தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, சேலத்தில் `என் மண் – என் மக்கள்’ நடைப்பயணத்தை ஆரம்பித்தார். இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக சேலம் பனமரத்துப்பட்டி பிரிவு ரோடு பகுதியில் பா.ஜ.க-வின் நாடாளுமன்றத் தொகுதி அலுவலகத்தை திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழகத்திற்கு நேற்று பாரத பிரதமர் வருகை புரிந்தார். திருச்சியில் விமான நிலையம் திறப்பு உள்ளிட்ட பல திட்டங்களைத் திறந்துவைத்தார். அதில், பெருமைக்குரிய ஒன்றாக, அருமையான தமிழ் வார்த்தைகளில் `என் மாணவ குடும்பமே’ என்றும், `தமிழ் குடும்பமே’ என்றும் அழைத்தார். இதிலிருந்து அவர் எந்த அளவிற்கு நம் தமிழ் கலாசாரத்தின்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை அறிய முடிகிறது.
மேலும் சேலத்தில் தமிழன் தலைகுனியும் அளவிற்கு ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதனை மானமுள்ள எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ளமாட்டான். பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் மீது பொய்யான புகார் அளித்து, கைது நடவடிக்கை மேற்கொண்டிருக்கின்றனர். 26.12.2023 அன்று மாலை 4:40 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. துணைவேந்தர் ஜெகநாதனை உதவி ஆணையர் ஒருவர் பெரியார் பல்கலைக்கழக கேட்டில் வைத்து, காவல்துறை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, சுமார் 4 மணி நேரம் மாநகரை சுற்றியுள்ளார். அதன் பின்னர் இரவு 9:30 மணியளவில் சேலம் அரசு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.
அதன் பின்னர் நள்ளிரவு 12 மணிக்கு மாஜிஸ்ட்ரேட் வீட்டிற்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். அப்போதுதான் துணைவேந்தர் கையில் அரெஸ்ட் செய்வதற்கான ஆணையினை வழங்கியுள்ளனர். அதில், இளங்கோவன் என்பவர் சாதி வன்கொடுமை வழக்கு தொடர்பாக புகார் அளித்ததன் மூலம், வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர். 3 மணி வரை நடந்த விசாரனைக்குப் பின்னர் மாஜிஸ்ட்ரேட் ஜாமீன் வழங்கியிருக்கிறார். இது ஏன் நடந்தது… இதற்கு காவல்துறை தரப்பில் கொடுக்கப்படும் விளக்கம் என்னவென்றால், பெரியார் பல்கலைக்கழகம் பெயரில் கம்பெனி நடத்தி வந்ததாக கூறுகின்றனர்.

அது துணைவேந்தர் ஜெகநாதன் அவரது குடும்ப உறுப்பினர்களை வைத்து ஆரம்பித்தது போன்று பேசுகின்றனர். அது ஒரு தொண்டு நிறுவனம், இது போன்று அனைத்து பல்கலைக்கழகத்திலும் தொண்டு நிறுவனம் இருப்பது உண்டு. இதில் என்ன தவறு இவர்கள் கண்டுப்பிடித்துவிட்டனர். இதெல்லாம் பொன்முடி சொல்லிக்கொடுத்துதான் நடக்கிறது. அவர் சொன்ன நபரை பதிவாளர் பதவிக்குப் போடவில்லை என்றுதான், துணைவேந்தர் மீது இந்த பழிவாங்கும் சம்பவம் நடந்து வருகிறது.
இதில், பொய்யான புகார்களை வைத்துக்கொண்டு, பொய்யான வழக்குகள் பதிவுசெய்த காவல்துறைமீது நடவடிக்கை எடுக்கும்விதமாக, தமிழக டி.ஜி.பி சங்கர் ஜிவால் மீதும், மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி மீதும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் அனுப்பவிருக்கிறோம். அதேபோல தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் பா.ஜ.க சார்பில் புகார் அனுப்புகிறோம்.

அதேபோல ஆத்தூர் விவசாயி நில விவகாரத்தில் பா.ஜ.க மாவட்டச் செயலாளருக்கும் அமலாக்கத்துறைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது… அவருக்கு அமலாக்கத்துறை என்று ஆங்கிலத்தில் எழுதக்கூட தெரியாது. அப்படி இருக்கும் நிலையில் அமலாக்கத்துறை விவசாயிகள்மீது விசாரணை மேற்கொண்டிருப்பது எதற்காக என்பது குறித்து மத்திய அமைச்சர்களிடம் விளக்கம் கேட்டுள்ளோம். அமலாக்கத்துறை அதிகாரிகள் சமூகத்தைக் குறிப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும்” என்றார்.
நன்றி
Publisher: www.vikatan.com
