பாலத்தீனம் கனவை ஹமாஸ் தாக்குதல் தகர்த்துவிடுமா? அதை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது சரியா?

பாலத்தீனம் கனவை ஹமாஸ் தாக்குதல் தகர்த்துவிடுமா? அதை விடுதலைப் புலிகளுடன் ஒப்பிடுவது சரியா?

இஸ்ரேல் vs பாலத்தீனம்

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலைத் தாக்குவதன் மூலம் பாலத்தீனர்களின் உரிமைகளைப் பற்றி அக்கறை கொண்ட பலரை நீங்கள் விலக்கி வைத்துள்ளீர்கள், அவர்களின் நோக்கத்தைப் பல ஆண்டுகள் பின்னோக்கித் தள்ளியிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் உணர்கிறீர்களா?

பிரிட்டிஷ் தொலைக்காட்சி சேனலின் இந்தக் கேள்விக்கு பதிலளித்து, ஹமாஸின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளுக்கான தலைவர் பாசம் நயீம், உலகில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆனால், அவரது கூற்று எவ்வளவு உண்மை?

1948-ல் இஸ்ரேல் உருவானதிலிருந்து இதுவரை இஸ்ரேலுக்குள் இவ்வளவு பெரிய அளவில் வன்முறை நிகழ்ந்தது இதுவே முதல் முறையாகும்.

பாலத்தீன அமைப்பான ஹமாஸின் தாக்குதலில் இஸ்ரேலில் குறைந்தது 1,000 பேர் கொல்லப்பட்டனர், அதேநேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

காசா பகுதியில் சுமார் 20 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர், அவர்களில் பெரும்பாலானோர் மனிதாபிமான உதவியை நம்பியே உள்ளனர். இரு தரப்பிலும் கொல்லப்பட்டவர்களில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் பெண்கள் அடங்குவர்.

ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இசை விழாக்களில் நடனமாடி கொண்டிருந்த இளைஞர்களைக் கொலை செய்வது, குடும்பங்கள், குழந்தைகள், பெண்களை கடத்திச் செல்வது, வீடுகளுக்குள் நுழைந்து மக்களை கொலை செய்வது போன்ற படங்களை சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான மக்கள் பார்த்துள்ளனர். இதைப் பார்த்து உலகம் அதிர்ச்சியடைந்துள்ளது.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், SAID KHATIB/AFP VIA GETTY IMAGES

மறுபுறம், காசாவில் பழிக்குப் பழி வாங்கும் வகையில் கொல்லப்பட்ட மக்களின் படங்கள் மற்றும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அவை மிகவும் வேதனையளிக்கக் கூடியவை.

நார்வே அகதிகள் கவுன்சிலின் ஜான் எகெலண்ட் ஒரு தொலைக்காட்சி சேனலில், “இந்த படங்கள் உலகம் முழுவதும் பரவி வருகின்றன. இது பாலத்தீனர்களின் நோக்கத்துக்கு (அவர்களின் உரிமைகளுக்கு) மிகவும் மோசமானது, ஏனெனில் பெரிய அளவில் பழிக்குப் பழி வரும்” என்று கூறினார்.

கடத்தப்பட்ட பிணைக் கைதிகளை கொலை செய்வதாக ஹமாஸ் மிரட்டியுள்ளது.

பாலத்தீனர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பப்பட்ட ஐரோப்பா, கனடா, ஆஸ்திரேலியா, மத்திய கிழக்கு நாடுகள், இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட பல நாடுகளின் அரசாங்கங்கள் இன்று ஹமாஸின் தாக்குதல்களை கண்டித்துள்ளன.

மூத்த பத்திரிகையாளர் மேதி ஹசன் X தளத்தில், “குழந்தைகள் பிணையாக பிடிக்கப்பட்டிருப்பது உண்மை என்றால், அது மிருகத்தனம், அது அமைதிக்கும் வழிவகுக்காது, இஸ்ரேலிய ஆக்கிரமிப்பையும் முடிவுக்கு கொண்டு வராது” என்று எழுதியுள்ளார்.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், Getty Images

சதம் ஹவுஸ் சிந்தனை குழுமத்தின் பேராசிரியரான யோசி மெகெல்பெர்க், “இந்தத் தாக்குதல் பாலத்தீனர்களுக்கு எந்த பயனும் அளிக்காது. இது இஸ்ரேலின் தடை விதிப்பு கொள்கையை மேலும் வலுப்படுத்தும். தாக்குதலின் நோக்கம் இஸ்ரேலின் பக்கத்து நாடுகளுடன் உறவுகளை மேம்படுத்துவதைத் தடுப்பதாக இருந்தால், இந்த தாக்குதல்கள், பணயக் கைதிகளை எடுத்துச் சென்ற நடவடிக்கைகள் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் பிராந்திய தலைவர்களுக்கு பாலத்தீனத்திற்கு பேச்சுவார்த்தைக்கான நம்பகமான கூட்டாளி இல்லை என்ற செய்தியை அனுப்பும்” என்று எழுதுகிறார்.

பாலத்தீனர்கள் ஆபிரகாம் உடன்படிக்கையின் கீழ் மத்திய கிழக்கு நாடுகளுடன் இஸ்ரேலின் உறவுகள் மேம்படுவதைப் பார்த்துள்ளனர்.

பல நிபுணர்களும், தாக்குதலுக்கான காரணங்களில் ஒன்று இஸ்ரேலுக்கும் சவுதி அரேபியாவிற்கும் இடையிலான அமெரிக்கா தலைமையிலான பேச்சுவார்த்தைகள் என்று கூறுகின்றனர்., பாலத்தீனர்களுக்கு இந்த ஒப்பந்தத்தால் மிகப்பெரிய இழப்பு ஏற்படும் மற்றும் அவர்களின் உரிமைகள் என்றென்றும் பின்னால் விடப்படும் என்ற செய்தியை இந்த பேச்சுவார்த்தைகள் அனுப்பின.

பாலத்தீனத்திற்கான ஆதரவு இந்திய வெளியுறவுக் கொள்கையின் முக்கிய பகுதியாக இருந்து வருகிறது, ஆனால் கடந்த சில ஆண்டுகளில் இந்தியா-இஸ்ரேல் உறவுகள் ஆழமடைந்துள்ளன.

பாலத்தீன நிறுவனமான ஹமாஸின் தாக்குதலை இந்திய பிரதமர் நரேந்திர மோதி “பயங்கரவாத தாக்குதல்” என்று விவரித்தது அதே கோணத்தில் பார்க்கப்படுகிறது.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், Getty Images

‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி X தளத்தில் எழுதியுள்ளார்: “இலங்கையில் தமிழர்களின் உரிமைகள் பிரச்சினையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கொடூரத்தனம் மிகவும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அது போலவே, பாலத்தீன விவகாரத்திலும் (அல்லது அவர்களின் உரிமைகள் பிரச்சினையிலும்) தீவிரவாதிகள் காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஹமாஸின் கொடூரத்தனம் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.”

“அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை உலகம் ஒருபோதும் மன்னிக்காது” என்று அவர் எழுதுகிறார்.

மறுபுறம், லிபியா, ஜோர்டான் மற்றும் மால்டாவுக்கான முன்னாள் இந்திய தூதர் அனில் திரிகுணாயத் கூறுகையில், “ஹமாஸின் சமீபத்திய தாக்குதலுக்கு பாலத்தீன விவகாரத்திலோ அல்லது அவர்களின் உரிமைகள் மீதோ எந்த தாக்கமும் ஏற்படாது” என்று கூறினார்.

“மத்திய கிழக்கு முழுவதும், ஐரோப்பாவில், கனடா போன்ற நாடுகளில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. இதற்கு அர்த்தம் பாலத்தீனத்திற்கு மக்களிடையே ஆதரவு இருக்கிறது” என்று அவர் கூறுகிறார்.

இஸ்ரேல்-பாலத்தீன மோதலில் சமீபத்திய வன்முறை குறித்து பேசிய பேராசிரியர் ஏ.கே.பாஷா, “இப்பகுதியில் இரத்தக்களரி நீண்ட காலமாக நடந்து வருகிறது. இரு தரப்பிலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மத்திய கிழக்கு-இந்தியா உரையாடலுக்கான மையத்தின் இயக்குநரான பேராசிரியர் ஏ.கே.பாஷா, ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலில் இருந்து வரும் படங்கள் பாலத்தீனர்களுக்கான உணர்வுகளில் “சிறிய தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று நம்புகிறார், ஆனால் இஸ்ரேல் என்ன செய்கிறது அல்லது நிலத் தாக்குதல்களை நடத்தப் போகிறது என்பது “இஸ்ரேலுக்கான உணர்வுகளை முற்றிலுமாக அழித்துவிடும்” என்றார்.

ஹமாஸ் தாக்குதல்களின் விளைவு

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், PATRICIA DE MELO MOREIRA/AFP VIA GETTY IMAGES

ஹமாஸின் தாக்குதல்களின் விளைவாக, பாலத்தீனம் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறும் நிதி உதவி குறித்து “மறுபரிசீலனை” செய்யப்படுவதாக அறிக்கைகள் கூறுகின்றன.

பாலத்தீனத்திற்கு இந்த நிதி உதவி மிகவும் முக்கியமானது என்பது குறிப்பிடத்தக்கது.

பாலத்தீனத்திற்கான ஐரோப்பிய யூனியனின் நிதி உதவி எந்த வகையிலும் இஸ்ரேலைத் தாக்கப் பயன்பட்டு விடக்கூடாது என்பதற்காக நிதியுதவி குறித்து உடனடியாக மறுபரிசீலனை செய்யப்படும் என ஐரோப்பிய ஆணையம் தெரிவித்துள்ளது.

ஹமாஸின் தாக்குதல்களுக்கு பதிலளித்து, ஆஸ்திரியா பாலத்தீனத்திற்கான சுமார் $20 மில்லியன் நிதி உதவியை நிறுத்துவதாக தெரிவித்துள்ளது.

பாலத்தீனத்திற்கான பொருளாதார உதவி குறித்து ஜெர்மனியிலும் விவாதம் நடந்து வருகிறது, அங்கு ஒரு அமைச்சர் இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, “பாலத்தீனப் பகுதிகளுடன் எங்கள் முழு உறவும் மறுபரிசீலனை செய்யப்படும்” என்று கூறினார்.

பல பெரிய ஹாலிவுட் நட்சத்திரங்கள் பகிரங்கமாக இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆயுதங்களை அனுப்பத் தொடங்கியுள்ளது, வேறு எந்த நாடு அல்லது குழுவும் இஸ்ரேலைத் தாக்க வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளாதபடி, போர் விமானங்கள் மற்றும் கடற்படை போர்க்கப்பல்களை அப்பகுதிக்கு அனுப்பி வருகிறது.

காசாவை ஆளும் ஹமாஸிற்கு தனது மக்களிடம் என்ன பொறுப்பு உள்ளது மற்றும் மக்கள் மீதான பொருளாதார பாதிப்பு அல்லது இஸ்ரேலிய தாக்குதலுக்கு யார் பொறுப்பு ஏற்பார் என்பது குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், SAID KHATIB/AFP VIA GETTY IMAGES

இஸ்ரேல் பாலத்தீன் விவகாரத்தின் வரலாறு

இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்திற்கும் இடையிலான இந்த நீண்டகால சண்டை நிலத்திற்கானது.

இஸ்ரேலும் பாலத்தீனமும் அமைதியுடன் வாழ வேண்டிய இரண்டு தனி நாடுகள் என்று சர்வதேச சமூகம் பேசுகிறது, ஆனால் அனைத்து முயற்சிகளையும் தாண்டி இது நடக்கவில்லை.

பாலத்தீனர்கள், இஸ்ரேல் பல தசாப்தங்களாக தங்களை மனிதாபிமானமற்ற முறையில் நடத்தி வருவதாகவும், இஸ்ரேல் தொடர்ந்து தங்கள் நிலத்தை ஆக்கிரமித்து வருவதாகவும் கூறுகின்றனர்.

இஸ்ரேல் இன்னும் மேற்கு கரை பகுதியை ஆக்கிரமித்துள்ளது, ஆனால் காசாவை விட்டு வெளியேறிவிட்டது.

கிழக்கு ஜெருசலேம், காசா மற்றும் மேற்கு கரை பகுதிகளில் வசிக்கும் இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

காசா பகுதி பாலத்தீன ஆயுதக்குழுவான ஹமாஸால் ஆளப்படுகிறது.

கடந்த காலங்களில் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே பல போர்கள் நடந்துள்ளன. ஆயுதங்கள் ஹமாஸைச் சென்றடையாதபடி இஸ்ரேலும் எகிப்தும் காசாவின் எல்லைகளை கடுமையாகக் கட்டுப்படுத்துகின்றன, ஆனால் இது பாலத்தீனர்களுக்கு பல பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

விரிவடையும் இஸ்ரேலியர்களின் குடியேற்றங்களும் பாலத்தீனயர்களின் கோபத்திற்கான ஒரு காரணமாகும்.

ஹமாஸின் தாக்குதல் பாலத்தீன அரசின் கனவைத் தகர்த்துவிடுமா?

பட மூலாதாரம், Getty Images

லிபியா, ஜோர்டான் மற்றும் மால்டாவிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் அனில் திரிகுணாயத் கூறுகையில், “பாலத்தீன பிரச்னை தீர்க்கப்படும் வரை இந்த பிரச்னை தொடரும். சர்வதேச சமூகம் இரு தரப்பும் ஒன்றாக வாழ வழி கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறினார்.

இந்தியா-மேற்கு ஆசிய உரையாடலுக்கான மையத்தின் இயக்குநர் பேராசிரியர் ஏ.கே.பாஷா கூறுகையில், “பாலத்தீன விவகாரம் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாக மாறிவிட்டது. உலகம் முழுவதும் மட்டுமல்ல, அரபு நாடுகளிலும், பாலத்தீன மக்களிடையே மட்டுமல்ல, முஸ்லிம்களிடையே மட்டுமல்ல, காலனியாதிக்கம் மற்றும் ஏகாதிபத்தியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில், பாலத்தீனர்களுக்கான ஆதரவு மெல்ல அதிகரித்து வருகிறது” என்றார்.

ஆனால், ‘தி இந்து’ பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் மாலினி பர்த்தசாரதி இந்த கருத்துக்கு உடன்படவில்லை.

“எந்த ஒரு இன மற்றும் பிராந்திய மோதலையும் வன்முறையால் தீர்க்க முடியாது. குற்றமற்ற மக்கள் மீதான கொடூரமான தாக்குதல்கள் இந்த மோதலை மட்டுமே அதிகரிக்கும்” என்று அவர் கூறுகிறார்.

இது இஸ்ரேலின் 9/11 தருணம் என்றும் பேச்சுவார்த்தை மேசைக்கு ஒருபோதும் வராது என்றும் இஸ்ரேல் கூறியது.

“மீண்டும் வந்து பாலத்தீன மக்களிடம் பேரழிவு தரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பழி நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும். பின்னர் இரு தரப்பிலும் உள்ள தீவிரவாதிகள் முன்னுக்கு வருவார்கள், இராணுவ விருப்பம் மேலோங்கும்.”

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: பிபிசிதமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *