அதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக அவரது தோழி வி.கே சசிகலா, மற்றும் துணை பொதுச் செயலாளராக டி.டி.வி.தினகரன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதன் பிறகு நடைபெற்ற அதிமுகவின் பொதுக்குழுவில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை பதவிகளில் இருந்து நீக்கம் செய்தும், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியும் கடந்த 2017-ம் ஆண்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கட்சியில் இருந்தும், இடைக்கால பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கியது தொடர்பான தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி, சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து வி.கே.சசிகலா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த மாதம் தொடர்ச்சியாக நடந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், “கடந்த 2017-ல் நடந்த அதிமுக பொதுக்குழு கட்சி விதிகளின்படி கூட்டப்படவில்லை. அந்த கூட்டத்தில் பொதுச் செயலாளராக பதவி வகித்த சசிகலாவை நீக்கிவிட்டு ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டதும் தன்னிச்சையான முடிவு. சசிகலா தற்போது வரை அதிமுகவின் உறுப்பினர்தான்” என வாதிட்டார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.ஆர்.ராஜகோபால் மற்றும் அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆகியோர், “கடந்தாண்டு ஜூலை 11-ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச் செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை உச்ச நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் ஏற்கெனவே அங்கீகரித்துள்ளன. உச்சபட்ச அதிகாரம் கொண்ட பொதுக்குழுக் கூட்டத்தில்தான் சசிகலாவை நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல” என வாதிட்டனர்.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில், நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் வி.கே.சசிகலாவை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லுமா, செல்லாதா என்பது குறித்து நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். சசிகலாவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த, உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சசிகலா தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த தீர்ப்பு எதிர்மறையாகவே வந்துள்ளது.

இந்த தீர்ப்பின் காரணமாக, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்வது மட்டுமே சசிகலா முன் இருக்கும் சட்ட ரீதியான வாய்ப்பாக உள்ளது. அதே நேரம், உச்ச நீதிமன்றத்திலேயே பொதுக்குழு செல்லும் என அறிவிக்கப்பட்டதால், அங்கும் எதிர்மறையான தீர்ப்பே கிடைக்கும் என்ற கருத்து மூத்த வழக்கறிஞர்களிடையே உள்ளது.
இது தொடர்பாக சசிகலா தரப்பு வழக்கறிஞர்களிடம் பேசினோம், “உச்ச நீதிமன்றம் பொதுக்குழு செல்லும் என்று கூறி விட்டதன் காரணமாகவே, எதிர்மறையான தீர்ப்பு கிடைக்கும் என்று அர்த்தமில்லை. எங்கள் தரப்பில் வலுவான வாதங்கள் உள்ளது. அவற்றை உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம். அங்கு எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம்” என்றனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
