தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சென்று மத்திய பா.ஜ.க அரசின் 9 ஆண்டுக்கால சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் நோக்கில் ‘என் மண், என் மக்கள்’ என்ற பெயரில் ராமேஸ்வரத்திலிருந்து நடைப்பயணத்தை ஜூலை 28-ல் தொடங்கினார் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடங்கி சிவகங்கை, மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாக்குமரி ஆகிய மாவட்டங்களில் நடைபயணம் மேற்கொண்டு, முதற்கட்ட பயணத்தை ஆகஸ்ட் 22-ம் தேதி நிறைவு செய்திருக்கிறார். முதற்கட்ட நடைபயணத்தில் சிக்சர் அடித்திருக்கிறாரா… சறுக்கியிருக்கிறாரா…என்ற கேள்வி எழுந்துள்ளதை தொடர்ந்து விசாரணையில் இறங்கினோம்.

நம்மிடம் பேசிய உள் விவரமறிந்த சிலர், “அண்ணாமலையின் நடைபயணத்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வந்தது. கட்சியை முன்னிறுத்தி கொள்கைகளை பேசாமல் தன்னை முன்னிறுத்தி பேசுவதில் அதிக கவனம் செலுத்துகிறார் அண்ணாமலை. மேலும் நடைபயணம் என்றுவிட்டு பெயருக்கு கொஞ்ச தூரம் நடந்துவிட்டு பேருந்தில் ஏறிக் கொள்கிறார் என்ற விமர்சனமும் தொடர்ச்சியாகவுள்ளது.
குறிப்பாக 20 நாள்களில் 6 மாவட்டங்கள் மற்றும் 35 தொகுதிகளை கவர் செய்திருக்கிறாராம். இப்படி மின்னல் வேகத்தில் பயணம் செய்தால் அந்த பயணத்தினால் என்ன பயன் என்றே கேள்வியே எழுகிறது. மக்களை சந்திக்க வேண்டும் கட்சியை வளர்க்க வேண்டும் என்ற நோக்குடன் தொடங்கப்பட்ட நடைபயணம் இலக்கை அடைகிறது என்றால் கேள்விக்குறிதான். முதல் பந்தில், அதாவது நடைப்பயணம் என்ற அறிவிப்பு, அமித் ஷா வருகை என சிக்சர் அடித்திருந்தாலும் அடுத்த பந்தில் தடுமாறுகிறார் அண்ணாமலை” என்கிறார்கள்.

நம்மிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் இனியன் ராபர்ட், “தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலையின் நடைபயணம் பெரும் தோல்வியை தழுவியுள்ளதென பா.ஜ.க பிரமுகர்களை பேசிக் கொள்வதாகத்தான் தகவல் வருகிறது. கட்சிக்குள்ளேயே அவரின் நடைபயணத்துக்கு வரவேற்பு இல்லாதபோது மக்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறதா என்ற கேள்விக்கே அவசியமில்லை. பணத்தை கொடுத்து மக்களை திரட்டி வருகிறார்கள். தென்மாவட்டங்களில் நாம் அழைத்தால் யாரும் வரமாட்டார்கள் எனக் கொங்கு பகுதி மக்களை பேருந்தில் அழைத்து செல்வதாகத்தான் தெரிகிறது.
நடைபயணத்தின் ஒரு பகுதியை முடித்திருக்கிறாரே அண்ணாமலை… எதாவது அரசியல் தாக்கம் நிகழ்ந்துவிட்டதா என்றால் ஒன்றுமில்லை. மேலும் அவர் பயணம் மேற்கொண்டாலும் அவரால் எந்த மாற்றத்தை நிகழ்த்த முடியாது. தமிழ்நாட்டு மக்கள் சனாதனத்தை கொள்கையாக கொண்ட கட்சியை ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். பா.ஜ.க மட்டுமல்ல பா.ஜ.க.-வை தங்கள் கூட்டணியில் வைத்திருக்கும் எந்த கட்சியும் தமிழ்நாட்டில் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது. பா.ஜ.க-வினரும் அண்ணாமலையும் பேசப் பேச எதிரணியினருக்கு மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். நாற்பது தொகுதியிலும் திமுக கூட்டணியே வெல்லும்” என்றார்

அண்ணாமலை நடைபயணத்தில் பங்கேற்ற பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் சந்தனகுமாரிடம் பேசினோம், “அண்ணாமலையின் முதற்கட்ட நடைபயணம் தமிழ்நாடு பா.ஜ.க-வுக்கு பெரும் எழுச்சியை கொடுத்திருக்கிறது. முதல்நாளில் இருந்தே அடித்து ஆட தொடங்கிவிட்டார் அண்ணாமலை. செல்லுமிடமெல்லாம் நல்ல வரவேற்பு கிடைக்கிறது. பா.ஜ.க-வின் சாதனைகளையும் தி.மு.க-வின் மக்கள் விரோத போக்கினையும் வெளிச்சம் போட்டு காட்டிவருகிறார். மக்கள் திரள் கூட்டமே நடைபயணத்தின் வெற்றிக்கு சாட்சி. அண்ணாமலையின் நடைபயணத்தால் தி.மு.க-வினர் அச்சத்தில் இருக்கிறார்கள்.
இராமநாதபுரத்தில் பா.ஜ.க கூட்டம் போட்டதால்தான் ஸ்டாலினும் இராமநாதபுரத்துக்கு வந்து பேசுகிறார். எங்கே நமது ஊழல் பட்டியலை வெளியிட்டுவிடுவாரோ என தி.மு.க-வினர் அனைவருமே பதற்றத்தில் இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியின் அவலத்தை அணுதினமும் அண்ணாமலை வெளிக் கொண்டுவருவதால்தான் வெற்றியடைந்து வரும் நடைபயணத்தை தோற்றுவிட்டதாக வதந்திகளை பரப்புகிறார்கள்.
தென் மாவட்டங்களான இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அண்ணாமலையின் நடைபயணம் நாடாளுமன்ற தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும். பா.ஜ.க தரப்பில் பூத் கமிட்டிகளை முறையாக அமைத்து செயல்பட்டால் எங்கள் வெற்றியை யாரும் தடுக்க முடியாது” என்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
