கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திராவில் தமிழ்நாடு சங் பரிவார் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி, நேற்று மாலை நிறைவடைந்தது. இதில் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க, விஸ்வ ஹிந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளின் மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டனர். பின்னர், நாகர்கோவிலிலுள்ள மாவட்டக் கட்சி அலுவலகத்தில் வைத்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “பா.ஜ.க-வுக்கு இன்று அற்புதமான நாள். 4 மாநிலத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க வரலாறு படைத்திருக்கிறது. மூன்று மாநிலங்களில் மக்கள்மீதுள்ள அபிமானத்தில் வெற்றிபெற்றுள்ளோம். மத்தியப் பிரதேசத்தி 166 எம்.எல்.ஏ-க்களுடன் வெற்றி பெற்றுள்ளோம். அங்கு, 2003-ல் இருந்தே ஆட்சி செய்துவருகிறோம். இடையில் 15 மாதங்கள் காங்கிரஸ் ஆட்சி இருந்தது. சத்தீஸ்கரில் கடந்தமுறை 15 எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றார்கள். இன்று 56 எம்.எல்.ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். ராஜஸ்தானில் 115 எம்.எல் ஏ-க்களுடன் ஆட்சி அமைக்கிறோம். தெலங்கானாவில் 8 எம்.எல்.ஏ-க்கள் வெற்றிபெற்றுள்ளோம். இது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம்தான். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்டதற்குப் பிறகு நடந்த தேர்தல் இது. தேர்தலின்போது, ஒ.பி.சி சமூகத்துக்கு முன்னுரிமை இல்லை, இலவச திட்டங்கள் என்பது போன்ற பிரசாரங்களை எதிர்க்கட்சிகள் முன்வைத்தன. ஆனால் அதை எல்லாம் தாண்டி மோடி கேரன்ட்டி கொடுத்தார். இந்த மாநிலங்களில் முதல்வர் வேட்பாளரை முன்னிலைப்படுத்தாமல், கட்சியை முன்னிலைப்படுத்தி மோடி கேரன்ட்டி வாக்குறுதி அளித்ததன் மூலம், வெற்றிபெற்றுள்ளோம்.

தெலங்கானாவில் கம்மாரெட்டி தொகுதியில் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் முதல்வர் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளோம். எனவே, 2024-ல் 400 எம்.பி-க்களைத் தாண்டி வெற்றி பெறுவது உறுதி. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்ககில் எஸ்.சி, எஸ்.டி மக்கள் எந்தபக்கம் இருக்கிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டி உள்ளது. தெலங்கானாவில் பா.ஜ.க 8 இடங்களில் வென்றாலும் காங்கிரஸ், பி.ஆர்.எஸ் கட்சிகளில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை தீர்மானித்தன. இது கட்சிக்கு இரண்டாம் கட்ட வளச்சியாகும். எனவே, 2028 தேர்தலில் தெலங்கானாவில் பா.ஜ.க ஆட்சி அமைக்கும். சனாதனம் குறித்த பிரசாரம் வட மாநிலத்தில் எடுபட்டதாகச் சொல்கிறார்கள். ஆட்சி போனாலும் பரவாயில்லை… சனாதன தர்மத்தை ஒழிப்பதுதான் முக்கியம் என உதயநிதி கூறினார். மோடி கேரண்ட்டியும், சனாதன பிரசாரமும் வடமாநிலத் தேர்தலில் பா.ஜ.க-வுக்கு வெற்றியைக் கொடுத்துள்ளன.
நன்றி
Publisher: www.vikatan.com
