பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்?

பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்?

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பித்தப்பை புற்றுநோய் அரிதானது. ஆரம்பக் கட்டத்தில் பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

ஆனால் பெரும்பாலான பித்தப்பை புற்றுநோய்கள் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, அப்போது நோயை சமாளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன?

பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் டி.சுரேஷ்குமார் மற்றும் ஐஐடி மெட்ராஸ் பகுதிநேர பேராசிரியரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருமான டி.ராஜ்குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன?

பித்தப்பை புற்றுநோய் என்பது பித்தைப்பையில் உருவாகும் செல்களின் வழக்கத்துக்கு மாறான வளர்ச்சியாகும்.

“எல்லாருக்கும் இல்லை என்றாலும், சிலருக்கு வயிற்று பகுதியில் வலி இருக்கும். வயிறு உப்பசம், போதிய செரிமானம் இருக்காது. சிலருக்கு, பித்தநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் ஏற்படும் obstructive jaundice ஏற்படலாம். இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டால், பித்தப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும்” என்று பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறைகளை விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.

பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள்

  • வயிற்று வலி, குறிப்பாக வயிற்றின் மேல் வலது பகுதியில்
  • வயிற்று உப்பசம்
  • எடை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமலே எடை குறைவது
  • மஞ்சள் காமாலை: தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாற்றம்
பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பித்தப்பையின் செயல்பாடுகள் என்ன?

பித்தப்பை என்பது நமது வயிற்றின் வலது பக்கத்தில், கல்லீரலுக்குக் கீழே உள்ள ஒரு சிறிய, பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும். இது சுமார் 3 அங்குல நீளமுடையது. பித்தப்பை கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவமான பித்தத்தை சேமிக்கிறது. பித்தம் என்பது கல்லீரல் உற்பத்தி செய்யும் திரவமாகும். பித்தநீர் முக்கியமாக கொழுப்பு, பிலிரூபின் மற்றும் பித்த உப்புகளின் கலவையாகும்.

உணவில் உள்ள கொழுப்புகளை செரிமானம் செய்ய இந்த திரவம் உதவுகிறது.

பித்தப்பை சுமார் 50 மில்லி லிட்டர் பித்தத்தை சேமித்து வைக்கிறது. நமது சிறுகுடலில் கொழுப்புள்ள உணவு இருக்கும்போது, பித்தப்பை பித்தத்தை வெளியிடுகிறது. பித்த கொழுப்பை உடைத்து சிறிய துண்டுகளாக மாற்றுகிறது, இது சிறு குடலில் உள்ள கொழுப்பைக் கொண்ட உணவை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. நாம் சாப்பிட்ட பிறகு, சுருங்கிய பலூன் போல, நமது பித்தப்பை காலியாக இருக்கும். அது மீண்டும் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கும்.

பித்தப்பை மற்ற செரிமான உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பித்த நாளங்கள் கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய் அமைப்பு.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பித்தப்பை புற்றுநோயை எளிதில் கண்டறிய முடியாததற்கு என்ன காரணம்?

பித்தப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள், இந்த நோய்க்கு மட்டுமல்லாமல், மற்ற செரிமான பிரச்சனைகளுக்கும் ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், இந்த அறிகுறிகள் நீடித்து நிலைத்திருந்தால் அல்லது மோசமடைந்தால், அவை புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு.

“பித்தைப்பை புற்றுநோயை பொதுவாக முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஏனென்றால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் இருக்காது. அறிகுறிகள் தென்படும் போது, அது அருகில் உள்ள கல்லீரல், பித்தநீர் குழாய், நெரிகட்டு ஆகியவற்றில் பரவியிருக்கும். அப்போது தான் வயிற்று வலி அல்லது மஞ்சள் காமாலை ஏற்படும். வட மாநிலங்களில் மஞ்சள் காமாலை என்றாலே பித்தப்பை புற்றுநோய் என்று கருதப்படும்” என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், புற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார்

பித்தப்பை புற்றுநோய் ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகமாக உள்ளது?

பித்தப்பை புற்றுநோய் இந்தியாவின் தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் அரிதானதாக இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுகளின் படி, வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் விகிதம் 10 மடங்கு குறைவாக உள்ளது. உதாரணமாக சென்னையில் ஒரு லட்சத்தில் 0.8 பெண்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் டெல்லியில், ஒரு லட்சத்தில், 8.9 பெண்கள் பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஏன் என்று விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் டி ராஜ்குமார்.

“ சிந்து, கங்கை சமவெளி பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. அங்குள்ள நீர் மாசுபாடு காரணமா என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தரமான குடிநீர் இல்லாத பகுதிகளில் டைஃபாய்டு நோய் ஏற்படும். அந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, சில நேரம் உடலில் தங்கி பித்தப்பைக்குள் நுழையவும் வாய்ப்பு இருக்கிறது” என்கின்றார்.

உலகில் தென் அமெரிக்காவில் சிலி நாட்டுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் பித்தப்பை புற்றுநோய் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேரில் 10-12 பேருக்கு பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்று மேலும் கூறுகிறார்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்

பித்தப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு?

எடை கூடுதலாக இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமான பிரச்னைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும்.

பொதுவாக நார்சத்து குறைவாக எடுத்துக் கொள்பவர்கள், மலச்சிக்கல் கொண்டவர்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்பவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

பித்தப்பை கற்களுக்கும் பித்தப்பை புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா?

பித்தப்பையில் கல் இருப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார்.

“ ஆனால், இந்தியாவில் பித்தப்பை கல் உருவாகும் நபர்களின் எண்ணிக்கை, பித்தப்பை புற்றுநோய் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். எனவே பித்தப்பை கல் இருப்பவர்கள் அனைவருக்கும் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் என்று கூற முடியாது. எனினும், கல் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், ஆண்களை விட பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. ” என்றார்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது ஏன்?

“ஏனெனில் பெண்களுக்கு தான் பித்தப்பை கற்கள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏன் பித்தப்பை கற்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று உறுதியாக கூற முடியாது. எனினும் மாதவிடாய் முடிந்த காலத்தில் எடை கூடுதல், உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று விளக்குகிறார் மருத்துவர் சுரேஷ்குமார்.

பித்தப்பை புற்றுநோய்

பட மூலாதாரம், Getty Images

பித்தப்பை புற்றுநோயை எப்படி கண்டறியலாம்?

“அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ மூலமே இதை கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் மூலம் பித்தப்பையில் ஏதோ மாற்றம் இருக்கிறது என தெரியும். எம் ஆர் ஐ செய்தால் என்ன பாதிப்பு என்பது தெரியும். அதை விட பெட் ஸ்கேன் செய்து மிக துல்லியமாக பாதிப்பின் தன்மை மற்றும் வீரியம் தெரியும்” என்கிறார் மருத்துவர் ராஜ்குமார்.

பித்தப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை என்ன?

பித்தப்பை புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய ஒரே தீர்வு பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான். ஆனால் அது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சாத்தியம் இல்லை என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார்.

“ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோய் கண்டறியப்பட்ட இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சிலவற்றையும் முழுவதுமாக நீக்கிட வேண்டும். பித்தப்பையில் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிப்பட்டால், பித்தப்பை முழுவதுமாகவும் அதை சுற்றியுள்ள 2 செ.மீ அளவில் இருக்கும் திசுக்கள் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும். எனவே பித்தப்பையை அகற்றும் போது அருகில் உள்ள கல்லீரலின் ஒரு பகுதியும் அகற்றப்படும்” என்கிறார்.

பித்தப்பை கல் இருப்பவர்கள் சிலருக்கு வலி இருக்கும், சிலருக்கு இருக்காது. அப்படி வலி இருந்தால், பித்தப்பையை முழுவதுமாக நீக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்றும் கூறுகிறார்.

பித்தப்பை இல்லாமல் வாழ முடியுமா?

பித்தப்பை இல்லாமல் வாழ முடியும், ஆனால் அது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும்.

“பித்தப்பை நீக்கம் செய்யப்பட்டால், கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம், பித்தப்பையில் சேமிக்கப்படாமல் நேரடியாக சிறுகுடலில் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக, கொழுப்பை செரிமானம் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கலாம். எனினும் சில எளிய உணவு கட்டுப்பாடுகள் மூலம் சமாளிக்கக் கூடியது ஆகும். பித்தப்பையை நீக்கும் போது, கல்லீரலின் ஒரு பகுதியும் வெட்டி எடுக்கப்படும். அதன் காரணமாகவும் தினசரி வாழ்க்கையை மேற்கொள்ள எந்த தடையும் கிடையாது. ” என்கிறார் மருத்துவர் சுரேஷ்குமார்.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *