திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “கே.பி முனுசாமி வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார். அவருடைய அரசியல் பக்குவத்திற்கும், அவர் கட்சியில் வகிக்கக்கூடிய பொறுப்புக்கும், வார்த்தைக்கும் சம்பந்தம் இல்லை. கே.பி.முனுசாமிக்கு அண்ணாமலை மீதுதான் வன்மம். அதுவும் அவருடைய தொகுதிக்கு சென்று வந்த பின்பு, வன்மம் அதிகமாகிவிட்டது. அ.தி.மு.க-விற்கு ஒரே ஒரு எம்.ஜி.ஆர் இருந்ததுபோல், காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு காமராஜர் இருந்ததுபோல், பா.ஜ.க-விற்கு ஒரே ஒரு மோடிதான். அண்ணாமலையைப்போல் ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால், மோடியைப்போல் இன்னொருவரை உருவாக்க முடியாது. அதை கே.பி.முனுசாமி புரிந்து கொண்டு பேச வேண்டும். என்னை விமர்சனம் செய்பவர்களுக்கு என்மீது வன்மம்தான் அதிகம் உள்ளது.

தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க என இரண்டே கட்சிகள்தான் இருக்க வேண்டும் என்பது அவர்களின் விருப்பம். நாங்கள், அவர்கள் இருவருமே தோல்வி அடைந்தவர்கள் என்பதை கூறி வருகிறோம். தி.மு.க, அ.தி.மு.க-விற்கு இடையே யார் பெரியவர்கள் என்கிற பங்காளி சண்டை நடந்து கொண்டிருக்கிறது. பா.ஜ.க மீது கோபம் இருக்கிறது என்பதைவிட, அண்ணாமலை மீது தனிப்பட்ட வன்மம் இருக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி எங்களுடையது. அந்த கூட்டணியை உருவாக்கியது நாங்கள்தான். இந்த கூட்டணியில் மோடியை பிரதமராக ஏற்றுக்கொண்டவர்கள் யார் வேண்டுமானாலும் வரலாம். தி.மு.க இளைஞரணி மாநாட்டில் தங்கை கொடியேற்ற, அண்ணன் மகிழ, அண்ணன் மகன் துதிபாட… மட்டன் பிரியாணியுடன் இனிதாக நடந்து முடிந்துள்ளது. அந்த மாநாடு நமத்துபோன மிக்ஸர்தான்.

தி.மு.க இளைஞரணி மாநாட்டில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 1980-களில் கல்வியை பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றது யார்… அதன் பின்பு பலமுறை தி.மு.க, காங்கிரஸோடு கூட்டணி வைத்துள்ளது. பல்கலைக்கழகத்தின் வேந்தராக முதலமைச்சர் இருக்கக் கூடாது என 1996-ல் அன்பழகன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். இளைஞர் அணி மாநாட்டில் நடந்த ஒரே ஒரு நல்ல விஷயம், நீட்டிற்கு எதிராக தி.மு.க-வினர் வாங்கிய கையெழுத்து அட்டைகள் அங்குள்ள குப்பைகளில் நிரம்பி இருந்தது. தி.மு.க தொண்டருடைய குழந்தை நீட் மூலமாகத்தான் அரசு மருத்துவராக முடியும் என்பதை தி.மு.க தொண்டர்கள் உணர்ந்துள்ளார்கள்.

அந்த மாநாட்டிற்கு `மாநில உரிமை மீட்பு மாநாடு’ என பெயர் வைத்துள்ளார்கள். மாநிலத்தை தி.மு.க-விடமிருந்து மீட்பதுதான் பா.ஜ.க-வின் கொள்கையாக உள்ளது. சமூகநீதியை பற்றி பேசுவதற்கு ஒரு கட்சிக்கு லாயக்கு இல்லை என்றால், அது தி.மு.க-விற்குத்தான். இந்தியாவைப் பொறுத்தவரை மக்கள் தயாராகி விட்டார்கள். இனி, ஒற்றைக் கட்சி பா.ஜ.க தான் ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டார்கள். உதயநிதி ஸ்டாலின் கூறுவதுபோல் கூட்டணி கட்சி ஆட்சி அமைந்தால், ஊழல் ஊற்றெடுக்கும். 2024-ம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க வெற்றி பெறப்போகிறது என்கிற அச்சத்தின் காரணமாக, முதலமைச்சர் ஸ்டாலின் 2014, 2019 தேர்தல்கள் குறித்து பேசி உள்ளார். 2014-ம் ஆண்டு தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY
நன்றி
Publisher: www.vikatan.com
