"அதிகாரிகள்மீதான தாக்குதலே, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன்

கரூர் மாவட்டம், நன்னியூர் புதூரை அடுத்த என்.குளத்தூரில் கனகராஜ் என்ற இளைஞர் வெளிநாட்டில் வேலை பார்த்தபோது, உயிரிழந்தார். அவரின் உடல் பா.ஜ.க சார்பில் கடந்த செப்டம்பர் 10-ம் தேதி கரூருக்குக் கொண்டுவரப்பட்டு, எரியூட்டப்பட்டது. அப்படி, உயிரிழந்த கனகராஜின் வீட்டுக்கு வந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அவரின் தாய், சகோதரி ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பிறகு, வசூலிக்கப்பட்ட நிதியில் மீதமிருந்த தொகையான ரூபாய் ஐந்து லட்சத்துக்கான காசோலையை அவர்களிடம் வழங்கினார். அதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பெரம்பலூரில் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள்மீதான தாக்குதலுக்குக் காரணமானவர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், பா.ஜ.க சார்பில் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடைபெறும். பா.ஜ.க-வினரை வன்முறையை நோக்கி தி.மு.க-வினர் தள்ள வேண்டாம். தமிழக அரசு, பல்கலைக்கழகங்களில் தலைவர் பதவியில் ஆளுநரின் அதிகாரத்தை நீக்கிவிட்டு, முதல்வரை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறது. இது, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. டி.என்.பி.எஸ்.சி தலைவராக 61 வயதான சைலேந்திர பாபுவை நியமிக்க வேண்டும் என்று தி.மு.க கூறுகிறது. வயது முதிர்வு காரணமாக, ஆளுநர் அந்த நியமனத்துக்கு மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

அண்ணாமலை

செந்தில் பாலாஜி ஜாமீன் விவகாரத்தில், அரசியல் காழ்புணர்ச்சி இல்லை. அவர் இன்னும் அமைச்சராக நீடிப்பதால், சாட்சிகளைக் கலைக்க வாய்ப்பிருக்கிறது. அவரின் சகோதரர் அசோக்குமார் தலைமறைவாக இருக்கிறார். மேலும், வருமான வரி சோதனையின்போது, அதிகாரிகளை தி.மு.க-வினர் தாக்கியிருக்கின்றனர். அதனால்தான் அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று நீதிபதியின் உத்தரவிலேயே குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஜாமீன் கேட்டு தற்போது உச்ச நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம். காவிரி நதிநீர்ப் பிரச்னையில் தமிழக முதல்வர் ஒரு அறிக்கைகூட வெளியிடவில்லை. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகியான ராகுல் காந்தி முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தலாம். ஆனால், அவர் மறுக்கிறார். பா.ஜ.க-வுக்கு நல்ல எழுச்சி இருக்கிறது. அதன் வெற்றி வரும் 2024 தேர்தலில் தெரியும். எடப்பாடியை மட்டும் என்று இல்லை. ஒவ்வொரு கட்சிக்காரர்களும் பிரதமராக வர வேண்டும் என தங்கள் தலைவர்களை நினைத்து ஆசைப்படலாம். ஆனால், மோடியுடன் ஒப்பிட்டு யாரைப் பற்றி பேசினாலும், எனக்கு சிரிப்புதான் வருகிறது” என்றார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *