பட மூலாதாரம், Getty Images
“பல ஆண்டுகளாக நான் பல வானொலி நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன். மேலும் நேரலை பார்வையாளர்களுக்கு முன்னால் நூற்றுக்கணக்கான பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளேன்.
அத்தகைய அமர்வுகளில் பொதுவாக, மக்கள் கேள்விகளை எழுப்புவார்கள். அவர்கள் தயக்கமின்றி பங்குபெறும் வகையில், நான் அவர்களை வசதியாக உணர வைப்பேன்.
ஆனால் கேள்விகள் கேட்க கைகள் உயர்த்தப்படும் போதெல்லாம், அவற்றில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களைவிடக் குறைவாகவே இருக்கும். சில நேரங்களில் பெண்களிடம் கேட்பட்ற்குக் குறைவான கேள்விகள் இருக்கலாம்.
ஆனால் கைகளை உயர்த்திய பிறகும், பல முறை தங்கள் முறை வருவதற்கு முன்பே அவர்கள் கைகளைக் கீழே இறக்கி விடுவார்கள். அவர்களில் பலர் கேள்வி கேட்க விரும்பியதாகவும், ஆனால் தனது கேள்வி அவ்வளவு நன்றாக இல்லை என்று நினைத்து கையை இறக்கி விட்டதாகவும் கூறினர்.”
பிரிட்டிஷ் எழுத்தாளர் கிளாடியா ஹாமண்ட் இவ்வாறு கூறுகிறார்.
மேலும் அவர், “பல ஆண்டுகளாக எனக்கு இந்த அனுபவம் உள்ளது. எனவே தரவுகள் என்ன கூறுகின்றன என ஆராய்ந்து பார்த்தேன்.
இந்தத் தலைப்பில் செய்யப்பட்ட பெரும்பாலான ஆராய்ச்சிகள் கல்வி மாநாடுகளில் கலந்து கொள்ளும் மக்கள் மற்றும் அவர்கள் கேட்கும் கேள்விகளைக் கொண்டு செய்யப்பட்டுள்ளன. என் அனுபவமும் இதற்கு வித்தியாசமானது அல்ல.”
ஆராய்ச்சி என்ன சொல்கிறது?
பேர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஷோஷனா ஜார்விஸ் 2022ஆம் ஆண்டு ஆராய்ச்சி ஒன்றை நடத்தினார். இந்த ஆராய்ச்சி உயிரியலாளர்கள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் வானியலாளர்களை உள்ளடக்கிய ஒரு மாநாட்டின் அடிப்படையில் நடத்தப்பட்டது.
இதில், ஷோஷனா ஜார்விஸ் மாநாட்டில் யார் எத்தனை கேள்விகள் கேட்டார்கள் என்பதைப் பார்த்தார். அதாவது, அதில் கலந்து கொண்ட பெண்களும் ஆண்களும் எந்த விகிதத்தில் கேள்விகள் கேட்டார்கள் எனக் கணக்கிட்டார்.
மாநாட்டில் ஆண்கள் 63 சதவீதமும், மீதமுள்ளவர்கள் பெண்களாகவும் பங்கேற்றனர். ஆனால் ஆண்கள் 78 சதவீதம் கேள்விகளைக் கேட்டனர், பெண்கள் 22 சதவீதம் கேள்விகளை மட்டுமே கேட்டனர். அவர்களின் இருப்பிற்கு ஏற்ப இந்த விகிதம் இருந்திருக்க வேண்டும். இதன்மூலம் பெண்கள் கேள்விகள் கேட்க அதிகம் சங்கடமாக உணர்ந்ததாக ஜார்விஸ் கண்டறிந்தார்.
லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த அலிசியா கார்ட்டரும் தனது ஆய்வில் இதேபோன்ற முடிவுகளைக் கண்டறிந்தார். அலிசியா இந்த ஆய்வை 10 நாடுகளில் நடத்தப்பட்ட 250 கல்வி கருத்தரங்குகளின் போது செய்தார்.
இதில், இந்த மாநாடுகளில் பெண்களில் நான்கில் ஒரு பகுதியினர் மட்டுமே கேள்விகள் கேட்டதாகவும், ஆண்களுக்கு இணையாக அவர்களின் இருப்பு இருந்ததாகவும் கண்டறிந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் பெண்கள் கேள்விகள் கேட்கத் தயங்குகிறார்களா?
இந்தியாவிலும் நிலைமை இதுதானா? டெல்லி பல்கலைக்கழகத்தில் ஆய்வு மாணவராக உள்ள மோரோமி தத்தா, “இந்தியாவில் பெண்கள் கருத்தரங்குகளில் கலந்து கொண்டாலும், அவர்கள் தரப்பிலிருந்து மிகக் குறைவான கேள்விகளே கேட்கப்படுகின்றன,” என்று கூறுகிறார்.
சர்வதேச கருத்தரங்குகளில் பேச்சாளராகப் பங்கேற்கும் மோரோமி தத்தா, “நான் இதை அனுபவித்திருக்கலாம், ஆனால் இந்தியாவை ஒப்பிடும்போது, பெண்கள் சர்வதேச கருத்தரங்குகளில் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வது மட்டுமல்லாமல் அதிக கேள்விகளையும் கேட்கிறார்கள்,” என்று கூறுகிறார்.
பெண்கள் கேள்விகள் கேட்கத் தயங்குவதற்கான காரணம், அவர்களின் குடும்ப சூழல் அல்லது பணிச்சுமை போன்றவையாக இருக்கலாம் என்று அவர் கூறுகிறார்.
உரையாடலின் போது, மோரோமி தத்தா ஒரு முக்கியமான கேள்வியை எழுப்பினார். “கடந்த சில ஆண்டுகளின் முடிவுகளைப் பார்த்தால், பெண்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்புத் தேர்வுகளில் முதலிடம் பிடித்துள்ளனர். இருந்தபோதிலும், நான் பணியாற்றும் துறையில்கூட பெண்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகவில்லை, ஏன்?” என்கிறார்.
டெல்லி பல்கலைகழகத்தில், ஆராய்ச்சி மாணவர்களாக ஆண்களைவிட இன்னும் குறைவான பெண்கள் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், மோரோமி தத்தா
பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களை பெண்கள் பெற்றாலும் ஏன் பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது எனக் கேள்வி எழுப்புகிறார் டெல்லி பல்கலைக்கழக ஆய்வு மாணவர் மோரோமி தத்தா.
இளம் பெண்களிடையே ஏற்படும் உடல்நலப் பிரச்சினைகள் குறித்து ஏற்பாடு செய்யப்பட்ட கருத்தரங்கில் சமீபத்தில் பேச்சாளராக பங்கேற்ற விம்லோக் திவாரி, தனது அனுபவம் வேறு மாதிரியாக இருந்ததாக கூறுகிறார்.
“ஆண்களும் பெண்களும் இருக்கும் கருத்தரங்குகளில், பெண்கள் அதிக கேள்விகள் கேட்பதைக் காண முடிந்தது. விகிதத்தைப் பற்றி பேசினால், கருத்தரங்குகளில் 60 முதல் 70 சதவிகிதம் கேள்விகள் பெண்களால் கேட்கப்படுகின்றன” என்று அவர் கூறுகிறார்.
விம்லோக் திவாரி டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆப்பிரிக்க ஆய்வுகள் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளார்.
‘இந்தியாவை உருவாக்குவதில் பெண்களின் பாதச்சுவடு’, ‘வளர்ச்சியில் பெண்கள்’, ‘வெளியுறவுக் கொள்கையில் இந்தியக் கண்ணோட்டம்’, ‘காந்தியும் இன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் ஆப்பிரிக்க உறவுகளும்’ போன்ற கருத்தரங்குகளில் பேச்சாளராக கலந்து கொண்ட விம்லோக் திவாரி கூறுகிறார், “இரு பாலினரும் கலந்து கொள்ளும் கருத்தரங்குகளில், கேள்விகள் கேட்கும் பல பெண்கள் உள்ளனர், ஆனால் பெரும்பாலான பெண்கள் பொதுவான கேள்விகளைக் கேட்கிறார்கள், ஆண்கள் நாம் கொடுக்கும் பதில்களிலிருந்து அதிக கேள்விகளைக் கேட்கிறார்கள்.”
மேலும், “சிறு துறை அளவிலான கருத்தரங்குகளில், பெண்களின் பங்கேற்பு மற்றும் அவர்கள் கேட்கும் கேள்விகள் குறைவாக உள்ளன. சமீபத்தில் ‘மண்டேலா மற்றும் காந்தி’ குறித்து நடந்த கருத்தரங்கில், கேள்விகள் கேட்க 20 பேருக்கு வாய்ப்பு அளித்தோம். அங்கு மூன்று பெண்கள் மட்டுமே கேள்விகள் கேட்டனர்.” என்கிறார்.
“பெண்களுக்கு தங்கள் கேள்விகளைப் பற்றி மக்கள் விமர்சிப்பார்கள் என்று தயக்கம் உள்ளது. இதற்கு பின்னால் குடும்ப மற்றும் சமூக காரணங்களும் உள்ளன.” என்று விம்லோக் கூறுகிறார்.
மேலும் ஆராய்ச்சி துறையில் ஆண்களின் ஆதிக்கத்திற்கான காரணங்களையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
பட மூலாதாரம், விம்லோக் திவாரி
பெரும்பாலான பெண்கள் பொதுவான கேள்விகளைக் கேட்கிறார்கள், ஆண்கள் நாம் கொடுக்கும் பதில்களிலிருந்து அதிக கேள்விகளைக் கேட்கிறார்கள் என ஆய்வு மாணவர் விம்லோக் திவாரி கூறுகிறார்.
பெண்கள் கேள்விகள் கேட்க எப்படி தூண்டுவது?
பெண்கள் கேள்விகள் கேட்பதை ஊக்குவிக்க முடியும்?
இந்தக் கேள்விக்கு பதிலளித்து, கொரோனா காலத்தை நினைவு கூறுகிறார் மோரோமி.
“கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட ஆன்லைன் கருத்தரங்குகளில் பெண்கள் அதிக கேள்விகளைக் கேட்பார்கள். அப்போது அவர்களின் அடையாளம் மறைக்கப்பட்டிருக்கலாம். இதனால் அவர்கள் கேள்விகள் கேட்க வசதியாக இருந்திருக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
“கருத்தரங்கின் ஏற்பாட்டாளர்கள் ஆன்லைனில் செல்ல நிர்ப்பந்திக்கப்பட்டபோது, மக்களுக்கு வாய் திறக்காமல் கேள்விகள் கேட்க ஒரு புதிய வாய்ப்பைக் கொடுத்தது. பின்னர் அவர் சாட் பெட்டியில் தட்டச்சு செய்து அல்லது பெயரைக் குறிப்பிடாமல் கேள்விகள் கேட்பார்கள். எந்தவிதத் தயக்கமும் இல்லை,” என்கிறார் மோரோமி.
பட மூலாதாரம், Getty Images
ஆராய்ச்சியில் என்ன கண்டுபிடிக்கப்பட்டது?
இன்ஸ்டியூட் பாஸ்டர் என்ற புகழ்பெற்ற உயிரி மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளராக இருக்கும் ஜுல்ஹன்லு ஜங், மாறான அனுபவத்தைப் பெற்றார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற உயிரி தரவுகள் குறித்த ஆன்லைன் கருத்தரங்குகளில் ஆண்கள் மற்றும் பெண்களால் கேட்கப்பட்ட கேள்விகளை எண்ணினார்.
ஆன்லைனில் செல்லும் முன், அத்தகைய கருத்தரங்குகளில் ஆண்களே பெரும்பான்மையாக இருந்தனர். ஆனால் இந்தக் கருத்தரங்கு ஆன்லைனில் ஏற்பாடு செய்யப்பட்டபோது, அதில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களுக்குக் கிட்டத்தட்ட சமமாக மாறியது. ஆனால் ஆண்கள் 115 கேள்விகளைக் கேட்டனர். அதே நேரத்தில் பெண்கள் 57 கேள்விகளைக் கேட்டனர்.
அத்தகைய கருத்தரங்குகளில், மூத்த ஆண்கள் பெண்களைவிட அதிக கேள்விகளைக் கேட்பதாகவும் ஜங் கூறுகிறார்.
கருத்தரங்கின் நெறியாளர் அல்லது தலைவர் ஆணாக இருந்தால். அது பெண்களின் கேள்விகளைப் பாதிக்கும் என்று ஓர் ஆராய்ச்சியில் கண்டறியப்பட்டது. ஆனால் ஜங் நடத்திய ஆராய்ச்சியில், கருத்தரங்கிற்கு தலைமை தாங்குபவர் பெண்களின் கேள்விகளுக்கு எந்த வித்தியாசமும் ஏற்படுத்தவில்லை, ஆனால் நெறியாளரின் உத்தி நிச்சயமாக வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்று கண்டறிந்துள்ளார்.
பெண்கள் கேள்வி கேட்க ஏன் தயங்குகிறார்கள்?
ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு முக்கிய உளவியல் மாநாட்டில் கலந்து கொண்ட 234 ஆராய்ச்சி மாணவர்களைக் கணக்கெடுப்பு நடத்தினர். இந்த மாநாட்டில் 61% பங்கேற்பாளர்கள் பெண்கள்.
இந்த மாநாட்டிலும், பொதுவாக மற்ற மாநாடுகளிலும் கேள்விகள் கேட்க, தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள, பேச்சாளர்களுடன் தொடர்பு கொள்ள எவ்வளவு வசதியாக உணர்கிறீர்கள் என்று அவர்களிடம் கேட்கப்பட்டது.
அவர்களில் பலர் கேள்விகள் கேட்பதற்கும் அவற்றுக்குக் கடுமையான எதிர்வினைகள் வருவதற்கும் எவ்வளவு பயந்தார்கள் என்பதையும், இதனால் அவர்கள் அடிக்கடி கேள்விகள் கேட்பதை ஒத்தி வைத்ததாகவும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பெண்கள் கேள்விகள் கேட்கவும் தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தவும் வசதியாக உணரவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகிறார்கள். ஏனென்றால் அவர்களில் பெரும்பாலானோர் கேள்விகள் கேட்ட பிறகு கிடைக்கும் கடுமையான எதிர்வினையைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள்.
பெண்கள் கேள்விகள் கேட்காததற்கு வேறு காரணங்களும் உள்ளன. முந்தைய மாநாட்டில் பெண்ணின் கருத்து குறைத்து மதிப்பிடப்பட்ட அல்லது புறக்கணிக்கப்பட்ட அனுபவம் போன்றவை, பெண்கள் குறைவாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டது ஆகியவையும் காரணங்களாக இருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களை நன்றாகப் புரிந்துகொள்வதன் மூலம் மட்டுமே, மாநாட்டு ஏற்பாட்டாளர்கள் பெண்கள் சமமாகப் பங்கேற்பதற்கான தடைகளை நீக்க முடியும்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
நன்றி
Publisher: பிபிசிதமிழ்
