இந்திய மல்யுத்த வீரர்கள் 2022-ம் ஆண்டு இறுதியில் WFI-ன் அப்போதைய தலைவராக இருந்த பா.ஜ.க எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீராங்கனைகளைப் பாலியல்ரீதியில் துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தனர். மேலும், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் நீண்ட நாள்களாக ஜந்தர் மந்தரில் போராடி வந்தனர். இந்தப் போராட்டம் உலக அளவில் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, இந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட உலக அளவில் பரிசுகளை வென்ற மல்யுத்த வீராங்கனைகள் காவல்துறையால், துன்புறுத்தப்பட்டு கைதுசெய்யப்பட்டனர்.

இதற்கிடையே பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி காவல்துறை, பிரிவு 354 (பெண்ணைத் தாக்குதல் அல்லது குற்றவியல் பாலியல் வன்முறை செய்தல் அல்லது அவரது அடக்கத்தை சீர்குலைத்தல்), 354-ஏ (பாலியல் துன்புறுத்தல்), 354-டி (பின்தொடர்தல்) மற்றும் 506 (குற்றம் சார்ந்த மிரட்டல்) ஆகியவற்றின்கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தையின் அடிப்படையில், இந்தப் போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் 21-ம் தேதி, பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் நெருங்கிய நண்பரான சஞ்சய் சிங் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக தேர்வானார். அதைக் கண்டித்து, ஒலிம்பிக்கில் இந்தியாவுக்குப் பதக்கம் வென்றுதந்த சாக்ஷி மாலிக், கண்ணீர் மல்க,“மல்யுத்தத்தில் இருந்தே விலகுகிறேன். பா.ஜ.க எம்.பி.யும், மல்யுத்த சம்மேளனத்தின் முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷன் சரண் சிங் எனது குடும்பத்தை குறிவைக்கிறார். அவரால் எனது குடும்பத்தினருக்கு ஆபத்து ஏற்படலாம். எங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் பொறுப்பாகும்.” எனத் தெரிவித்தார்.

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மற்றொரு மல்யுத்த வீரரான பஜ்ரங் புனியாவும், பாராலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் வீரேந்தர் சிங் யாதவும் பத்மஸ்ரீ விருதினை திருப்பியளித்தனர்.
இந்தப் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் முன்னிலையில், டெல்லி ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடந்துவந்தது. இந்த வழக்கின் விசாரணைக்குப் பிறகு நீதிபதி, பிரிஜ் பூஷனுக்கு ஜாமீன் வழங்கியும், WFI கூடுதல் செயலாளர் வினோத் தோமரை கடந்த ஆண்டு ஜூலை 20-ம் தேதி இடைநீக்கம் செய்தும் உத்தரவிட்டார்.
இதற்கிடையில், நீதிபதி ஹர்ஜீத் சிங் ஜஸ்பால் சமீபத்தில் வேறு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அதனால், இந்த வழக்கை விசாரிக்க கூடுதல் தலைமை பெருநகர நீதிபதி பிரியங்கா ராஜ்பூத் நியமிக்கப்பட்டார்.
அவரிடம் கடந்த செவ்வாய்கிழமை டெல்லி காவல்துறை பிரிஜ் பூஷன் சரண் சிங் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. அதில், “இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (WFI) முன்னாள் தலைவர் பிரிஜ் பூஷன் சரண் சிங், மல்யுத்த வீரர்களை மிரட்டியிருக்கிறார். இது தொடர்பாக வெளியே பேசக் கூடாது என்றும், அமைதியாக இருக்கும்படியும் வற்புறுத்தியிருக்கிறார்.

மேலும், ‘நீங்கள் மல்யுத்தத்தைத் தொடர விரும்பினால் அமைதியாக இருங்கள். இல்லையென்றால் உங்களின் எதிர்காலத்தை, கனவை என்னால் அழித்துவிட முடியும்’ என்றும் மிரட்டியிருக்கிறார்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் டெல்லி காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அதுல் ஸ்ரீவஸ்தவா,“டெல்லி காவல்துறையின் குற்றச்சாட்டின் அடிப்படையில், பிரிஜ் பூஷனின் கருத்துகள் அச்சுறுத்தும் விதமாகவும், மிரட்டும் விதமாக இருக்கின்றன.
எனவே, இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 506-ன் கீழ் இது குற்றமாகும். மேலும், ஒரு வீராங்கனையிடம் ‘மே தோத்தி குர்தா மே கைசா லக் ரஹா தா? (இந்த தோதி-குர்தா உடையில் நான் எப்படி இருக்கிறேன்?) எனக் கேட்டிருக்கிறார். இது ஒரு பெண்ணிடம் கேட்க வேண்டிய கேள்வியா… இந்தக் கேள்விக்கான நோக்கம் என்ன…? மேலும், WFI-ன் முன்னாள் உதவிச் செயலாளரான வினோத் தோமரின் அலுவலகத்திற்குள் பெண்கள் மட்டுமே நுழைய அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். எந்த ஓர் ஆண் மல்யுத்த வீரரும் அறையில் நுழையவிடாமல் தடுத்திருக்கிறார்கள்.

பெண்கள் நுழைந்தபோதெல்லாம், அவரின் அலுவலகத்தின் கதவுகள் மூடப்பட்டிருந்ததாக டெல்லி காவல்துறை தெரிவித்திருக்கிறது. இதன் நோக்கம் எதைக் காட்டுகிறது என்பதை நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும். ஒரு வீராங்கனையைக் கட்டியணைத்துவிட்டு, அந்த வீராங்கனையிடம், ‘ஒரு தந்தையைப் போலதான் உன்னை கட்டியணைத்தேன்’ எனத் தெரிவித்திருக்கிறார். குற்றவாளியின் மனம் எப்பொழுதும் விழிப்புடன் இருக்கும். அதற்கு இதுவும் ஓர் உதாரணம். இல்லையென்றால் இந்த விளக்கம் கொடுக்க வேண்டிய காரணம் என்ன?” என வாதிட்டார்.
இந்த வாதங்களைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் வழக்கறிஞர், “பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு சில சமூகக் கடமைகள் இருப்பதால், நாளை ஆஜராகுவதிலிருந்து விலக்கு வேண்டும்” எனக் கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. அதை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதால், ஆஜராகுவதை அவர் தவிர்த்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
