
பட மூலாதாரம், Getty Images
நடப்பு உலககோப்பையை அமர்க்களமாக தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி திடீரென கத்துக்குட்டி அணியாக கருதப்படும் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது மிகப்பெரிய ஏமாற்றம் இதுவாகும். ஏற்கனவே இந்த தொடரில் ஆப்கானிஸ்தானிடம் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து தோல்வியை தழுவியது.
தென் ஆப்ரிக்காவில் பிறந்து, நெதர்லாந்து அணிக்காக தற்போது விளையாடும் வீரர்களே அதன் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இந்த போட்டியில் நெதர்லாந்து நிர்ணயித்த இலக்கை எட்ட முடியாமல் அதிரடி வீரர்களைக் கொண்ட தென் ஆப்ரிக்கா சுருண்டது எப்படி? அதன் தோல்விக்கு காரணம் என்ன?
தெம்பா பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, நடப்பு உலககோப்பையில் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையாடி வருகிறது. முதல்ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக 428 ரன்களை குவித்து 102 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்ட தென் ஆப்பிரிக்க அணியானது, 2-வது ஆட்டத்தில் 5 முறை உலக சாம்பியனான ஆஸ்திரேலியாவை 134 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த இரு ஆட்டங்களிலும் அந்த அணி சார்பில் 4 சதங்கள் விளாசப்பட்டுள்ளன. இலங்கை அணிக்கு எதிராக குயிண்டன் டி காக், ராஸி வான் டெர் டஸ்ஸன், எய்டன் மார்க்ரம் ஆகியோர் சதம் விளாசி மிரளச் செய்தனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் குயிண்டன் டி காக் மீண்டும் ஒரு முறை மட்டையை சுழற்றி சதம் அடித்திருந்தார். இதனால் அந்த அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.
மழையால் தாமதம்
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கிடையே தரம்சாலாவில் உள்ள இமாச்சலபிரதேச கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா – நெதர்லாந்து அணிகள் மோதின. மழை காரணமாக தாமதமாக தொடங்கியதால் ஆட்டம் 43 ஓவர்கள் கொண்டதாக மாற்றியமைக்கப்பட்டது.
டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. போட்டியின் முதல் ஓவரினை வீசிய தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் நிகிடி, மெய்டன் ஓவராக வீசியுள்ளார். இந்த ஓவரை விக்ரம்ஜித் சிங் எதிர்கொண்டார். இரண்டாவது ஓவரினை வீசிய ஜான்சென் முதல் பந்தில் மட்டும் மொத்தம் இரண்டு வைய்டு வீசினார்.
களத்தில் ரன்களை சேர்க்க சிரமப்பட்ட நெதர்லாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. விக்ரமஜித் சிங் 2 ரன்களிலும், மேக்ஸ் ஓ தாவூத் 18 ரன்களிலும் காலின் அக்கர்மேன் 12 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். நெதர்லாந்து அணி 50 ரன்களை சேர்ப்பதற்குள்ளாகவே 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
20 ஓவர்கள் முடிவில் நெதர்லாந்து அணி 4 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் சேர்த்திருந்தது. அந்த அணி வீரர்கள் தடுமாறிய போது கேப்டன் எட்வர்ட்ஸ் மட்டும் அபாரமாக விளையாடினார்.

பட மூலாதாரம், Getty Images
கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய ஸ்காட் எட்வர்ட்ஸ்
நெதர்லாந்து அணியின் கேப்டன் ஸ்காட் எர்வர்ட்ஸ் 69 பந்துகளை எதிர்கொண்டு 10 பவுண்டரி ஒரு சிக்ஸர் விளாசி 78 ரன்கள் குவித்து அணியை வலுவான நிலைக்கு கொண்டுவர முக்கிய பங்காற்றியுள்ளார். அவர் 53 பந்துகளில் அரைசதம் விளாசினார். அவரது அதிரடியால் நெதர்லாந்து அணி கடைசி 9 ஓவரில் 104 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 43 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்தது.
தென் ஆப்ரிக்காவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி
இதனை அடுத்து 246 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது. முதல் ஓவரினை வீசிய நெதர்லாந்து அணியின் டட் ரன் ஏதும் கொடுக்காமல் ஓவரை மெய்டனாக்கினார். தென்னாப்பிரிக்கா அணி தனது ரன் கணக்கை போட்டியின் இரண்டாவது ஓவரில்தான் துவங்கியது. கேப்டன் பவுமா 16 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த தொடரின் தனது முதல் இரண்டு போட்டிகளில் சதம் விளாசிய டி காக், 22 பந்துகளில் 20 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெண்டர் டூசன் 4 ரன்களில் வெளியேற ஏய்டன் மார்க்கரம் ஒரு ரன்னில் பெவிலியன் திரும்பினார். இதனால் தென்னாப்பிரிக்க அணி 44 ரன்களை சேர்ப்பதற்குள் நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனை அடுத்து டேவிட் மில்லர் மற்றும் ஹென்றிக் கிளாசன் ஜோடி பொறுமையாக நின்று அணியை சரிவில் இருந்து மீட்டனர். ஆனால், முக்கியமான கட்டத்தில் கிளாசென் 28 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கில்லர் மில்லர் அவுட்..!
தென்னாப்பிரிக்கா அணியின் தொடக்க வீரர்கள் சரிந்ததால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான டேவிட் மில்லர் மீது மொத்த சுமையும் விழுந்தது. அணியை காப்பாற்றுவார் என எதிர்பார்க்கப்பட்ட டேவிட் மில்லர் 43 ரன்களில் தனது விக்கெட்டை பறி கொடுத்தார். நெதர்லாந்து அணிக்கு மிகவும் ஆபத்தான பேட்ஸ்மேனாக களத்தில் இருந்த அவரை வான் பீக் பந்தில் க்ளீன் போல்ட் ஆக்கி வெளியேற்றினார்.
தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க போராடிய பார்ட்னர்ஷிப்
தென்னாப்பிரிக்கா அணியின் கடைசி விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக மகாராஜ் – நிகிடி ஜோடி தோல்வி வித்தியாசத்தைக் குறைக்க போராடினர். கேசவ் மகாராஜா 40 ரன்கள் சேர்த்தார். இதனால் தென் ஆப்ரிக்க அணி கவுரவமான இலக்கை எட்டியது. தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தென் ஆப்ரிக்காவை பாதித்த எக்ஸ்ட்ராஸ்
தென்னாப்பிரிக்க அணி எப்போதுமே எதிர்பாராத நேரத்தில் இவ்வாறு அதிர்ச்சி தோல்வியை தழுவுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே டி20 உலக கோப்பை போட்டியில் இதே நெதர்லாந்து அணியிடம் தென்னாப்பிரிக்கா தோல்வியை தழுவி இருக்கிறது.
தென்னாப்பிரிக்கா அணி இந்த போட்டியில் மொத்தம் 31 ரன்களை எக்ஸ்ட்ராவாக வழங்கியுள்ளது. நெதர்லாந்து அணி தரப்பில் 8 ரன்கள் மட்டுமே எக்ஸ்ட்ராவாக வழங்கப்பட்டுள்ளன.
புள்ளிப் பட்டியலில் என்ன மாற்றம்?
இந்த வெற்றி இந்த தொடரில் நெதர்லாந்து அணியின் முதல் வெற்றியாக பதிவாகியுள்ளது. இந்த வெற்றி மூலம் நெதர்லாந்து அணி புள்ளிப்பட்டியலில் ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி 8வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
இந்த தோல்வியினால் தென்னாப்பிரிக்காவிற்கு புள்ளிப்பட்டியலில் எந்தவிதமான தாக்கத்தினை ஏற்படுத்தவில்லை என்றாலும், ரன்ரேட்டில் சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. தென்னாப்பிரிக்கா அணி புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து 3வது இடத்தில் நீடிக்கிறது.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்