சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தனர். பின்னர் அவருக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 -ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை, மற்றும் ஆவணங்களை அமலாக்கத்தையினர் டிரங்கு பெட்டியில் தாக்கல் செய்தனர்.
புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் இன்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பாக, காணொலி காட்சி மூலமாக ஆஜர்படுத்தபட்டார் செந்தில் பாலாஜி. இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜனவரி 11-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் நீதிபதி. இதன் மூலம் 14வது முறையாக அவரது காவல் நீட்டிக்கபட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கெனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் தள்ளுபடி செய்தன.
அதேநேரம் செந்தில்பாலாஜியின் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு கீழமை நீதிமன்றமான சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம் என்றும், அந்த மனு மீது தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கலாம் எனவும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.
இதனை எதிர்த்து அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என கூறி அவருக்கு ஜாமீன் தர மறுப்பு தெரிவித்து விட்டது. மேலும், மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.

இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. அதில், “இந்த வழக்கில் சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையும் வழக்கில் கைப்பற்றியுள்ள ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
இந்த சூழலில் சாட்சிகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ கலைக்க எந்த வாய்ப்பும் கிடையாது. நானோ அல்லது எனது குடும்பத்தினரோ சாட்சிகளை மிரட்டியதாகவோ அல்லது அவர்களுக்கு நிர்பந்தம் கொடுத்ததாகவோ இதுவரையிலும் எந்த புகாரும் இல்லை. கூடுதல் விசாரணை தேவை என அமலாக்கத்துறையும் கோரவில்லை.
நான் ஒரு அப்பாவி. சட்டத்தை மதித்து நடப்பவன். ஜாமீன் வழங்கினால் நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்று நடப்பேன். சாட்சிகளை கலைக்க மாட்டேன். எனவே ஜாமீன் வழங்க வேண்டும்” என கோரப்பட்டிருந்தது.
இதுதொடர்பாக பதிலளிக்க அவகாசமளிக்க வேண்டுமென அமலாக்கத்துறை தரப்பில் கோரப்பட்டது. அதையடுத்து இந்த மனுவுக்கு அமலாக்கத்துறை தரப்பில் வரும் ஜன.8-க்குள் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
