பட மூலாதாரம், Getty Images
8 பந்துகளில் 5 ரன்கள் சேர்த்த நிலையில் கடைசி 4 விக்கெட்டுகளை இழந்து ஆப்கானிஸ்தான் அணி, உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் எளிதாக சரண் அடைந்தது.
மிகப்பெரிய வெற்றி
சென்னையில் நடந்த உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 149 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மிகப்பெரிய வெற்றியை இந்த உலகக் கோப்பைத் தொடரில் நியூசிலாந்து அணி பதிவு செய்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி, 6 விக்கெட் இழப்புக்கு 288 ரன்கள் சேர்த்தது. 289 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 34.4 ஓவர்களில் 139 ரன்களில் சரணடைந்து தோல்வியை ஒப்புக்கொண்டது.
பட மூலாதாரம், Getty Images
காத்திருக்கும் சவால்கள்
நியூசிலாந்து அணி பேட்டிங்கில் இக்கட்டான நிலையில் இருந்தபோது தூண்போல் நின்று காத்து, ரன்கள் சேர்த்த கிளென் பிலிப்ஸ் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 8 புள்ளிகளுடன், 1.923 நிகர ரன்ரேட்டுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. ஆப்கானிஸ்தான் அணி 2 புள்ளிகளுடன் 9வது இடத்தில் இருக்கிறது.
நியூசிலாந்து அணிக்கு அடுத்துவரும் ஆட்டங்கள் அனைத்தும் சவாலாக இருக்கக் கூடியதாக இருக்கும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு எதிராக நியூசிலாந்து திறமைக்கு நிச்சயமாக உரைகல்லாக அமையும்.
எதிர்பார்ப்பு பொய்யானது
கடந்த திங்கள்கிழமை நடந்த ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை மண்ணைக் கவ்வ வைத்து அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான் அணியின் ஆட்டம் குறித்து இன்று சென்னை ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், ஆப்கானிஸ்தான் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் அனைத்தும் சராசரிக்கும் குறைந்துவிட்டது.
5 கேட்சு வாய்ப்பு வீண்
பட மூலாதாரம், Getty Images
அதிலும் ஆப்கானிஸ்தான் பீல்டிங் இன்றைய ஆட்டத்தில் மிகுந்த மோசமாக இருந்தது. 5 கேட்சுகளை கோட்டைவிட்டனர், ஒரு ரன் அவுட்டை கோட்டைவிட்டு, ஏறக்குறைய நியூசிலாந்து பேட்டர்களுக்கு கடைசி நேரத்தில் ரன் சேர்க்க உதவி செய்தனர். கேட்சுகளை மட்டும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பிடித்திருந்தால், நியூசிலாந்து அணி 200 ரன்களைக்கூட கடந்திருக்காது.
நியூசிலாந்து பேட்டர் யங்கிற்கு பரூக்கி ஒரு கேட்ச்சை தவறவிட்டார், ரவீந்திராவுக்கு முஜிப்பூர் ரஹ்மான் கேட்ச்சை பிடிக்கத் தவறினார், ரவீந்திராவுக்கு ரஷித்கான் ஒரு கேட்ச் வாய்ப்பை கோட்டைவிட்டார், கேப்டன் லாதமிற்கு ரஷீத் கான் கேச்சை தவறவிட்டார். லாதமிற்கு 2வது வாய்ப்பை ரஷித் கான் மீண்டும் தவறவிட்டார். கிளென் பிலிப்ஸ்கு நவீன் உல் ஹக் கேட்சை தவறவிட்டார். இந்தப் போட்டியில் கிடைத்த 6 வாய்ப்புகளை தவறவிட்ட ஆப்கானிஸ்தான் எப்படி வெல்லும் என எதிர்பார்க்கலாம்.
கேப்டனின் தவறான முடிவு
டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி கேப்டன் ஹஸ்மத்துல்லா முதலில் பேட்டிங் செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து செய்த தவறுகளை நினைத்துப் பார்த்தாவது, ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட் செய்திருக்கலாம்.
அவ்வாறு பேட் செய்து 250 ரன்களை எட்டியிருந்தால், நிச்சயம் நியூசிலாந்துக்கு சவாலாக இருந்திருக்கும், நியூசிலாந்து தோல்வி அடைந்திருந்தாலும் வியப்புக்குரியது இல்லை.
டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்த ஹஸ்மத்துல்லா, திட்டமிட்டபடி அணியை வழிநடத்தி இருக்க வேண்டும். ஆனால் அவரின் எண்ணப்படி எந்தத் திட்டங்களும் செயல்படுத்தப்படவில்லை.
பட மூலாதாரம், Getty Images
நியூசிலாந்து தடுமாற்றம்
சென்னை ஆடுகளத்தைப் பற்றி் தெரிந்தும், டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்யாமல் பீல்டிங்கைத் தேர்ந்தெடுத்போதே ஏதோ சொதப்பல் தொடங்கிவிட்டது போல் தெரிந்தது.
ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் முதலில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசி நியூசிலாந்து பேட்டர்களைத் திணறவிட்டனர். 109 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து வலுவாக இருந்த நியூசிலாந்து அணி, திடீரென 110 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இந்த “ நல்ல சந்தர்பத்தை” ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் தங்களுக்கு சாதகமாக திருப்பத் தவறிவிட்டனர். ஆனால், கேப்டன் டாம் லாதம், கிளென் பிலிப்ஸ் இருவரும் சேர்ந்து நிதானமாக ஆடத் தொடங்கி பின்னர் பெரிய ஸ்கோரை சேர்த்தனர். இருவரும் சேர்ந்து 5-வது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். கேப்டன் டாம் லாதம்(68), கிளென் பில்ப்ஸ்(71) ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
கட்டுக்கோப்பு
21 ஓவர்கள் முதல் 30வது ஓவர்கள் வரை ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாகத்தான் பந்துவீசினர், வெறும் 29 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தனர், 2பவுண்டரிகளை அடிக்கவிட்டு, 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
“கேட்ச் லாஸ் மேட்ச் லாஸ்”
ஆனால், டாம் லாதம், பிலிப்ஸ் இருவரும் தேநீர் இடைவேளைக்குப்பின் தாக்குதல் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். இந்த இருவரை மட்டும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்கள் வெளியேற்றி இருந்தால், ஆட்டம் தலைகீழாக மாறியிருக்கும், நியூசிலாந்து அணி 200 ரன்களுக்குள் ஆட்டமிழந்திருக்கும். 40வது ஓவர்கள் வரை நியூசிலாந்து அணி 4 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள்தான் சேர்த்து தடுமாறி வந்தது.
இரு கேட்சுகளை ஆப்கானிஸ்தான் வீரர்கள் தவறவிட்டதுதான், ஆட்டத்தின் வெற்றியையும் சேர்த்து கோட்டைவிட்டனர். கடைசி 10 ஓவர்களில் மட்டும் நியூசிலாந்து அணி 105 ரன்களைச் சேர்த்து பெரிய ஸ்கோருக்கு நகர்ந்தது.ஆப்கானிஸ்தான பந்துவீச்சை லாதம், பிலிப்ஸ் இருவரும் வெளுத்துக் கட்டி அரைசதம் அடித்துப் பிரிந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
மோசமான பேட்டிங்
ஆப்கானிஸ்தான் அணி பேட்டிங்கிலும் படுமோசமாகச் செயல்பட்டது. அந்த அணி, தனது கடைசி 5 விக்கெட்டுகளை 24 பந்துகளில் வெறும் 14 ரன்களுக்குப் பறிகொடுத்தது. ஆப்கானிஸ்தானில் எந்த பேட்டரும் பொறுப்புடன் பேட் செய்யவில்லை. அந்த அணியில் அதிகபட்சமே, ரஹ்மத் ஷா சேர்த்த 36 ரன்கள்தான். மற்ற பேட்ஸ்மேன்களான குர்பாஸ்(11), ஜாத்ரன்(14), ஓமர்ஜாய்(27) என சொற்ப ரன்களில் வெளியேறினர். 97 ரன்கள்வரை 3 விக்கெட்டுகளை இழந்திருந்த ஆப்கானிஸ்தான் அணி அடுத்த 42 ரன்களுக்குள் மீதமிருந்த 7 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
சான்ட்னர் 100வது விக்கெட்
ஐபிஎல் டி20 தொடரில் சிஎஸ்கே அணியில் மிட்ஷெல் சான்ட்னர் இடம் பெற்றிருந்ததால் சென்னை ஆடுகளம் குறித்து அவர் நன்கு அறிந்திருந்தார். இதனால், எந்த இடத்தில் பந்து எப்படி டர்ன் ஆகும் என்பதை தெரிந்து, அறித்து கட்டுக்கோப்பாகப் பந்துவீசினார்.
7.4 ஓவர்கள் வீசி 39 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார். மிட்ஷெல் சான்ட்னர் 98 போட்டிகளில் பங்கேற்று தனது 100-வது ஒருநாள் விக்கெட்டை இந்த ஆட்டத்தில் வீழ்த்தினார். சான்ட்னர், ரவீந்திரா, பிலிப்ஸ் ஆகிய 3 சுழற்பந்துவீச்சாளர்களும் சென்னை ஆடுகளத்தின் தன்மையை நன்குப் பயன்படுத்தி, ஆப்கானிஸ்தான் பேட்டிங் வரிசையை ஆணிவேரை ஆட்டிப் பார்த்தனர்.
இந்த 3 பேரும் சேர்ந்து 15 ஓவர்கள்தான் பந்துவீசினர். அதில், 42 பந்துகள் டாட் பந்துகளாகும். அதாவது, 90 பந்துகளில் 42 பந்துகளில் ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் எந்த ரன்னும் எடுக்கவில்லை.
பெர்குஷன் 7 ஓவர்கள் வீசிய ஒரு மெய்டன், 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரன்ட் போல்ட் 7 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் 18 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பட மூலாதாரம், Getty Images
ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை
ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா கூறுகையில் “ கேட்சுகளை தவறவிட்டதால் வெற்றி வாய்பையும் தவறவிட்டோம், மற்றவகையில் அணி வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டனர். பீல்டிங் இன்னும் முன்னேற வேண்டும். கடைசி 6 ஓவர்களில் அதிகமான ரன்களை வழங்கிவிட்டோம். இரு கேட்சுகளையும் தவறவிட்டோம். இதனால்தான் நியூசிலாந்து ரன் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
டாஸ் வென்றபி்ன் ஆடுகளத்தை சரியாக கணிக்கவில்லை. முதல் இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும், ஆடுகளத்தில் பந்து மெதுவாக வரும் என எதிர்பார்த்தேன். ஆனால், நடந்தது வேறு, இன்னும் அதிகமான போட்டிகள் உள்ளன, அடுத்த ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் மோதுகிறோம், வலுவாக திரும்பி வர முயல்வோம்” எனத் தெரிவித்தார்
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
