அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோவை கோனியம்மன் கோயிலை தூய்மைப்படுத்தும் பணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட அந்தக் கட்சியின் தேசிய மகளிரணி தலைவியும், எம்.எல்.ஏ-வுமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பாகுபாடு இல்லாமல் அத்தனை ஆலயங்களிலும் தூய்மை பணி நடைபெறுகிறது. ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை மக்கள் விழா போல கொண்டாட உள்ளனர்.

நாடு முழுவதும் ஆன்மிக பேரலை எழுந்துள்ளது. கோயில் விவகாரத்தில் அரசியல் பேசக்கூடாது என நினைக்கிறேன். இருப்பினும் உதயநிதிக்கு ஒரே ஒரு பதிலை கூறிக்கொள்கிறேன். முதலில் அங்கிருந்த கோயிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என உச்ச நீதிமன்றமே கூறியுள்ளது. நியாயப்படி அந்த இடத்தை உரிமையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். அதைத்தான் நீதிமன்றம் செய்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் ராமர் கோயில் அழைப்பிதழை நேரில் வாங்கவில்லை. ஆனால் அவரது மனைவி அழைப்பிதழை வாங்கி நேரில் வருவதாக உறுதியளித்துள்ளார். மனைவி அரசியல் வேறு. மகன் அரசியல் வேறு என வேறு வேறு அரசியல் வழியில் திமுக-வினர் செல்கின்றனர். ராமர் கோயிலுக்கு ஒவ்வொருவரையும் அழைக்கிறோம். கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களுக்கு வாழ்த்து சொல்வது போல ராமர் பக்தர்கள் வாழ்த்து தெரிவிக்க வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சமய அடையாளம் இல்லாத திருவள்ளுவர் வரையப்பட்டது.

பல்வேறு ஆன்மிக மடங்களில் சமய அடையாளம் உள்ள திருவள்ளுவர் படம் உள்ளது. அதனை தான் பாஜக பயன்படுத்துகிறது. திருவள்ளுவர் சமய சார்பற்றவர் என்றால், திருக்குறளில் எத்தனை இடங்களில் விஷ்ணு, லட்சுமி பற்றி வந்துள்ளது தெரியவில்லையா. திருக்குறளை அவர்கள் ஒழுங்காக படிக்கவில்லையா.
தமிழகத்தில் தாமரை மலர்ந்து 4 பேர் சட்டமன்றத்தில் இருக்கிறோம். ஒவ்வொரு கட்சியும் ஆளுங்கட்சியாக வருவதை லட்சியமாக கொண்டுள்ளன. நாங்கள் எங்கள் கட்சியை வளர்க்க வேலை செய்கிறோம். ஜல்லிக்கட்டு, மஞ்சள் விரட்டு அனைத்தும் கோயிலோடு தொடர்புடையது. அதனை சு.வெங்கடேசனால் மறுக்க முடியாது. சாமி கும்பிடாமல் காளைகளை அவிழ்த்து விடுவதில்லை. மதச்சார்பின்மை என்ற பெயரில் இந்து கலாசாரத்தை சீரழிப்பதை திமுக, கம்யூனிஸ்ட்கள் வேலையாக கொண்டுள்ளனர்.

கோயிலில் இருந்து ஜல்லிக்கட்டை பிரிக்க பார்ப்பது முட்டாள்தனம் ஜல்லிக்கட்டு சனாதன தர்மத்தின் ஒரு பகுதி. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது தேர்தல் சீர்திருத்தத்தின் அடுத்த கட்டம். அரசியலமைப்பு சட்ட அதிகாரப் படி ஆளுநர் வேலை செய்கிறார். அனைத்து மக்களும் சமமாக பாதுகாக்கப்பட வேண்டும். மக்களின் மதம், நம்பிக்கையை காப்பாற்றும் பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. அரசு அனைத்து மதங்களையும் சமமாக பார்க்க வேண்டும்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
