
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த இருவர் போதைப்பொருள் வைத்திருந்ததாகக் கிடைத்த தகவலடிப்படையில் கோவை போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு, விற்பனை செய்வதற்காக இரு நபர்கள் வைத்திருந்த 85 கிராம் அஸ்ஸாம் மாநில போதைப்பொருளைக் கண்டறிந்தனர். அது என்ன வகையான போதைப்பொருள் என்பதையும் பொலீசாரால் எளிதாகக் கண்டறிய முடியவில்லை.
ஆனால், இவ்வளவு குறைந்த அளவில் இருந்த அந்த போதைப் பொருளின் விலை ரூ.22 லட்சம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இரண்டு வட மாநிலத்தவர்களைப் போலீசார் கைது செய்தனர்.
இச்சம்பவத்தின் மூலம் அஸ்ஸாம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் தயாரிக்கப்படும் போதைப்பொருள் கோவைக்குள் எப்படி வந்தது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
என்ன வகை போதைப்பொருள்?
கடந்த சில வருடங்களாக, கோவையில் போதைப்பொருட்கள் பிடிபடுவது தொடர் நிகழ்வாகி வருகிறது.
கடந்த அக்டோபர் 25-ஆம் தேதி, கோவை தொண்டாமுத்தூர் அருகே, போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
விசாரணையில் அவர்கள் அசாம் மாநிலம் நோகால் மாவட்டத்தைச் சேர்ந்த பெரிதுல் இஸ்லாம் (33) மற்றும் குதர்ஷா கத்துல் (35) ஆகியோர் என்பது தெரியவந்தது.
இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்புள்ள 85 கிராம் அள்விலான போதைப்பொருளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இந்த போதைப்பொருளின் வகை என்ன என்பது தெரியாததால், போதைப்பொருள் மாதிரியை போலீஸார் ஆய்வகத்துக்கு அனுப்பியதில், முதற்கட்டமாக அதில் ஹெராயின் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.
அசாமில் இருந்து அது கோவை கொண்டு வரப்பட்டது எப்படி? கைதான இருவரும் யாரிடமெல்லாம் போதைப்பொருட்கள் விற்பனை செய்துள்ளனர்? என்பது குறித்த தகவல்களை பிபிசி தமிழிடம் போலீஸார் பக்ரிந்துகொண்டனர்.

கைது செய்யப்பட்ட குதர்ஷா கத்துல் (இடது ) மற்றும் பெரிதுல் இஸ்லாம் (வலது)
‘15 மில்லிகிராம், 3,000 ரூபாய்’
பிபிசி தமிழிடம் பேசிய தொண்டாமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை, அசாம் சுற்றுப்பகுதியை சேர்ந்த வடமாநில தொழிலாளர்களை குறிவைத்து, சில நபர்கள் போதைப்பொருள் விற்பனை செய்வதாகத் தகவல் கிடைத்ததாகவும், அதன் பேரில் இருவரைக் கைது செய்ததாகவும் கூறினார்.
“இந்த போதைப்பொருளை, 10–15 மில்லி கிராம் கொள்ளளவுள்ள சிறிய குடுவைகளில் அடைத்து, ஒரு குடுவையை 3,000 ரூபாய் வரையில் விற்பனை செய்து வந்துள்ளனர். குறிப்பாக அசாம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் மட்டும் தான் இதை விற்பனை செய்துள்ளனர்,” என்றார்.
‘ரயிலில் கொண்டுவரப்படும் போதைப்பொருட்கள்’
இந்த போதைப்பொருள் எப்படி இங்கு கொண்டுவரப்பட்டது என்று விளக்கினார் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை.
“இந்த போதைப் பொருளை அசாம் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து குறைந்த விலைக்கு வாங்கி வந்து இங்கு, அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். சாதாரண துணிகளுக்குள் உணவுப்பொருட்கள் போல மறைத்து வைத்து, இந்த போதைப்பொருளை, ரயில் மூலம் கோவைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். ஆய்வகத்துக்கு அனுப்பியதில் முதற்கட்டமாக இந்த போதைப்பொருளில் ஹெராயின் கலந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது,” என்றார்.

போதைபொருளைப் பறிமுதல் செய்த கோவை போலீசார் அதனை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்
‘தெரிந்த நபர்களுக்கு மட்டுமே விற்பனை’
பிபிசி த மிழிடம் பேசிய கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பத்ரி நாராயணன், கைதான இருவரும் கோவை பகுதியில் வாடகைக்கு வீடுகள் எடுத்து தங்கியிருந்ததாகவும், கட்டட வேலைக்குச் சென்றுகொண்டிருந்த இருவரும், இந்த போதைப்பொருள் குறித்து தெரிந்த வட மாநிலத்தவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்து வந்ததாகவும் கூறினார்.
“கல்லூரி மாணவர்கள் அல்லது உள்ளூர் மக்களுக்கு இதை விற்பனை செய்யவில்லை. இந்த போதைப்பொருள் குறித்து தெரிந்த அசாம் மாநிலத்தவருக்கு மட்டும் விற்பனை செய்துள்ளனர்,” என்றார்.
மேலும் பேசிய பத்ரி நாராயணன், “கோவையில் பறிமுதலான போதைப்பொருள், அசாம் சுற்றுப்பகுதிகளில் ‘Opium Poppy’ (கசகசா) செடியில் இருந்து தயாராகும் போதைப்பொருளை போன்று தான் உள்ளது. ஆனால், இங்கு மிக அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதுடன், அதீத வீரியம் மிக்கதாகவும் தென்படுவதால் இதில் ஓபியம் பாப்பி மட்டுமின்றி வேறு போதைப்பொருட்களும் கலந்திருக்கலாம் எனச் சந்தேகமாக உள்ளது,” என்றார்.
கோவையில் இந்த போதைப்பொருளை ‘ஸ்மேக்’ அல்லது ’பிரவுன் சுகர்’ என்று கூறி இவர்கள் விற்பனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
“ஆய்வக மாதிரி முடிவுகள் வந்ததும் என்னென்ன வகையான போதைப்பொருட்கள் கலக்கப்பட்டுள்ளது என்பது தெரியவரும். இதே போன்ற போதை விற்பனை கும்பல்கள் வேறு உள்ளனவா, அருகிலுள்ள மாவட்டங்களிலும் விற்பனைகள் நடக்கிறதா என்றும் விசாரித்து வருகிறோம்,” என்றார் அவர்.
‘தெரிந்தவர்களுக்கு மட்டும் விற்பனை’
பிபிசி தமிழிடம் பேசிய போதைப்பொருட்கள் கட்டுப்பாட்டு பணியகத்தின் (NCB) சென்னை மண்டல இயக்குநர் அரவிந்தன், கடந்த மாதம் சென்னையில் ராஜஸ்தானை சேர்ந்த இருவரிடம் ஓபியம் பாப்பி பிசினில் இருந்து தயாரிக்கப்பட்ட, 1.5 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகத் தெரிவித்தார். “சென்னையில் பிடிபட்டவர்களுக்கும், கோவையில் பிடிபட்டவர்களுக்கும் இருக்கும் ஒரே தொடர்பு, இவர்கள் இந்த போதைப்பொருள் குறித்து தெரிந்த வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே விற்பனை செய்தது தான்,” என்றார்.
இது போன்ற கும்பல்கள், போதைப்பொருள் விற்பனையை வெளியாட்கள் தெரிந்துகொள்ளாமல் இருக்க, மிகவும் நெருங்கிய வட்டங்களாகச் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “இந்த போதைப்பொருட்களை வடமாநிலங்களில் இருந்து இங்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இதுபோன்ற கும்பல்களின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து கைது செய்து வருகிறோம். கோவை சம்பவத்தையும் விசாரிப்போம்,” என்றார்.

இந்த போதைப் பொருள் அசாமிலிருந்து ரயிலில் கொண்டுவரப்படுகிறது
கசகசா செடியில் இருந்து போதைப்பொருள்
இது தமிழில் கசகசா செடி எனவும், ஆங்கிலத்தில் Breadseed Poppy, எனவும் அழைக்கப்படுகிறது. இதன் தாவரவியல் பெயர் Papaver somniferum.
இந்த கசகசா செடியின் காய், பிசின், தண்டு ஆகியவை, ஹெராயின், மார்ஃபைன் போன்ற போதைப்பொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மருத்துவ குணம் நிறைந்த இந்த கசகசா செடியில் இருந்து மருந்து பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன.
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளில், இது சட்ட விரோதமாகப் பயிரிடப்பட்டு, இதிலிருந்து போதைப்பொருள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தச் செடி கசகசா தயாரிப்புக்காக மட்டும் சாகுபடி செய்ய அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. இதிலிருந்து கசகசா எடுக்கப்பட்டதும், அரசு அதிகாரிகள் இதன் தவறான பயன்பாட்டுக்கு வழிவகுக்காத வகையில் இந்தப் பயிரைக் கையகப்படுத்துவர். அதில் மருந்து தயாரிக்கப் பயன்படும் பகுதிகள் குறிப்பிட்டத் துறைக்கு வழங்கப்படும். மீதி அழிக்கப்படும்.
“ஆனால், இந்த மாநிலங்களிலும், அசாம், மேகாலயா, மணிப்பூர், மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இப்பயிர் சட்டவிரோதமாக சாகுபடி செய்யப்பட்டு, போதைப்பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது,” என்று காவல் துறையினர் கூறுகின்றனர்.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
