பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கோவை விமானநிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “திமுக பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதியின் மகன் வீட்டில் பணியாற்றி வந்த பட்டியலின சகோதரி வெளியில் வந்து பேட்டியளித்துள்ளார். ‘என்னை அடிமைப்படுத்தினர். சிகரெட்டால் சூடு வைத்தார்கள்.

ரூ.15,000 சம்பளம் தருவதாக சொல்லி ரூ.5,000 மட்டுமே கொடுத்தனர்.’ என்றெல்லாம் சொல்லியுள்ளார். சமூகநீதி பேசும் திமுக எம்எல்ஏ மகன் வீட்டிலேயே இப்படி நடந்துள்ளது. அவர் வெளிப்படையாக சொல்லியும் வழக்குப்பதியாமல் இருக்கின்றனர்.
பிரதமர் மோடி ஏற்கெனவே கடந்த 2-ம் தேதி மோடி திருச்சி வந்தார். ஒரே மாதத்தில் 2வது முறையாக தமிழ்நாடு வருகிறார். சென்னையில் கேலோ இந்தியா தொடக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, பிறகு ஶ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசாமி கோயில்களுக்கு செல்கிறார். அயோத்தி செல்வதற்கு முன்பு பிரதமர் தமிழ்நாடு வருவதில் மகிழ்ச்சி.

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பள்ளிக்கு விடுமுறை கொடுத்து சிறப்பாக கொண்டாடுகின்றனர். ராமருக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகப்பெரிய கனெக்ட் உள்ளது. இங்கு விடுமுறை இல்லாவிடினும் மக்கள் கொண்டாட வேண்டும்.
இதைப்பற்றி கருத்து சொல்ல உதயநிதிக்கு தகுதி இல்லை. அமைச்சர் சேகர் பாபு முதலமைச்சருக்கு ராமாயணத்தை பரிசாக கொடுத்தார். படிப்பது ராமாயணம். இடிப்பது பெருமாள் கோயில் என்று சொல்வது போல திமுக கார்ரகள் ராமாயணம் படித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததில் இருந்து பல கோயில்களை இடித்துவிட்டனர். மக்கள் கொந்தளிப்பால் கோயில்களை இடிப்பதை நிறுத்தி வைத்துள்ளனர்.

இடிப்பது பற்றி எல்லாம் பேச உதயநிதிக்கும், திமுகவுக்கும் தகுதி இல்லை. நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வந்து எல்லாம் ராமர் கோயிலை கட்டவில்லை. உச்ச நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் இஸ்லாமிய நீதிபதி அடங்கிய அமர்வு வழங்கிய வழிகாட்டுதலின்படி தான் கோயில் கட்டப்பட்டது.
உதயநிதி ஸ்டாலின் வரலாற்றை அப்டேட் செய்துகொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்று கண்ணாடி முன்பு நின்று பார்க்க வேண்டும். வாய் இருக்கிறது என்பதற்காக பேசினால் என்ன சொல்வது. தமிழ்நாடு ஆளுநர் ரங்கநாத சாமி கோயிலை சுத்தம் செய்து எல்லோரும் பொதுசேவை செய்யவேண்டும் என்பதற்கு முன் உதாரணமாக உள்ளார். இவர்கள் கருத்தை ஆளுநர் கேட்கவில்லை என்றால் அவரை குற்றவாளியாக பார்க்கிறார்கள். மாநில அரசு சொல்வதை எல்லாம் கேட்டு கையெழுத்து போட ரப்பர் ஸ்டாம்ப் ஆளுநர் இல்லை.

உச்ச நீதிமன்றமும் முதலமைச்சர், ஆளுநர் இருவரும் கலந்து பேசி, இருவரும் அரசியலமைப்பு சட்டப்படி செயல்படவேண்டும் என்று தான் சொல்லியுள்ளது. முதலமைச்சர் புதிது புதிதாக கிளப்பிவிடாமல் கண்ணாடி முன்பு நின்று தங்களது ஆட்சி குறித்து சுயபரிசோதனை செய்யவேண்டும். தினமும் காலை முதல் மாலை வரை ஆளுநரை வம்புக்கு இழுப்பது அழகல்ல.
நாங்கள் வெளியிட்ட டேப் குறித்து ஆ.ராசா, டி.ஆர். பாலு பதில் சொல்லட்டும். விரைவில் 9 டேப்கள் மக்களிடம் வெளியிட உள்ளோம். இதற்கு பதில் சொல்லாமல், இன்னொரு கட்சியின் டேப்பை வெளியிட சொன்னால் திமுக தங்களை ஊழல் கட்சி என்று ஒப்புக்கொள்ளட்டும். அண்ணாமலைக்கு முதல்வர் கனவு இல்லை. அவர்கள் கட்சியை போல ஒரு தலைவரை தூக்கிப்பிடிக்க மாட்டோம்.

அண்ணாமலை வேலை கட்சியை வளர்ப்பதும், நிறைய தலைவர்களை உருவாக்குவதும் தான். பதவி ஆசையில் உள்ள எந்தக் கட்சிக்கும் பாஜக குறித்து விமர்சிக்க அருகதை இல்லை. எங்கள் கட்சியில் என்னைவிட முதலமைச்சர் நாற்காலிக்கு தகுதியான தலைவர்கள் ஏராளமாக உள்ளனர்.
இதைபோல வேறு ஏதாவது கட்சியை சொல்ல சொல்லுங்கள். எங்கள் கட்சியில் நிறைய தலைவர்கள் உள்ளனர். மற்ற கட்சியை போல குறிப்பிட்ட தலைவருக்காக பணியாற்ற வேண்டிய நிர்பந்தம் பாஜகவுக்கு இல்லை. ஒரு கோடி தொண்டர்கள் இருப்பதாக சொல்கிறீர்கள். முதலமைச்சர் வேட்பாளர் குறிப்பிட்ட ஒருவர் மட்டும் தானா. திமுகவை பொறுத்தவரை ஒரு குடும்பத்தில் பிறந்தவர் தான் தலைவர்.

எங்கள் கட்சியில் அப்படியல்ல. 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பிரதமராக மோடி தான் வரவுள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். கட்சியை பலப்படுத்தி வளர்ப்பது தான் எங்கள் வேலை. கூட்டணி குறித்து மேலிடத்தில் முடிவு செய்வார்கள்.” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
