மத்திய கிழக்கில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்: எண்ணெய் உற்பத்தியை பாதிக்குமா?

மத்திய கிழக்கில் ரஷ்ய அதிபர் புதின் திடீர் பயணம்: எண்ணெய் உற்பத்தியை பாதிக்குமா?

ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ரஷ்ய அதிபரின் திடீர் வெளிநாட்டு பயணம்

ரஷ்ய அதிபர் புதின் கடந்த புதன்கிழமையன்று சௌதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக நாடுகளுக்கு அதிகாரபூர்வ பயணம் செய்ய உள்ளார்.

யுக்ரேன் போர் தொடங்கியதற்குப் பின் ஒரு சில நாடுகளுக்கே புதின் சென்றுள்ள நிலையில் இந்தச் சந்திப்பு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மத்திய கிழக்கு நாடுகளில் நடைபெற்று வரும் பிரச்னைகளில் மத்தியஸ்தம் செய்வதற்கான தனது விருப்பத்தை ரஷ்யா தெரிவித்துள்ள இந்த நேரத்தில் புதினின் இந்தச் சந்திப்பு நடைபெற உள்ளது.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, இந்த சுற்றுப் பயணத்தை முடித்த பிறகு ரஷ்யாவில் இரானிய அதிபருடன் புதின் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.

முதலில் புதின் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்றுவிட்டு பின்னர் சௌதி அரேபியா செல்வார்.

ரஷ்ய அதிபரின் இந்தப் பயணம் எண்ணெய் உற்பத்தி நாடுகளுடன் முக்கியமான தந்திரோபாய கூட்டணியை அதிகரிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, புதின் தனது பயணத்தின்போது வணிகம் மற்றும் முதலீடு, இஸ்ரேல்-பாலத்தீன போர் குறித்து விவாதிப்பார் என்று கிரெம்ளின் கூறியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு வியாழக்கிழமையன்று ஈரானிய அதிபர் இப்ராஹிம் ரைசியை சந்திக்கிறார் புதின். புதினின் அழைப்பை ஏற்று ரைசி இரான் பிரதிநிதிகளுடன் மாஸ்கோ வரவுள்ளார்.

கடந்த மார்ச் மாதம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐ.சி.சி) கைது உத்தரவு பிறப்பித்ததில் இருந்து ரஷ்ய அதிபர் புதின் எந்தவொரு வெளிநாட்டுப் பயணங்களையும் மேற்கொள்ளவில்லை.

ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சௌதி அரேபியா ஆகிய இரண்டு நாடுகளுமே ஐ.சி.சி ஒப்பந்தத்தில் அங்கம் வகிக்காததால் இந்த இரு நாடுகளிலும் புதினுக்கு கைது அபாயம் இல்லை.

இந்தாண்டு செப்டம்பர் 9 – 10 ஆகிய தேதிகளில் இந்தியா தலைமையில் புது டெல்லியில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில்கூட புதின் பங்கேற்கவில்லை. இத்தனைக்கும் இந்தியா ஐசிசியின் அங்கம்கூட கிடையாது.

புதினின் திட்டத்தில் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

புதினுக்கும், முகமது பின் சல்மானுக்கும் இடையில் உறவு வலுப்பெற்றுள்ளது.

ராய்ட்டர்ஸ் முகமையின் அறிக்கைப்படி, புதின் முதலில் ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சென்று விட்டுப் பின் சௌதி அரேபியா செல்வார். அங்கு அவர் முக்கியமாக இளவரசர் முகமத் பின் சல்மானோடு பேச்சுவார்த்தை நடத்துவார்.

சமீபகாலமாகவே புதினுக்கும், முகமது பின் சல்மானுக்கும் இடையில் உறவு வலுப்பெற்றுள்ளது. 2016ஆம் ஆண்டு எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்குவதில் இவர்கள் இருவரும் முக்கியப் பங்கு வகித்தனர். இந்தக் கூட்டமைப்பு தற்போது ஒபிஇசி பிளஸ்(OPEC Plus) என்ற பெயரில் அறியப்படுகிறது. இரு நாடுகளின் பொருளாதாரத்திற்கும் எண்ணெய் மிக முக்கியமானது.

அதே நேரம் , ஐக்கிய அரபு அமீரகம் ரஷ்யாவின் எண்ணெய் நிறுவனங்களுக்கு வணிகத்திற்கான பெரிய சந்தையாக மாறியுள்ளது. மாஸ்கோ மீது ஐரோப்பா பொருளாதாரத் தடைகளை விதித்தபோது, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய எண்ணெய் உற்பத்தி நிறுவனமான லுகோயில்(Lukoil) தனது வணிகத்தில் பாதியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றியது.

ரஷ்ய அதிபர் அபுதாபி சென்றாலும் அதன் அண்டை நாட்டில் நடைபெறும் காலநிலை உச்சி மாநாட்டில்(Dubai COP28) கலந்து கொள்ளமாட்டார்.

ப்ளூம்பெர்க் அறிக்கையின்படி, யுக்ரேன் போருக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் அவரை தனிமைப்படுத்த முயன்ற போதிலும் புதினின் இந்தச் சந்திப்பு அவர் வலுவடைந்து வருவதைக் குறிப்பதாகத் தெரிவித்துள்ளது.

அக்டோபர் 7 அன்று ஹமாஸ் இஸ்ரேலை தாக்கியதில் இருந்து நடைபெற்று வரும் போரை அமெரிக்காவின் ராஜதந்திர தோல்வியாகக் குறிப்பிட்டு வருகிறார் புதின்.

ரஷ்ய அதிபர் புதின் திடீரென்று சௌதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு செல்வதன் காரணம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கிரெம்ளினுக்கு ஆலோசனை வழங்கி வரும் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கை கவுன்சிலின் தலைவர் ஃபியோதர் லுக்யானோவ் கூறுகையில், இரண்டு முக்கிய வளைகுடா நாடுகளுக்கு புதினின் பயணம் சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்பதற்கான “தெளிவான சமிக்ஞை” என்று தெரிவித்துள்ளார்.

இந்தப் பயணம் மத்திய கிழக்கு நாடுகளில் ரஷ்யாவின் செல்வாக்கை அதிகரிக்க உதவும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவின் இரு முக்கிய நட்பு நாடுகளான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா தற்போது தங்களின் வெளியுறவுக் கொள்கையை சமநிலைப்படுத்தத் தயாராக உள்ளன என்பதற்கான அறிகுறியாகவும் இந்தப் பயணம் அமைந்துள்ளது என்று அவர் கூறுகிறார்.

சௌதி அரபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளும் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக் ப்ளஸின் அங்கமாகும். இதில் ரஷ்யாவே ஆதிக்க சக்தியாகக் கருதப்படுகிறது. கடந்த வாரம் இந்த நாடுகள் எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதற்கு ஒப்புக்கொண்டுள்ளன.

ஒபெக் ப்ளஸ் (OPEC Plus) கூட்டமைப்பு நாடுகள் 2024ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 2.2 பில்லியன் பேரல்களாக எண்ணெய் உற்பத்தியைக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்தக் கூட்டமைப்பின் நாடுகள்தான் உலகின் எண்ணெய் உற்பத்தியில் 40% உற்பத்திக்குப் பொறுப்பானவை.

சௌதி அரேபியாவும், ஐக்கிய அரபு அமீரகமும் ரஷ்யாவின் முக்கிய நட்பு நாடுகள் என்று கிரெம்ளின் ஆதரவு ஆய்வாளர் செர்ஜி மார்கோவ் நம்புகிறார். அதிக எண்ணெய் விலையேற்றத்தைச் சுட்டிக்காட்டிய அவர், ரஷ்யா உருவாக்கியுள்ள நலன்கள் குறித்துப் பேசியுள்ளார். மேலும் ஐக்கிய அரபு அமீரகத்துனான நெருங்கிய உறவுகள் காரணமாக, பல ரஷ்ய நிறுவனங்கள் மேற்குலக நாடுகளின் பொருளாதாரத் தடைகளைத் தவிர்க்க முடிந்தது என்றும் இவர் நம்புகிறார்.

சௌதி அரேபியாவின் எரிசக்தி அமைச்சர் இளவரசர் அப்துல் அஜீஸ் பின் சல்மான் திங்களன்று ப்ளூம்பெர்க்கிற்கு அளித்துள்ள பேட்டியில், இரு நாடுகளுக்கு இடையிலான எண்ணெய் கொள்கை மற்றும் ரஷ்யாவிற்கும் ரியாத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியுள்ளார். இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு ஒபெக் ப்ளஸ் கூட்டமைப்புக்கான அடிப்படை என்றும் அழைக்கப்படுகிறது.

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்த விவாதம்

ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கியது.

இந்த இரு நாடுகளுக்கும் ஒரு நாள் பயணமாகச் செல்லும் புதினின் பேச்சுவார்த்தை திட்டத்தில் இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் குறித்த விவாதமும் இடம்பெற உள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் ஊடகங்களிடம் பேசும்போதும்கூட , இரு நாட்டு தலைவர்களுடனான பேச்சுவார்த்தையில் இருதரப்பு உறவுகள், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் மற்றும் பிற சர்வதேச பிரச்னைகள் குறித்து கவனம் செலுத்தப்படும் என்று கூறியுள்ளார்.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய திடீர் தாக்குதலைத் தொடர்ந்து தொடங்கியது. பாலத்தீனிய போராளிகள் குழுவான ஹமாஸ் இஸ்ரேலிய கிராமங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது ஆயிரக்கணக்கான ராக்கெட்கள் வீசித் தாக்கியதில் நூற்றுக்கணக்கானோர் இறந்து போயினர். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காஸா மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் இதுவரை 16,000த்திற்கும் மேலான மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

பாலத்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுடனும் ரஷ்யா நட்புறவில் உள்ளது. இந்த நட்பு காரணமாக போர் நிறுத்தம் தொடர்பாக மத்தியஸ்தம் செய்யும் நிலை வந்தால் இஸ்ரேல் அல்லது பாலத்தீனம் என எந்தவொரு நாட்டின் சார்பிலும் நிற்க மாட்டேன் என்று கடந்த மாதம் புதின் தெரிவித்திருந்தார்.

புதினுக்கு எதிரான கைது உத்தரவு

ரஷிய அதிபர் புதின் திடீர் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதின் மீது கைது உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

சமீப ஆண்டுகளில் புதின் மிகச் சில வெளிநாட்டு பயணங்களே மேற்கொண்டுள்ளார்.

அதிலும் பெரும்பாலும் ஒரே நாடுகளுக்கே பயணம் செய்துள்ளார். அதுவும் சோவியத் யூனியனில் பங்கு வகித்த நாடுகளுக்கே அவர் சென்றுள்ளார். அதைத் தாண்டி கடைசியாக கடந்த அக்டோபர் மாதம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம்(ஐசிசி) யுக்ரேன் போரில் போர் குற்றம் புரிந்ததாக புதின் மீது கைது உத்தரவை பிறப்பித்துள்ளது.

இந்தக் காரணத்தால் ஆகஸ்ட் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில்கூட புதின் பங்கேற்கவில்லை. அதற்கு அடுத்த மாதம் இந்தியாவில் நடந்த ஜி20 மாநாட்டிலும் அவர் பங்கேற்கவில்லை.

சௌதியும், ஐக்கிய அரபு அமீரகமும் போலவே இந்தியாவும் ஐசிசி உறுப்பினர் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *