
திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த இரண்டு பட்டியலின இளைஞர்களை ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்கள் நிர்வாணமாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இருவரையும் கைகளைத் தூக்க இயலாத அளவுக்கு மரக்கட்டை மற்றும் கத்தியைத் திருப்பி வைத்து தாக்கியதாக, ஆதிக்க சாதியைச் சேர்ந்த 6 இளைஞர்களை போலீசார் கைது செய்து வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலியில் பட்டியலின மக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்கள் நடக்கக் காரணம் என்ன?
ஆற்றங்கரையில் குளிக்கச் சென்ற பட்டியலின இளைஞர்கள் கஞ்சா போதையில் இருந்தவர்களிடம் சிக்கியது எப்படி? தோப்பில் வைத்து இளைஞர்களை என்ன செய்தார்கள்?
திருநெல்வேலி மாவட்டம் மணி மூர்த்தீஸ்வரம் கிராமத்தில் ஆயிரக்கணக்கான பட்டியல் சமூக மக்கள் வசிக்கின்றனர்.
மணி மூர்த்தீஸ்வரம் என்ற பகுதி தாமிரபரணி ஆற்றங்கரையில் இருந்து அரை கிலோமீட்டருக்கும் குறைவான தொலைவில் ஆற்றின் ஓரத்தில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் காலை, மாலை வேளையில் ஆற்றில் குளிப்பது, ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது, துணிகளைத் துவைப்பது போன்ற பணிகளை மேற்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இரவு நேரங்களில் பணி முடித்து வரும் வழியில் ஆற்றில் குளித்துவிட்டு வீட்டுக்குச் செல்வது வழக்கம்.
அங்கு இரவு நேரத்தில் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆற்றின் கரையில் அமர்ந்து மது, கஞ்சா உள்ளிட்ட சட்டவிரோத செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதை எடுத்துக் காட்டும் விதமாக ஆற்றின் கரையோரம் முழுவதுமே ஆங்காங்கே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் கப்புகள், குடிநீர் காலி பாட்டில்கள், புகைத்துண்டுகள் கிடந்தன.

மணி மூர்த்திஸ்வரத்தைச் சேர்ந்த 21 வயது இளைஞர் மற்றும் அவரது 19 வயது நண்பர் என பட்டியலின இளைஞர்கள் இருவரும் தனியார் நிறுவனத்தில் கேபிள் லைன் கொடுக்கும் பணியைச் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலை 7 மணி அளவில் ஆற்றங்கரையில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில் ஆற்றின் கரையோரமாக ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 இளைஞர்கள் அமர்ந்து கஞ்சா அடித்துக் கொண்டு இருந்ததாக இந்தச் சம்பவம் குறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
இவர்கள் குளிக்கச் செல்வதைப் பார்த்த ஆதிக்க சாதியைச் சேர்ந்தவர்கள் இவர்களை அழைத்து செல்போன்களை பறித்துக்கொண்டு, பணம் கேட்டு மிரட்டியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இருவரையும் வயிற்றில் கத்தியை வைத்துப் பணம் வேண்டுமென மிரட்டியதாகவும் காவல்துறை கூறுகிறது.
பின்னர், “இருவரையும் நிர்வாணப்படுத்தி பட்டியலின இளைஞர்களை அவர்களது முதலாளியிடம் தொலைபேசியில் பேச வைத்து 5000 ரூபாயை இவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கச் செய்து பிறகு ஏடிஎமை எடுத்துக் கொண்டு இவர்களின் சாதியைக் கேட்டுள்ளனர். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் என்று கூறியதை அடுத்து ஒருவர் மீது சிறுநீர் கழித்து 4 மணிநேரம் வைத்து கொடூரமாகத் தாக்கி இருக்கின்றனர்.
அவர்களிடம் இருந்து தப்பி உடலில் ஒட்டுத் துணி இல்லாமல் நிர்வாணமாகவே வீட்டுக்கு ஓடிச்சென்ற இருவரையும் அவர்களது உறவினர்கள் மீட்டு திருநெல்வேலி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்,” என்று காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக தச்சநல்லூர் காவல்துறையினர் 6 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தில் கொடூரமான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கண்பார்வை பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் அதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசியபோது, “உயிர் பிழைத்தால் போதும் என நிர்வாணமாகவே ஓடினோம்” என்கிறார்.
“நாங்கள் வழக்கமாகப் பணியை முடித்துவிட்டு வரும்போது ஆற்றில் குளிக்கச் செல்வோம். கடந்த அக்டோபர் 30ஆம் தேதி மாலையும் அதேபோல் சென்றோம்.
அப்போது கஞ்சா போதையில் இருந்த 4 பேர் எங்களை அழைத்தனர். அருகில் சென்றபோது எங்களைப் பிடித்து அடித்து செல்போன்களை பறித்துக் கொண்டு எங்களிடம் பணம் கேட்டனர். இல்லை எனக் கூறினோம்.
இதையடுத்து ஆற்றின் கரையில் இருந்து 300 மீட்டருக்கு அப்பால் உள்ள மரத்தில் எங்கள் இருவரையும் தனித்தனியாகக் கட்டி வைத்து நிர்வாணப்படுத்தி அடித்து எங்களின் கேபிள் ஓனருக்கு போன் செய்யச் சொன்னார்கள். நானும் போன் செய்தேன்,” என அன்று நடந்தவற்றை விவரித்தார்.
தாங்கள் மது அருந்தி, போலீஸிடம் சிக்கிக் கொண்டதாகக் கூறி 5,000 ரூபாய் போடச் சொல்லுமாறு கத்தி முனையில் அவர்கள் மிரட்டியதாகவும், உயிருக்குப் பயந்து தானும் அவர்கள் கூறியதை அப்படியே செய்ததாகவும் பாதிக்கப்பட்ட பட்டியலின இளைஞர் கூறினார்.
தாங்கள் இருவரும் வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அந்தக் கும்பலில் இருந்த இருவர் சென்றனர் என்றும் இருவர் தங்களுக்கு காவலாக இருத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
போலீஸிடம் சிக்கிய இருசக்கர வாகனம்

“எனது நண்பரின் இருசக்கர வாகனத்தைக் கொண்டு பணம் எடுக்கச் சென்ற இருவர் போலீசாரின் வாகன தணிக்கையில் சிக்கிக்கொண்டனர்.
‘திருட்டு வாகனம் மாதிரி இருப்பதாக’ சந்தேகத்தில் காவல்துறையினர் அவர்களிடம் ஆவணங்களின் அசலை காலையில் எடுத்து வந்து வாகனத்தைப் பெற்றுச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்துள்ளனர்.
பணம் எடுத்துவிட்டு வந்த பிறகு கஞ்சா போதையில் மீண்டும் தாக்கி ‘உன் சாதி என்ன’ எனக் கேட்டனர். நான் எனது சாதியைக் கூறினேன். நீ இந்த சாதியைச் சேர்ந்தவன்னா என்ன பெரிய இவனா எனக் கூறி மிகவும் கொடூரமாக அருகில் இருந்த கட்டைகளைத் திருப்பிப் பிடித்துக்கொண்டு தாக்கினார்கள்,” என்கிறார் பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களில் ஒருவர்.
சிறுநீர் கழித்து கொடூர தாக்குதல்
தான் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவன் என்று கூறியவுடன் போன் செய்து மேலும் இருவரை அழைத்து அவர்களுடன் சேர்ந்து கட்டை உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு முகத்தில் தாக்கினர். இதில் இரண்டு கண்களும் வீங்கியதைத் தொடர்ந்து ஒருவர் தன் மீது சிறுநீர் கழித்ததாகவும் அவர் கூறுகிறார்.
“ஐந்து மணிநேரத்திற்குப் பிறகு போதையில் சிலர் அங்கிருந்து செல்ல இருவர் மட்டுமே அங்கேயொ இருந்தனர். இரவு ஒரு மணி அளவில் நானும் எனது நண்பரும் உயிர் பிழைத்தால் போதும் என நிர்வாணமாக 400 மீட்டர் வயல் வழியாகவே வீட்டை நோக்கி ஓடி வீட்டுக்குள் சென்றோம். அங்கிருந்த எனது பாட்டி 108க்கு போன் செய்து ஆம்புலன்ஸை அழைத்தார்.
ஆம்புலன்ஸ் உதவியுடன் நெல்லை மருத்துவமனையில் அனுமதி பெற்று காவல்துறைக்கு போனில் அழைத்து நடந்த சம்பவத்தை எடுத்துக் கூறினோம்.”
கண்பார்வை பாதிக்கப்பட்டு சிகிச்சை

ஆதிக்க சாதியினர் தாக்கியதில் தனது இரு கண்களும் மிகுந்த பாதிக்கு உள்ளாகியிருப்பதாகவும் பட்டியலின இளைஞர் கூறினார். தனக்கு பார்வை மங்கலாகத் தெரிவதாகவும் ஒரு கண்ணின் புருவப் பகுதியில் மூன்று தையல்கள் போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
மேலும், “மற்றொரு கண் முழுவதும் சிவப்பு நிறமாக மாறி இருக்கிறது. அதற்கு ஸ்கேன் எடுத்து சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது”, எனவும் தெரிவித்தார்.
தனது இரு கைகளையும் தூக்க முடியவில்லை எனக் கூறுகிறார் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட மற்றொரு பட்டியலின இளைஞர்.
“ஆதிக்க சாதி இளைஞர்கள் தாக்கியதில் எங்கள் இருவரின் தோள்பட்டை பகுதி முழுவதும் பலத்த உள்காயம் ஏற்பட்டுள்ளது. இருவராலும் கைகளை மேலே உயர்த்தக்கூட முடியவில்லை.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறோம். காவல்துறையினர் எங்களிடமும் விசாரணை நடத்தினர்.
மேலும், போலீசார் விசாரணையின்போது எங்கள் பைக்கில் சென்று மாட்டிய இருவரது புகைப்படத்தையுஸ காட்டினர். அதை நாங்கள் உறுதி செய்ததைத் தொடர்ந்து சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேரையும் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்,” என்றார்.
மணி மூர்த்திஸ்வரத்தில் சாதிய மோதல் முன்பு நடந்ததா?
பட்டியலின இளைஞர்களுக்கு வன்கொடுமை நடந்த இடத்தை நமக்கு காண்பிப்பதற்காக மணி மூர்த்திஸ்வரத்தைச் சேர்ந்த ராஜேஷ்குமார் நேரில் அழைத்துச் சென்றார்.
“நாங்கள் வாசிக்கும் பகுதிக்கு அருகிலேயே மாற்று சமூகத்தைச் சேர்ந்த மக்களும் வசித்து வருகின்றனர். நாங்கள் எந்தப் பிரிவினையும் இன்றி இத்தனை ஆண்டுகளாக வசித்து வருகிறோம்.
இது வெளியூரில் இருந்து கஞ்சா அடிக்க வந்த நபர்களால் ஏற்பட்ட பிரச்னை. தொடக்கத்தில் போலீசார் இதைச் சாதாரண வழக்காகப் பார்த்தனர். பிறகு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், அரசியல் கட்சியினர் இதுகுறித்துப் பேசிய பின்பே வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆறு பேர் கைது செய்து செய்யப்பட்டனர்.

”குற்றங்களை தடுக்க போலீஸ் ரோந்து அவசியம்”
தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியில் தொடர்ந்து மது அருந்துவது, கஞ்சா அடிப்பது போன்ற சட்டவிரோத செயல்களைத் தடுக்க போலீசார் முன்வர வேண்டும்.
போலீஸ் இரவு நேரத்தில் அந்தப் பகுதியில் தொடர் ரோந்து செய்தால் மட்டுமே இதுபோன்ற சம்பவங்களை வரும் காலங்களில் தடுக்க முடியும்”, என்றார்.
எத்தனை பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு?
“பட்டியலின இளைஞர்களை கொடூரமாகத் தாக்கியது தொடர்பாக பொண்ணுமணி(25) (ராஜஒளிபுரத்தைச் சேர்ந்தவர்), ஆயிரம் (19), முத்து என்கிற நல்லமுத்து (21), சிவன் என்கிற சிவா (22), ராமர் (22), லட்சுமண குமார் (19) ஆகிய 6 பேர் தச்சநல்லூர் போலீசாரால் கைது செய்யப்பட்டு வன்கொடுமை தடுப்புச் சட்டம், இந்திய தண்டனை சட்டம் 294 பி, 506 பிரிவு 2, 392, 397 என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது,” என காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
காவல் ஆணையர் கூறுவது என்ன?
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாநகர் காவல் ஆணையர் மகேஸ்வரி பிபிசி தமிழிடம் பேசியபோது, “இந்த வழக்கு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது போலீசாரின் விசாரணையில் உள்ளனர். எனவே, இந்த வழக்கு தொடர்பான எந்தத் தகவலையும் வெளியே கூற இயலாது,” எனக் கூறினார்.
மேலும், கைது செய்யப்பட்ட 6 பேர் போலீசார் விசாரணையில் அந்த குற்ற சம்பவத்தில் தாங்கள் ஈடுபடவில்லை என மறுத்ததாகவும் காவல்துறை அதிகாரி கூறினார்.
நெல்லை மாவட்டத்தில் சாதிய மோதலைத் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்கிறார் நெல்லை மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
இதுகுறித்து, பிபிசி தமிழிடம் பேசிய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன், “மணி மூர்த்திஸ்வரம் பட்டியலின இளைஞர்கள் தாக்கப்பட்டது தொடர்பாக வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட இரு இளைஞர்களுக்கும் முதல் தவணையாக தலா 62,500 வழங்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற வழக்குகள் முடிந்த பிறகு மீதித் தொகை வழங்கப்படும்” என்றார்.

மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்
மாவட்டம் முழுவதும் போலீஸ் கண்காணிப்பு அதிகரிப்பு
தொடர்ந்து பேசிய அவர் , “மாவட்டம் முழுவதிலும் சாதி ரீதியான மோதல்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் போலீசாரின் கண்காணிப்பை அதிகரிக்க உத்தரவு வழங்கி இருக்கிறேன்.
மேலும், வெளி ஆட்கள் கிராமத்திற்குள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளிக்கும்படியும் காவல்துறை வாயிலாக கிராமங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மணி மூர்த்திஸ்வரம் ஆற்றங்கரை பகுதியில் பிற்பகலில் இருந்தே சுற்றித் திரிந்துள்ளனர். அதை அந்தப் பகுதி மக்கள் பார்த்தும் சந்தேகப்பட்டு கேட்கவில்லை. அவர்கள் கேட்டிருந்தால் இந்த நிகழ்வு தடுக்கப்பட்டு இருக்கும்,” என்றார் மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
