய்து, கல்லூரி இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதாகவும் கூறுகிறார். ஒவ்வொரு மாதமும் அவர் 80 சதவீத மதிப்பெண்கள் பெற்ற தாள்கள், இணையதளத்தில் வெளியாகும்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், TRINPAL SINGH

படக்குறிப்பு,

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்த்தைச் சேர்ந்தவர் 23 வயதான சஹஜ்ப்ரீத் சிங்.

சஹஜ்ப்ரீத் சிங் தனது வகுப்பில் 40 மாணவர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்றும், பெரும்பாலும் பஞ்சாப் மற்றும் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்றும் உற்சாகமாக கூறுகிறார்.

இந்த மூன்று மாதங்களில் வகுப்பில் ஆங்கிலம் பேச வேண்டிய அவசியமில்லை, மாறாக அனைத்து உரையாடல்களும் இந்தி மற்றும் பஞ்சாபியில் நடந்ததாக அவர் கூறினார். இருப்பினும், சஹஜ்ப்ரீத் சிங் தனது ஐ.இ.எல்.டி.எஸ் (ஆங்கில மொழி பேசும் நாடுகளில் பணிபுரிய மற்றும் உயர் கல்வி பயில்வதற்கு இந்தத் தேர்வில் தேர்ச்சி பெறுவது அத்தியாவசியமான ஒன்று) மதிப்பெண் 10-க்கு 6 என்று கூறுகிறார்.

என் முன்னே மொபைல் மூலம் வகுப்பில் கலந்துகொண்டு, போனின் ‘மைக்’-ஐ மட்டும் அணைத்துவிட்டு தன் வேலைகளை கவனிக்க ஆரம்பிக்கிறார்.

சஹஜ்ப்ரீத் சிங் தற்போது ஒரு கார் பட்டறையில் பணிபுரிகிறார். கூடவே இணையம் மூலமாக படித்து வருகிறார்.

பிபிசி குழு சஹஜப்ரீத் சிங்குடன் சுமார் இரண்டு மணி நேரம் செலவிட்டது, இந்த நேரத்தில் ஆன்லைன் வகுப்பு தொடர்ந்தது. ஆசிரியர் தொடர்ந்து விரிவுரைகளை வழங்கிக் கொண்டிருந்தார். இறுதியில் நன்றி கூறிவிட்டு சென்றுவிட்டார்.

இதற்கிடையில், சஹஜ்ப்ரீத் சிங்குக்கு ஆசிரியர் கற்பித்தது பற்றி எதுவும் தெரியாது அல்லது அவர் எதையும் கேட்கவில்லை. அவர்களின் வருகை ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்வதன் அடிப்படையிலேயே பதிவு செய்யப்படுகிறது.

”இங்கு படிப்பு பெயரளவில் மட்டுமே உள்ளது, ஆசிரியரை சந்திப்பதை விடுங்கள், இதுவரை ஒரு செய்முறை கூட நடந்ததில்லை” என கூறினார். சஹஜ்ப்ரீத் சிங்கின் வகுப்புகள் வாரத்தில் மூன்று நாட்கள் மொபைல் மூலமாக நடக்கும்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?
படக்குறிப்பு,

சகஜ்ப்ரீத் சிங் மோட்டார் பட்டறையில் பணிபுரிகிறார்.

சஹஜ்ப்ரீத் நிலைமைக்கு யார் பொறுப்பு?

முகவரும் கல்லூரி நிர்வாகமும் தன்னை ஏமாற்றி விட்டதாக சஹஜ்ப்ரீத் சிங் கூறுகிறார். இருந்தும் அவர் யார் மீதும் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ”கனடாவுக்கு எப்படியாவது வர வேண்டும் என்பதே தனது நோக்கமாக இருந்தது, அது நிறைவேறிவிட்டது, இப்போது நடவடிக்கை எடுப்பதால் எதுவும் கிடைக்காது” என்கிறார்.

கனடாவில் தனது எதிர்காலம் என்ன என்பது குறித்து தற்போது அவருக்கு உறுதியாக தெரியவில்லை. சஹஜ்ப்ரீத் சிங் வேறொரு கல்லூரியில் சேருவதற்கு முயற்சிப்பதாகவும் படிப்பை முடித்தவுடன் பணி அனுமதி பெறலாம் என்றும் அவர் கூறுகிறார்.

பணம் மற்றும் ஓராண்டு விரயம் குறித்து, சஹஜ்ப்ரீத் சிங் கூறுகையில், கனடா என்ற ‘பேய்’ தன்னை துரத்தியதாகவும் எப்படியாவது கனடா செல்ல வேண்டும் என தான் விரும்பியதாகவும் கூறினார்.

“கனடாவிற்கு வர வேண்டாம் என்று நண்பர்கள் என்னை வற்புறுத்தினர். ஆனால் நான் ஒப்புக் கொள்ளவில்லை, நான் இங்கு வந்து பார்த்தபோது, ​​​​இங்கே யதார்த்தம் வேறுவிதமாக இருந்தது.”

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், GETTY IMAGES

நேபாளத்தைச் சேர்ந்த சுமன் ராயின் போராட்டக் கதை

சுமன் ராய் செப்டம்பர் 2023-ல் மாணவர் விசாவில் தனது மனைவியுடன் கனடா வந்தார். அவர் நேபாளத்தில் வசிப்பவர். கடந்த சில ஆண்டுகளில் கனடாவில் நேபாள மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது.

சுமன் ராய் நேபாளி வம்சாவளியைச் சேர்ந்த மற்ற மாணவர்களுடன் அவர் வசிக்கும் வீட்டிற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

மற்ற இந்திய மாணவர்கள் கனடாவில் வீடுகளில் தங்காமல் கீழ்தளத்தில் தரையில் படுக்கை விரிப்புகள் மட்டுமே உள்ள இடத்தில் வசிக்கின்றனர். அப்படி அல்லாமல், சுமன் ராய் ஒரு வீட்டில் வசிக்கிறார். அங்கு ஐந்து மெத்தைகள் தரையில் விரிக்கப்பட்டிருந்தன. வீடு மற்றும் சமையலறை முழுவதும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் அவர்களின் வாழ்க்கைத் தரத்தைப் பற்றிச் சொல்ல போதுமானதாக இருந்தது.

கனடாவில் கல்வி பற்றி பேசும் சுமன் ராய், தனது வகுப்புகளில் 95 சதவீதம் இந்திய மாணவர்கள் என்றும், இங்குள்ள தனியார் கல்லூரிகளின் கல்வித்தரம் அவ்வளவு நன்றாக இல்லை என்றும் கூறுகிறார்.

கனடாவின் தற்போதைய நிலைமை குறித்து சுமன் ராய் கூறும்போது, ​​“நான் மிக அவசரமாக இங்கு வர முடிவு செய்தேன்” என்கிறார்.

எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கும் சுமன் ராய், இந்த நாட்டின் தற்போதைய நிலைமை சரியில்லாததால், தற்போது அதைப் பற்றி எதையும் புரிந்துகொள்ள முடியவில்லை என்று கூறுகிறார்.

தற்போது கனடாவில் வேலைகள், வீட்டுவசதி மற்றும் பணவீக்கம் அதிகரிப்பு ஆகியவை மிகப்பெரிய பிரச்னைகள் என்று அவர் கூறினார்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் வசிக்கும் சுமன் ராய், அங்கும் ஏராளமான முகவர்கள் இருப்பதாகவும், இதன் காரணமாக நேபாள மாணவர்கள் சமீபத்தில் கனடாவுக்கு அதிகமாக வந்துள்ளனர் என்றும் கூறுகிறார்.

கனடாவுக்கு வருவதற்கு முன், இங்குள்ள நிலைமைகள் பற்றிய தகவல்களைப் பெறுவது முக்கியம், முகவர்கள் சொல்வதைக் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம் எனக்கூறும் சுமன், முகவர்களின் ஒரே நோக்கம் பணம் சம்பாதிப்பது என்றார்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், TRINPAL SINGH

படக்குறிப்பு,

தீப் ஹஸ்ராவும் ஒரு சர்வதேச மாணவராக கனடாவுக்கு வந்தார்.

முந்தைய நிலைக்கும் இன்றைய நிலைக்கும் என்ன வித்தியாசம்?

பிராம்ப்டனில் சொந்தமாக தொழில் நடத்தி வரும் தீப் ஹஸ்ரா, கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு சர்வதேச மாணவராக கனடா வந்தார்.

தீப்பின் கூற்றுப்படி, ”முந்தைய நிலைக்கும் இப்போதுள்ள சூழ்நிலைக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. முன்பு, பெரும்பாலான மாணவர்கள் பட்டப்படிப்பு முடித்து கனடாவுக்கு வந்து நல்ல கல்லூரிகளில் சேர்ந்தனர்” என்றார்.

தன்னுடைய அனுபவத்தைக் கூறிய தீப் ஹஸ்ரா, தனது கல்லூரி வளாகம் மிகவும் பெரியது என்றும் பேராசிரியர்கள் தவறாமல் வருவார்கள் என்றும் ஆனால் இப்போது ஆன்லைன் வகுப்புகள் மூலம் மட்டுமே கல்லூரிகள் நிர்வகிக்கப்படுகிறது என்றும் கூறினார்.

தீப்பின் கூற்றுப்படி, கடந்த சில ஆண்டுகளில், முதுகலை டிப்ளமோ படிப்புகளை கனடா தொடங்கியதிலிருந்து, சர்வதேச மாணவர்கள் அதில் அதிகம் சேர்ந்ததாக கூறுகிறார்.

”மாணவர்கள் அதிகம் சுரண்டப்படுகிறார்கள், முதலில் இந்தியாவில் சில முகவர்களால் சுரண்டப்படுகின்றனர், பின்னர் இங்கு வந்த பிறகு சில தனியார் கல்லூரிகளிலும், சில சமயம் ஹோட்டல்களிலும் அவர்கள் வேலை செய்யும் இடங்களில் முதலாளிகளாலும் சுரண்டப்படுகின்றனர்” என்றார்.

கடந்த ஆண்டு கனடாவிற்கு மாணவர் விசாவில் வந்த இந்திய மாணவர்கள் பலரை, பஞ்சாபைச் சேர்ந்த முகவர் ஒருவர் கனடா கல்லூரிகளில் இருந்து போலியான சேர்க்கை கடிதங்கள் என்ற பெயரில் ஏமாற்றியதாக அவர் கூறினார்.

மோசடி ஆவணங்கள் மூலம் கனடா வந்ததாகக் கூறப்படும் நூற்றுக்கணக்கான மாணவர்களை வெளியேற்ற கனடா எல்லை சேவைகள் முகமை தயாரானதால், மாணவர்கள் டொரண்டோ விமான நிலையத்திற்கு அருகில் பல நாட்களாகப் போராட்டம் நடத்தினர்.

பின்னர், கனடா காவல்துறை இந்த மாணவர்களுக்கு போலி ஆவணங்களை வழங்கியதாகக் கூறப்படும் பயண முகவர் பிரிஜேஷ் மிஸ்ராவை கைது செய்தது.

அப்போது, ​​கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்து நாடாளுமன்றத்தில் கூறுகையில், “மோசடிக்கு ஆளானவர்களை தண்டிப்பது அல்ல, குற்றவாளிகளை அடையாளம் காண்பதே எங்களது நோக்கம்” என்றார்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், GETTY IMAGES

பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் சுரண்டல் நடக்கிறதா?

இந்த ஆண்டு ஜனவரியில், கனடாவில் உள்ள அல்கோமா பல்கலைக்கழகத்தின் பிராம்ப்டன் வளாகத்தில் மாணவர்கள் ஒரு சலசலப்பை ஏற்படுத்தினர். பெரும்பாலும் பஞ்சாபிகள் மற்றும் குஜராத்திகள் அடங்கிய சர்வதேச மாணவர்கள் 130 பேர் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தனர். இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பல நாட்கள் இரவும் பகலும் கடும் குளிரில் பல்கலைக்கழகத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான மாணவர்களை ஆசிரியர் ஒருவர் வேண்டுமென்றே தோல்வியடையச் செய்ததாக மாணவர்கள் குற்றம் சாட்டினர். அவர்களுள் சிம்ரன்ஜித் கௌரும் ஒருவர்.

பிபிசியிடம் பேசிய சிம்ரன்ஜித் கௌவுர், 2022 மே மாதம் கனடாவிற்கு மனிதவளம் மற்றும் வணிக மேலாண்மை படிப்பதற்காக வந்ததாக கூறினார்.

அவரது இந்திய முகவர் அவரை தனியார் கல்வி நிறுவனமான அல்கோமா பல்கலைக்கழகத்தில் சேர அறிவுறுத்தினார்.

சிம்ரன்ஜித் கௌர் கூறுகையில், தனது பல்கலைக்கழகத்தில் படிக்கும் பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் உள்ளூர் கனடா மாணவர்கள் மிகக் குறைவு என்றும் கூறினார்.

உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரைச் சேர்ந்த சிம்ரன்ஜித் கௌர், தனக்கும் பல்கலைக்கழகத்தில் உதவித்தொகை கிடைத்ததாகவும், ஆனால் இந்த ஆண்டு ஜனவரியில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்ததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் கூறுகிறார்.

சம்பந்தப்பட்ட பாடப் பேராசிரியரிடம் பேச முயன்றபோது அவர் யாரையும் சந்திக்க மறுத்ததாகவும், அதன் பிறகு பல்கலைக்கழக முதல்வரைத் தொடர்பு கொண்டதாகவும், ஆனால், “அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை, நாங்கள் போராட்டம் நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எங்களுக்கு வேறு வழி இல்லை” என்றும் அவர் கூறினார்.

போராட்டங்களுக்குப் பிறகு, பல்கலைக்கழகம் மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது. அவர்களில் சிலரைத் தவிர்த்து, மற்றவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பை வழங்கியது.

சிம்ரன்ஜித் கௌரின் கூற்றுப்படி, ”பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் பணம் சம்பாதிப்பதற்கான ஒரு வழியாக சர்வதேச மாணவர்களைப் பயன்படுத்துகின்றன” என்கிறார்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

கனடாவில் இந்திய மாணவர் அமைப்பு

கனடாவில் சர்வதேச மாணவர்கள் குறிப்பாக இந்தியர்கள் மீதான சுரண்டலுக்கு எதிராக குரல் எழுப்ப பல மாணவர் அமைப்புகள் கடந்த காலங்களில் உருவாக்கப்பட்டன. அவற்றில் ஒன்றான ‘யூத் சப்போர்ட் நெட்ஒர்க்’ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இது கிரேட்டர் டொரண்டோ பகுதிக்கு, குறிப்பாக இந்திய மற்றும் சர்வதேச மாணவர்களுக்கு சேவை செய்கிறது.

சர்வதேச மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் மீதான சுரண்டலைத் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படும் இந்த அமைப்பில் ஆரம்பம் முதலே பிக்ரம்ஜித் சிங்கும் இணைந்துள்ளார்.

பிக்ரம்ஜித் சிங் பிபிசியிடம் தனது அமைப்பு சமூக ஊடகங்கள் மூலம் செயல்படுகிறது என்றும் கனடாவில் பதிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார்.

ஹோட்டல்கள், பேக்கரி உரிமையாளர்கள் மற்றும் டிரக்கிங் நிறுவனங்கள் சர்வதேச மாணவர்களைச் சுரண்டுவதாக முதலில் தனக்கு புகார்கள் வந்ததாகவும், அவற்றில் பெரும்பாலானவை வெற்றிகரமாக தீர்க்கப்பட்டதாகவும் பிக்ரம்ஜித் சிங் கூறினார். அவரும் கனடாவுக்கு மாணவராக வந்தவர்தான்.

பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிக்ரம்ஜித் சிங், தீர்வு கிடைக்காவிட்டால், தனது வீடு அல்லது பணியிடத்திற்கு வெளியே பொது இடத்தில் நின்று போராட்டம் நடத்தப்படும் என்று கூறுகிறார்.

இந்த அமைப்பின் ’எக்ஸ்’ பக்கத்தை பார்த்தால், இதுபோன்ற ஆர்ப்பாட்டங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அவர்களின் உரிமைகளை எடுத்துரைக்கிறோம் என்றார்.

இந்த அமைப்பு மாணவர்களை வெளியேற்றுவதைத் தடுப்பதிலும் அல்கோமா பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு எதிராகப் போராடுவதிலும் மிகவும் தீவிரமாக உள்ளது.

அவரது அமைப்பில் இதுபோன்ற புகார்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சர்வதேச மாணவர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் தவறான நடத்தைக்கு எதிராக ஏன் சட்ட நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு, இந்த செயல்முறை மிக நீண்டது என்றும், கனடா போன்ற நாட்டில் இதற்கு நேரமில்லை என்றும் பிக்ரம்ஜித் சிங் கூறுகிறார்.

சமீப ஆண்டுகளில் மாணவர்களை ஏமாற்றும் பல சம்பவங்களைத் தொடர்ந்து, இந்திய அரசு மற்றும் மாநில அரசுகள் அவ்வப்போது விழிப்புணர்வு பிரசாரங்களை நடத்தி வருகின்றன.

2022-ம் ஆண்டில், கனடாவில் உள்ள இந்திய உயர் ஆணையரகம் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துவதற்கு முன் முறையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று ஒரு ஆலோசனையை வழங்கியது.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?

பட மூலாதாரம், TRINPAL SINGH

படக்குறிப்பு,

கனடாவில் இந்திய மாணவர்கள் போராட்டம்

கனடா கல்வி நிறுவனங்களில் மோசடி

கடந்த ஆண்டு அக்டோபரில், கனடாவின் குடிவரவு அமைச்சர் மார்க் மில்லர், இங்குள்ள சர்வதேச மாணவர்கள் மோசடிக்கு ஆளாகியுள்ளதாக ஒப்புக்கொண்டார்.

இதற்குப் பிறகு, இதுபோன்ற மோசடிகளில் இருந்து சர்வதேச மாணவர்களைப் பாதுகாக்க, கல்லூரிகள்/பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்படும் ஏற்பு கடிதங்களுக்கு குடிவரவு அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதை கட்டாயமாக்கியுள்ளனர்.

குடிவரவு அமைச்சர் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிட்ட கட்டமைப்பைத் தயாரிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த சில வருடங்களில் பல கல்வி நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கும் நோக்கத்தில் தேவைக்கு அதிகமாக வெளிநாட்டு மாணவர்களை சேர்த்துக்கொண்டதை கனடா அரசாங்கமும் ஒப்புக்கொண்டுள்ளது.

கட்டண வசூலைக் கருத்தில் கொண்டு சில கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை அதிகரித்துள்ளதாக அரசு கூறுகிறது.

இதனால், இந்தக் கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் படிக்க ஏராளமான மாணவர்கள் கனடாவுக்கு வருகின்றனர். கனடாவில் சர்வதேச மாணவர்கள் எதிர்நோக்கும் பிரச்னைகள் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பு சுமைகளை கருத்தில் கொண்டு இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் இரண்டு வருடங்களுக்கு வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை 35 சதவிகிதம் குறைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச மாணவர் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் நிலைப்படுத்துவதற்கும் 2024-ம் ஆண்டுக்குள் தோராயமாக 3,60,000 மாணவர் அனுமதிகளை வழங்க கனடா அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

இதைத் தவிர மற்றொரு பெரிய மாற்றத்தை அரசு செய்துள்ளது. அரசு-தனியார் கூட்டுறவின் கீழ் இயங்கும் கல்லூரிகளில் பட்டம் பெறும் மாணவர்களுக்கு செப்டம்பர் முதல் பணி அனுமதி வழங்கப்படாது.

சஹஜ்ப்ரீத் சிங் குறிப்பிட்ட கல்லூரி பொது-தனியார் கூட்டுறவின் கீழ் தான் செயல்படுகிறது.

கனடாவில் கல்வி என்பது மாகாண அரசாங்கத்தின் கீழ் வருகிறது, மத்திய அரசின் கீழ் அல்ல. இதற்குப் பிறகு, கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா அரசாங்கம் புதிய பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களில் சர்வதேச மாணவர்களின் புதிய சேர்க்கைக்கு இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

கல்வித்துறையில் நிறுவனங்கள் செய்து வரும் மோசடிகளை கருத்தில் கொண்டு பிரிட்டிஷ் கொலம்பியா அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இடைநிலைக் கல்வி அமைச்சர் செலினா ராபின்சன் தனது துறை கடந்த மார்ச் மாதம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதை ஒப்புக்கொண்டார். தரமற்ற கல்வி, ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் சில தனியார் நிறுவனங்கள் முறையான புகார்களை பதிவு செய்ய விடாமல் மாணவர்களை மிரட்டுவது போன்ற புகார்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

கனடா சர்வதேச ஒளிபரப்பு சேவையான சிபிசியின் (CBC) கூற்றுப்படி, 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள 1,75,000 சர்வதேச இரண்டாம் நிலை முதுகலை மாணவர்களில் சுமார் 54 சதவீதம் பேர் தனியார் நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர்.

மாநிலத்தில் 280 தனியார் பள்ளிகள் உள்ளன. அவர்களில் 80 சதவீதம் பேர் லோயர் மெயின்லேண்டில் அதாவது மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளில் உள்ளனர்.

கனடாவில் இந்திய மாணவர்களின் கனவுகள் எப்படி சிதைக்கப்படுகின்றன?
படக்குறிப்பு,

ஜஸ்வீர் ஷமீல், நீண்ட காலமாக டொரண்டோவில் பத்திரிகையாளராக பணி செய்து வருகிறார்.

நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?

நீண்ட காலமாக பிராம்ப்டனில் வழக்குரைஞர் பயிற்சி செய்து வரும் ஹர்மிந்தர் தில்லான், பட்டப்படிப்புகளுக்கு எந்த மதிப்பும் இல்லாத கல்லூரிகள் இங்கு இயங்கி வருவதாகவும் அங்கு படித்தால் எந்த வேலையும் கிடைப்பதில்லை என்றும் கூறுகிறார்.

தில்லானின் கூற்றுப்படி, பல கல்லூரிகள் வணிக வளாகங்களில் இயங்குகின்றன. ஒரே அறையில் பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் விசா பெற்றுள்ளனர்.

ஹர்மிந்தர் சிங் தில்லானின் கூற்றுப்படி, முகவர்கள் மற்றும் கல்லூரிகளின் மோசடியால் பாதிக்கப்படும் மாணவர்கள் கனடாவை விட்டு வெளியேற வேண்டியிருக்கும். இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம்.

மாணவர் விசாவில் வரும் சர்வதேச மாணவர்களுக்கு கனடா அரசு குடியுரிமைக்கான எந்த உத்தரவாதத்தையும் வழங்காது என்று அவர் கூறினார்.

அரசு விதிகளின்படி, நீங்கள் நிபந்தனைகளை பூர்த்தி செய்தால், நீங்கள் நிரந்தர குடியுரிமைக்கு விண்ணப்பிக்கலாம்.

கனடாவுக்கு திறமையான பணியாளர்கள் தேவை, ஆனால் அதிக எண்ணிக்கையிலான சர்வதேச மாணவர்கள் வந்தாலும், திறமையான பணியாளர்கள் பற்றாக்குறையை பூர்த்தி செய்யவில்லை, ஏனெனில் மாணவர்கள் படிப்புக்குப் பிறகு மற்ற வேலைகளை செய்யத் தொடங்குகிறார்கள்.

இங்கு சர்வதேச மாணவர்கள் சுரண்டப்படுவதற்கு முக்கியக் காரணம் கனடா சட்டங்களைப் பற்றி அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதுதான் என்கிறார் டொரண்டோவில் உள்ள பத்திரிகையாளர் ஜஸ்வீர் சிங் ஷமீல்.

அவரைப் பொறுத்தவரை, சர்வதேச மாணவர்களும் புகார் செய்ய பயப்படுகிறார்கள், ஏனெனில் அவர்கள் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று அவர்கள் நினைப்பதாக கூறுகிறார்.

”இந்தியாவில் உள்ள பெற்றோருக்கு, தங்கள் மகன்கள் மற்றும் மகள்கள் கனடாவில் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது தெரியாது. இந்த உண்மை தெரிந்தால் அவர்களை இங்கு அனுப்பவே மாட்டார்கள்” என்று ஷமீல் கூறுகிறார்.

மாணவர்கள் கனடா சென்றவுடனேயே அவர்களைச் சுரண்டுவது தொடங்குகிறது என்றார்.

வணிக மாணவர்களிடமிருந்து தொழிலாளர் சந்தை தாக்க மதிப்பீட்டிற்கு (LMIA) ஆயிரக்கணக்கான டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன.

ஒரு LMIA என்பது கனடாவில் உள்ள ஒரு முதலாளி ஒரு வெளிநாட்டை சேர்ந்தவரை வேலைக்கு அமர்த்துவதற்கு முன் பெற வேண்டிய ஆவணமாகும்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *