2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் அளித்த முக்கியத் தீர்ப்புகள் சில தனி மனிதர்கள், அரசியல் தலைவர்களின் வாழ்க்கையை மட்டுமன்றி, நாட்டின் வரலாற்றையேகூட மாற்றுவதாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. நிகழாண்டில் வழங்கப்பட்ட அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்புகளின் தொகுப்பை இங்கே பார்க்கலாம்!
2023-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் வழங்கிய முக்கியத் தீர்ப்புகள்:-

ஜன., 2 – 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், மத்திய அரசு மேற்கொண்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை தவறானது என தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு மனுக்களைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம், “மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை முடிவு சரியானதுதான்” எனத் தெரிவித்து, 2023-ம் ஆண்டின் முதல் வேலை நாளில் தீர்ப்பளித்தது.
5 பேர் கொண்ட அமர்வில், நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், பி.ஆர். கவாய், ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோர் அரசாங்கத்தின் நடவடிக்கையை ஆதரித்த நிலையில், நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் அரசின் நடவடிக்கை சரியானதல்ல என மாறுபட்ட தீர்ப்பைத் தெரிவித்திருந்தார்.

பிப்., 23, ஜூலை 11, 2022-ல் நடைபெற்ற அ.தி.மு.க-வின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் செல்லும் என்றும், அதில் அ.தி.மு.க-வின் இடைக்காலப் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமித்ததும், ஓ.பன்னீர்செல்வத்தைக் கட்சியிலிருந்து நீக்கியதும் செல்லும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு அ.தி.மு.க-வில் நிலவி வந்த குழப்பத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com
