உடலில் நாள்பட்ட அரிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்துவது?

உடலில் நாள்பட்ட அரிப்பு ஏன் ஏற்படுகிறது? எப்படி குணப்படுத்துவது?

உடல்நலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

உடலில் ஏற்படும் அரிப்பு பெரும்பாலும் ஒரு தீவிர நோயாக கருதப்படுவதில்லை. அதை தீவிர நோயாக கருதும் எவரையும் நீங்கள் காண முடியாது. ஆனால், நாள்பட்ட நோயாக அரிப்பு மாறினால், அது பல பிரச்னைகளை ஏற்படுத்தும்.

சாதாரண அரிப்பை தவிர, சில தீவிரமான அரிப்பு பிரச்னைகளும் உள்ளன. இந்த வகையான அரிப்பு ஒருவரின் மகிழ்ச்சியையும் அமைதியையும் கூட பறித்துவிடும்.

இதனை நம்புவதற்கு கடினமாக இருக்கலாம். ஆனால், நாள்பட்ட அரிப்பு குணமடையாதபோது அதிலிருந்து ரத்தக்கசிவும் ஏற்படலாம்.

இந்நோய் குறித்து, டெல்லி-என்சிஆரில் உள்ள மேக்ஸ் மருத்துவமனை குழுமத்தின் தோல் மருத்துவரான சௌரப் ஜின்டால் கூறுகையில், “நாள்பட்ட அரிப்பு நோய் ஏற்படுவது எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும் அது தீவிரமானதாக உள்ளது” என்றார்.

“எங்களிடம் வரும் நோயாளிகளில், அரிப்பைக் குறைக்க உடலின் அந்த பகுதியை மெழுகுவர்த்தியால் எரிப்பவர்களும் உள்ளனர். இதன்மூலம், அந்நோய் எவ்வளவு தீவிரமானது என்பதை அறியலாம்” என்கிறார் அவர்.

மருத்துவத்தில் இது ப்ரூரிகோ நோடுலாரிஸ் (PN) என்று அழைக்கப்படுகிறது . இது பொதுவாக ஆறு வாரங்கள் நீடிக்கும் கடுமையான அரிப்பு நிலை.

அரிப்புடன், சிறுகட்டிகளும் உடலில் தோன்றும். அவை முடிச்சுகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த கட்டிகளில் நரம்புகள் உருவாகின்றன. இதனால் இந்த நிலை தீவிரமாகிறது.

பல சமயங்களில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வேலையும் செய்ய முடியாமலும் நிம்மதியாக உறங்கக்கூட முடியாத நிலையிலும் உள்ளனர்.

தொடர்ச்சியான அரிப்பு காரணமாக, பலருக்கு தோலில் காயங்கள் ஏற்படுகின்றன மற்றும் ரத்தக்கசிவு கூட ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அரிப்பு ஏற்படும் இடங்களில் எரிச்சலாகவும்ஊசி குத்துவது போன்றும் போன்று உணரத் தொடங்குகிறார்.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

தொற்று நோய் அல்ல

ப்ரூரிகோ நோடுலாரிஸ் நோய் ஏற்படுபவர்களில் பலரும் பல எறும்புகள் ஒரே நேரத்தில் கடிக்க ஆரம்பித்தது போல் உணர்கின்றனர். இது திடீரென சிலருக்கு ஏற்படும் கடுமையான அரிப்பிலிருந்து வேறுபட்ட நிலையாகும். ஏனெனில் இந்நோயில் தொடர்ச்சியாக அரிப்பு ஏற்படுகிறது.

இருப்பினும், இது ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்கு பரவாது. அதாவது, இந்நோய் பாதிக்கப்பட்டவரை தொட்டாலோ, நெருங்கினாலோ பரவாது என்பது நிம்மதியான விஷயம். இதனால் இது ஒரு அரிய நோயாகவும் பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் செயல்பட்டு வரும் அரிய நோய்களுக்கான தேசிய அமைப்பான NORD தரவுகளின்படி, இந்த நோய் உலகளவில் ஒரு லட்சம் பேரில் 22 முதல் 72 பேர் வரை காணப்படுகிறது.

இதனால் பாதிக்கப்படுபவர்களில் பெரும்பாலானோர் 40 முதல் 69 வயதுக்குட்பட்டவர்கள்.

அதுமட்டுமின்றி, பெண்களும் இந்த வகை அரிப்புக்கு ஆளாகின்றனர். NORD கூற்றுப்படி, இந்த நோய் பாதிக்கப்பட்ட 100 பேரில் 54 பேர் பெண்களாவர்.

ப்ரூரிகோ நோடுலாரிஸ் பற்றி அதிக தகவல்கள் கிடைக்கவில்லை. ஏன் அது ஏற்படுகிறது என்பதற்கான காரணமும் இன்னும் துல்லியமாக அறியப்படவில்லை. ஆனால் இதுவொரு தொற்று நோய் அல்ல என்பதும் தெளிவாகியுள்ளது.

உடல்நலம்

நாள்பட்ட அரிப்பு

இருப்பினும், எக்ஸிமா மற்றும் சிரோசிஸ் போன்ற தோல் நோய்களை விட சற்று தீவிரமானது இந்த ப்ரூரிகோ நோடுலாரிஸ். சிறுநீரகம், கல்லீரல் மற்றும் லிம்போமா போன்ற நோய்களிலும் இந்நோய் ஏற்படலாம்.

இந்த நோயைப் பற்றி, நியூயார்க்கின் மவுண்ட் சினாயில் உள்ள இகான் ஸ்கூல் ஆஃப் மெடிசின் மையத்தின் நரம்பியல் நோயெதிர்ப்பு நிபுணர் பிரையன் கிம் பிபிசி ஃபியூச்சரிடம் கூறுகையில், “தீவிரமான மற்றும் நாள்பட்ட அரிப்புகளால் வலி மட்டுமே ஏற்படுகின்றது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், வலியைவிட தீவிர பாதிப்புகளை ப்ரூரிகோ நோடுலாரிஸ் நோய் ஏற்படுத்தும்.” என்றார்.

“கடுமையான வலி ஏற்பட்டாலும், பத்தில் ஆறு பேர் தூங்குகிறார்கள். ஆனால் ப்ரூரிகோ நோடுலாரிஸ் உள்ளவர்கள், ஒரு நிமிடம் கூட தூங்க முடியாது. மக்கள் இரவு முழுவதும் தோலை சொறிந்து கொண்டே இருக்கிறார்கள்” என்கிறார் அவர்.

360 ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவ ரீதியாக இவ்வகை தீவிர அரிப்பு ஒரு நோயாக அடையாளம் காணப்பட்டது. ஆனால், இத்தனை ஆண்டுகளில் அதன் சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை.

நிபுணர்களால் கூட கடுமையான அரிப்பு மற்றும் கடுமையான வலியை வேறுபடுத்திப் பார்க்க முடியாதது இதற்கு ஓர் காரணமாக இருக்கலாம்.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

அரிப்புக்கு என்ன காரணம்?

1920-களில் முதன்முறையாக, கடுமையான அரிப்பு மற்றும் கடுமையான வலி ஆகிய இரண்டு நிலைகளுக்கும் உள்ள வித்தியாசத்தைப் பற்றி உலகம் அறிந்தது.

ஆஸ்திரிய-ஜெர்மன் உடலியல் நிபுணர் மேக்ஸ் வான் ஃப்ரை, உடலில் அரிப்புக்குப் பிறகு சிறிது நேரம் வலியை உணரச்செய்யும் சிறிய செல்களைக் கண்டுபிடித்தார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, 2007-ல், வாஷிங்டன் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் மெடிசின் மையத்தின் சுவே ஃபெங் ஷென் தலைமையிலான குழுவினர், முதுகுத் தண்டில் உடலில் அரிப்பை உண்டாக்கும் நரம்பு செல்களைக் கண்டுபிடித்தனர்.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஆய்வில், இந்த சிறப்பு செல்களை அகற்றியபோது, ​​அவை வலியை உணர்ந்தாலும், உடலில் எந்த வகையிலும் அரிப்பு ஏற்படவில்லை என்பது தெரிந்தது.

உண்மையில், இந்த சோதனையின் காரணமாக, அரிப்பு உணர்வை மூளைக்கு சென்று சேர்க்கும் நியூரான்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.

இதற்குப் பிறகு, 2017-ம் ஆண்டில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் அரிப்பு மற்றும் ஹார்மோன் தொடர்பான நோய்கள் பற்றிய ஆய்வு மையத்தில் பணிபுரியும் டாக்டர் பிரையன் கிம் மற்றும் அவரது சகாக்கள் தோலில் ஏற்படும் அழற்சியின் போது உடலில் IL-4 மற்றும் IL-13 ஆகிய ரசாயனங்கள், நோயெதிர்ப்பு செல்களில் (சைட்டோகைன்கள் என அழைக்கப்படுகின்றன) வெளியேறும் என்று தெரிவித்தனர். இந்த உணர்திறன் நியூரான்கள் அரிப்பை ஏற்படுத்துகின்றன.

கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் தோல் மருத்துவத் துறையின் பேராசிரியர் மார்லிஸ் ஃபாசெட், பிபிசி ஃபியூச்சரிடம், டாக்டர் பிரையன் கிம்மின் ஆராய்ச்சி இந்த நியூரான்களின் செயல்பாட்டைக் குறைக்கும் மூலக்கூறுகளையும் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

இந்த சிக்கல்களை ஆராயும்போது, ​​ஃபாசெட் 2023-ல் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றார். அவர்களின் ஆராய்ச்சியின் படி, IL-31 ரசாயனத்தின் செயல்பாட்டை குறைப்பதன் மூலம் அரிப்புகளை குறைக்கலாம்.

அவர்களின் ஆய்வு ஒன்றில், உடலில் உள்ள இந்த வேதிப்பொருளைக் குறைப்பதன் மூலம், அரிப்பு உணர்வைக் குறைக்கலாம் என்பது தெளிவாகியது.

ஃபாசெட் தனது புதிய ஆய்வைப் பற்றி விளக்குகையில், “IL-31 ரசாயனத்தைக் கட்டுப்படுத்தும் மருந்தின் ஒரு விளைவு, நோயெதிர்ப்பு மண்டலத்தை அழிக்கக்கூடும் மற்றும் அரிப்பை உணராவிட்டாலும், வீக்கம் கட்டுப்பாடில்லாமல் அதிகரிக்கும்” என்றார்.

உடல்நலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

நாள்பட்ட அரிப்புக்கான சிகிச்சை என்ன?

உண்மையில், விஞ்ஞானிகள் இந்த வகையான அரிப்புகளை கட்டுப்படுத்த மருந்துகளை உருவாக்குவதற்கு முயற்சி செய்கிறார்கள். எடுத்துக்காட்டாக, Nemolizumab எனும் மருந்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட சோதனைகள் சமீபத்தில் நிறைவடைந்தன.

இந்த அரிப்பினால் அவதிப்படுபவர்களின் சிகிச்சைக்காக அமெரிக்கா போன்ற நாடுகள் டுபிலுமாப் (Dupilumab) எனும் மருந்தை பயன்படுத்தத் தொடங்கியுள்ளது. IL-4 மற்றும் IL-13 ஆகிய ரசாயனங்கள் இரண்டையும் கட்டுப்படுத்தும் உரிமத்தை அமெரிக்கா சமீபத்தில் பெற்றுள்ளது.

இது தவிர, EP262, Abrocitinib மற்றும் Apadacitinib மூலம் சிரங்கு சிகிச்சைக்கான சோதனைகளும் நடந்து வருகின்றன.

கடந்த ஆண்டு, மில்லர் மருத்துவப் பள்ளியின் தோல் மருத்துவப் பேராசிரியரான டாக்டர். கில் யோசிபோவிச், டாக்டர் பிரையன் கிம் குழுவுடன் சேர்ந்து, ப்ரூரிகோ நோடுலாரிஸ் சிகிச்சைக்காக டுபிலுமாப் பயன்படுத்துவதற்கான இரண்டு கட்ட சோதனைகளை முடித்தார்.

24 வாரங்கள் நீடித்த ஒரு பரிசோதனையில், டுபிலுமாப் பயன்படுத்துவதன் மூலம், அறுபது சதவீத நோயாளிகளுக்கு அரிப்பு குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்குப் பிறகுதான், ப்ரூரிகோ நோடுலாரிஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் டுபிலுமாப்பை அங்கீகரித்துள்ளது.

“ப்ரூரிகோ நோடுலாரிஸ் தீவிர அரிப்பு நிலைகளில் ஒன்றாகும். சமீப காலம் வரை இதற்கு பயனுள்ள சிகிச்சை எதுவும் இல்லை, அதனால் நோயாளிகள் மிகவும் அவதிப்பட்டனர். ஆனால், இப்போது அவர்கள் நம்பிக்கையின் கதிரை பார்க்கிறார்கள்” என யோஸிபோவிச் கூறுகிறார்.

டாக்டர். பிரையன் கிம்மின் புதிய ஆய்வகம் சிகிச்சைக்காக டிஃபெகாலிபலின் என்ற மருந்தை பரிசோதித்து வருகிறது. இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த மருந்துகள் நம்பிக்கையைத் தருகின்றன. ஆனால் இவை அனைத்தும் இன்னும் பரிசோதனையில் உள்ளன. யோசிபோவிச் சொல்வது போல், இந்த மருந்துகள் சாதாரண மக்களைச் சென்றடைய குறைந்தது ஐந்து ஆண்டுகள் ஆகும்.

டாக்டர் சௌரப் ஜிண்டால் கூறுகையில், “அமெரிக்காவில் இந்த மருந்துகள் சாமானியர்களைச் சென்றடைய ஐந்து ஆண்டுகள் ஆகும். இந்தியா போன்ற நாடுகளில் குறைந்தது பத்து ஆண்டுகள் ஆகும். ஆனால், மருத்துவ அறிவியலின் பார்வையில், இந்த சோதனைகள் மிகவும் முக்கியமானவை” என்றார்.

உடல்நலம்

பட மூலாதாரம், Getty Images

நோயின் தீவிரத்தைக் குறைப்பது எப்படி?

டாக்டர் சௌரப் ஜிண்டால் ப்ரூரிகோ நோடுலாரிஸ் நோயாளிகளுக்கு எவ்வாறு சிகிச்சை அளிக்கிறார் என்பதற்கு பதிலளிக்கும் விதமாக, தோல் பராமரிப்பு பற்றி குறிப்பிடுகிறார்.

1. முதலில் நோயாளிக்கு ரத்தம், கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமாக ஏதேனும் பிரச்னை இருக்கிறதா என்று பார்க்கிறோம். அப்போது அவருக்கு என்னென்ன விஷயங்களுக்கு அலர்ஜி இருக்கிறது என்று பார்க்கிறோம்.

2. அரிப்பை குறைக்க மருந்துகள் உள்ளன. ஆனால் அவை ப்ரூரிகோ நோடுலாரிஸில் மிகவும் பயனுள்ளதாக இல்லை. அத்தகைய சூழ்நிலையில், அரிப்பு அதிகரிக்கிறது மற்றும் ஒரு வகையான சுழற்சி உருவாகிறது. நோயாளிகளுக்கு அரிப்பு ஏற்படுவதை முடிந்தவரை தவிர்க்க வேண்டும் என்பதை நாங்கள் விளக்குகிறோம்.

3. ப்ரூரிகோ நோடுலாரிஸின் மற்றொரு சிறப்பு என்னவென்றால், இது கைக்கு எட்டக்கூடிய இடத்தில் மட்டுமே ஏற்படுகிறது. அதாவது அரிப் நோயாளிகளை அறிவுறுத்துகிறோம்.

4. நமைச்சல் உள்ள இடத்தில் நல்ல தரமான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் வறண்ட சருமத்தில் இந்தப் பிரச்னை அதிகரிக்கும்.

5. இந்த நோய்க்கு இன்னும் வழக்கமான சிகிச்சை எதுவும் இல்லை. எனவே, நீண்ட கால சிகிச்சையை எச்சரிக்கையுடன் செய்ய வேண்டும். சில நேரங்களில் இது நோயாளிகளுக்கு வேதனையாக இருக்கலாம். அவர்கள் மனச்சோர்வினால் சூழப்படலாம். எனவே, அவர்களுடன் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் ஆலோசனை வழங்கப்படுகிறது.

6. ஆண்களை விட நடுத்தர வயது பெண்கள் அதிக சிரமங்களை எதிர்கொள்கின்றனர். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அவர்கள் பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்த நோயிலிருந்து மீள்வதற்கான நீண்ட செயல்முறையைக் கருத்தில் கொண்டு, பெண்கள் அதன் சிகிச்சையைத் தவிர்க்கிறார்கள். அதேசமயம் அவர்களுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *