சென்னை அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு, இன்று காலை மாலை அணிவித்து, இளைஞரணி மாநாட்டுக்கான சுடர் தொடர் ஓட்டத்தை அமைச்சர் உதயநிதி தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “டிசம்பரில் நடக்க வேண்டிய இளைஞரணி மாநாடு, சென்னை வெள்ளம், தூத்துக்குடி வெள்ளம் என இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு ஜனவரி 21-ம் தேதி நடக்கவிருக்கிறது. மூன்றிலிருந்து நான்கு லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். `மாநில உரிமைகள் மீட்பு மாநாடு’ என்ற தலைப்பில்தான் மாநாடு நடக்கிறது.

என்னென்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்போகிறோம் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கு மிகப்பெரிய முன்னெடுப்பாக, இந்த ஒன்பது ஆண்டுகளில் (2014 முதல் பா.ஜ.க ஆட்சி), கடந்த அதிமுக ஆட்சியில் இழந்த உரிமைகளை மீட்டெடுக்க இளைஞர்களை தயார்ப்படுத்தும் விதமாக இந்த மாநாடு இருக்கும்” என்று கூறினார். அதைத்தொடர்ந்து ராமர் கோயில் தொடர்பாகக் கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர் ஒருவர், `ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்பது அவரவர் விருப்பம். அதை அரசியலாகப் பார்க்கக்கூடாது’ என அ.தி.மு.க கூறியிருப்பது பற்றிக் கேட்டார்.

அதற்குப் பதிலளித்த உதயநிதி, “அது அவர்களுடைய விருப்பம். கரசேவைகளுக்கு ஆள்களை அவர்கள் அனுப்பினார்கள். நாங்கள் எந்த மதத்துக்கும், நம்பிக்கைக்கும் எதிரானவர்கள் கிடையாது எனக் கலைஞர் ஏற்கெனவே கூறியிருக்கிறார். அங்கு கோயில் வருவது எங்களுக்குப் பிரச்னை கிடையாது. ஆனால், அங்கு இருக்கக்கூடிய மசூதியை இடித்துவிட்டு கோயிலைக் காட்டியதால், எங்களுக்கு அதில் உடன்பாடு கிடையாது. ஆன்மிகத்தையும், அரசியலையும் ஒன்றாக்காதீர்கள்” என்று கூற, `கால்வலி இருப்பதால் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்கபதைப் பற்றி யோசிக்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்து பத்திரிகையாளர் கேட்க, “அவர் தவழ்ந்து தவழ்ந்து போகிறதால், அவருக்கு அடிக்கடி கால் வலி வருகிறது” என்று உதயநிதி கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
