நாடாளுமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலத்திலும் அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. இதற்கிடையில், மத்திய அரசு, பீகார் மாநிலத்தின் மறைந்த முன்னாள் முதல்வரும், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் பிரச்னைகளுக்காக குரல் கொடுத்தவருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருதை அறிவித்தது. அதைத் தொடர்ந்து, INDIA கூட்டணியை விட்டு ஜே.டி.யு தலைவர் நிதிஷ் குமார் விலகுவதாக அதிகாரபூர்வமற்ற தகவல் தீயாக பரவி வருகிறது.
இந்த நிலையில், கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளை முன்னிட்டு, பீகாரில் இன்று நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில், பீகார் முதல்வரும், ஜே.டி.யு தலைவருமான நிதிஷ் குமார் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது அவர், “கர்பூரி தாக்கூர் வாரிசு அரசியலுக்கு எதிரானவர். அந்தக் கொள்கையை ஜே.டி.யு தொடர்ந்து பின்பற்றி வருகிறது” எனப் பேசினார்.

முதல்வரின் இந்த உரையைத் தொடர்ந்து, பீகாரின் பா.ஜ.க தலைமை, “ஜே.டி.யு-வுடன் கூட்டணியில் இருக்கும் ஆர்.ஜே.டி கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் இளைய மகன் தேஜஸ்வி யாதவ், பீகாரின் துணை முதல்வராக இருக்கிறார். மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ், மாநில அமைச்சரவையில் அமைச்சராகத் தொடர்கிறார். மூத்த மகள் மிசா பார்தி மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிக்கிறார். எனவே, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் லாலு பிரசாத் யாதவின் ஆர்.ஜே.டி கட்சியை விமர்சித்துப் பேசியிருக்கிறார்” என விமர்சித்திருந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com
