ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 5 -ம் தேதி, வ.உ.சிதம்பரனார், வெள்ளையத் தேவன் ஆகிய விடுதலைப் போராளிகளின் நினைவு நாள் அனுசரிக்கப்படுகிறது. அதே நாளில் தான் விருப்பாச்சி பாளையக்காரர் கோபால் நாயக்கரின் நினைவு நாளும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலேயர்களை எதிர்க்க திண்டுக்கலில் இருந்து ஒரு கூட்டமைப்பு திரட்டி , ராணி வேலுநாச்சியார்க்கும், ஊமைத்துரைக்கும் போராட்ட காலத்தில் உதவி, ஆங்கிலேயர்களை நாட்டை விட்டே விரட்ட வேண்டும் என தீவிரமாக செயல்ப்பட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கர் யார்?
விடுதலை விடுதலை விடுதலை’ என்று போர் முரசொலித்து அந்நிய தலையிலிருந்து விடுபட்டு, ‘யாவரும் இந்நாட்டு மன்னர்களாக்க’ தன் இன்னுயிரையும் தரத் துணிந்தவர்கள் நம் மண்ணின் சுதந்திர போராட்ட வீரர்கள். பரங்கியரின் கைகளில் அகப்பட்டு, சிக்குண்ட கிடந்த நம் இனத்தை மீட்டெடுக்க புயலென புறப்பட்டவர்கள் அவர்கள்.
அவர்களுள், வெள்ளையனுக்கு சவால் விடும் அதிகாரத்தின் மையமாகவும், வெடி மருந்து தயாரித்து மற்ற அரசர்களுக்கும், பாளையங்களுக்கும் அனுப்பி ஆங்கிலேயரை அலற விட்ட இடமாகவும், இந்தியாவின் சிப்பாய் கலகம், வேலூர் சிப்பாய் கலகங்களுக்கு முன்பே விடுதலை முழக்கமிட்ட இடமாகவும் அறியப்படும் பகுதி தான் திண்டுக்கல் கூட்டமைப்பின் தலைமையிடம் “விருப்பாச்சி”. திண்டுக்கல் சீமையின் வீரமிக்க அவ்விருப்பாச்சி பாளையத்தின் பாளையக்காரர் விருப்பாச்சி கோபால் நாயக்கர்.

1371-ஆம் ஆண்டில் விஜயநகரப் பேரரசன் குமாரகம்பணன் மதுரையைக் கைப்பற்றி, விஜயநகரப் பேரரசின் ஒரு பகுதியாக மதுரையை சேர்த்துக் கொண்டான். மதுரையை சேர்த்துக் கொண்ட அவன் நிர்வாக வசதிக்காக தன் படைவீரர்களை மதுரையில் விட்டுச் சென்றான். அப்படை வீரர்கள் பல இடங்களுக்குச் சென்று, ஊர்களை உருவாக்கினர்.
அப்படி வந்த ஒரு படைப் பிரிவின் படைத்தளபதி சின்னப்ப நாயக்கன் என்பவர் (1381-1425) தன் குலதெய்வமான “விருப்பாஷர்” (இன்றளவும் விருப்பாச்சி தலையூற்று அருவி அருகே, அடர்ந்த வனப்பகுதியில் விருப்பாச்சி ஈஸ்வரர் என்ற பெயரில் சுயம்பு சிவன் திருக்கோவில் இருக்கிறது) பெயரில் விருப்பாட்சி என்ற ஊரை ஏற்படுத்தினார். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களைக் கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார். பின்னர் இவை மதுரை விஸ்வநாத நாயக்கர் (1529-1564) ஆட்சிக்கு வந்த போது பல சிற்றரசுகள், ஜமீன்களாக மாற்றப்பட்டது.
அப்படி மாற்றப்பட்ட ஜமீன்களில் ஒன்று விருப்பாட்சி. விருப்பாட்சி ஜமீனின் 19-ஆம் பாளையக்காரரான மாவீரர் கோபால் நாயக்கருக்குப் பெற்றோர் வைத்த பெயர், “திருமலை குப்பள சின்னப்ப நாயக்கர்” என்பதாகும். விருப்பாட்சி மண்ணின் மைந்தராகிய கோபால் நாயக்கர், பத்தொன்பதாவது பாளையக்காரராக பதவியேற்று தன்னைப் போல் தன் சீமை மக்களையும் தன்மானம் மிகுந்த வீரர்களாக மாற்றினார் என்கிறது வரலாறு.
வெள்ளையர்களை தூங்கவிடாமல் செய்த வீரமிக்க பாசறை விருப்பாச்சி:
25.06.1772 அன்று காளையார் கோவிலில் நடந்த கலவரத்தில் சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் ஆங்கிலேயர்களால் சுட்டுக் கொல்லப்படவே, தன் கணவனையும் நாட்டையும் இழந்தும், ஆங்கிலேயருக்கு எதிராய் புரட்சிகர முன்னெடுப்புகளை செய்த பெண்ணரசி வேலு நாச்சியார், அவரின் மகள் வெள்ளச்சி, அமைச்சர் தாண்டவராயன் பிள்ளை மற்றும் தளபதிகள் மருது சகோதரர்களுக்கும் உள்ளிட்டோருக்கு 8 ஆண்டுகள் தந்தையாய், சகோதரனாய் விருப்பாச்சி மண்ணில் அடைக்கலம் தந்து, தன் அரண்மனையில் தங்க வைத்து போர் பயிற்சி, சண்டை பயிற்சிகளை கற்றுத் தந்தவர், விருப்பாச்சி கோபால நாயக்கர்.

“தோள்கள் தினவெடுத்த ஆங்கிலேயர்களின் உடல்கிழித்து, அவ்உதிரத்தை இம்மண்ணிற்கு காணிக்கையாக்க” வேலுநாச்சியாருக்கும் அவரது படைத்தளபதிகளான மருது சகோதரர்களுக்கும் திண்டுக்கல்லில் அடைக்கலம் தந்ததோடு மட்டுமல்லாமல், ஹைதர் அலியுடன் இணைந்து பெரும்படையையும் திரட்டி தந்தார் கோபால நாயக்கர். மேலும், சிவகங்கை சீமையை நோக்கி போர் தொடுத்து, வென்று வேலுநாச்சியாருக்கு சிவகங்கை சீமையை மீட்டு கொடுத்து அரசியாக அரியணையில் அமரவைத்தவர்.
வீரபாண்டிய கட்டபொம்மனை ஆங்கிலேயர்கள் தூக்கிலிட்ட, பிறகு அவருடைய தம்பியான ஊமைத்துரையை ஆங்கிலேய அதிகாரி பானர்மேன் உத்தரவின் பேரில் திருச்செந்தூரில் சிறைப்படுத்தினர். இதனை கேள்விப்பட்ட விருப்பாச்சி கோபால நாயக்கர் உள்ளிட்டோர், திருச்செந்தூரில் உள்ள முருகப்பெருமானை வழிபடும் பக்தர்களாகச் சென்று, ஊமைத்துரையை மீட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் தங்க வைத்தார். அதுமட்டுமல்லாமல், போர் தளவாட பயிற்சியும், பாதுகாப்பும் வழங்கியதோடு, ஊமைத்துரையை மீண்டும் பாஞ்சாலங்குறிச்சியை கைப்பற்ற உதவினார்.
திப்பு சுல்தான், ஹைதர் அலியின் ஆளுகைக்கு கீழ் இருந்தது திண்டுக்கல். பின்னர், ஆங்கிலேயர்களின் அடக்குமுறைகளால் முகலாய ஆட்சிக்கு முடிவு கட்டிவிட்டு வெள்ளையர்கள் பாளையங்களையும், மக்களையும் ஆட்சி செய்ய ஆரம்பித்தனர். ஆங்கிலேயருக்கு எதிராய் மலபார் கேரளா வர்மா, மருது சகோதரர்கள், மராத்திய அரசர் துண்தாஜிவாக், மாவீரன் ஹாஜிகானுடன் இணைந்து 18 – 19ம் நூற்றாண்டில் கூட்டமைப்பை ஏற்படுத்தி, பரங்கிப் படைகளை பதறச்செய்யும் தாக்குதலை அறிமுகப்படுத்தினார் கோபால் நாயக்கர்.

பகலில் வணிகர்களாகவும், பொதுமக்களாகவும் உலாவி, இரவில் நாலாபுறமும் சூழ்ந்து போர் நடத்தும் கொரில்லா போர் முறையை திருச்சி, சேலம், கோவை, கேரளா பகுதிகளில் தீவிரமாக நடத்தி ஆங்கிலேயப்படைகளை அலறச் செய்தவர் கோபால் நாயக்கர்.
விருப்பாட்சியின் தெற்கத்திச் சீமையில் சுமார் 3000 கிராமங்களின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி வெள்ளையர்களை விரட்டுவதற்குச் சபதம் எடுத்தார்கள். இந்த அறைகூவல் கிராமங்கள் தோறும் பனையோலை மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. அப்படி பனையோலை மூலமாக இச்செய்தியை எடுத்து சென்றதில் தீரன் சின்னமலையும் ஒருவர்.
கி.பி.1799 மார்ச் மாதம் கோபால நாயக்கர் ஆலோசனை படி மணப்பாறை லட்சுமி நாயக்கர், கோபால நாயக்கர் தந்த படைகளோடு ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டு நத்தம், மேலூர், மணப்பாறை ஆகிய பகுதிகளை கைப்பற்றினர்.

16.10.1799 அன்று ஆங்கிலேய அதிகாரிகள் கட்டபொம்மனைத் தூக்கிலிட்டு கொன்ற பிறகு விருப்பாட்சி அரண்மனை வாசலில் ஆங்கிலேயர்களால் எச்சரிக்கை செப்புப் பட்டயம் பொருத்தப்பட்டது. “இனிமேல் யார் புரட்சியில் ஈடுபட்டாலும் கட்டபொம்மனைப் போல் பாளையக்காரர்கள் கொல்லப்படுவார்கள்’’ என்ற செய்தியின் விரிவாக்கம் மேஜர் பானர்மேனால் கோபால் நாயக்கருக்கு அனுப்பட்டது. (இப்போதும் இந்த பட்டயம் இடைக்கோட்டை ஜமீன் மாளிகையில் உள்ளது).
தமுக்குப்பாறை/ குன்று:
கோபால் நாயக்கரின் அரண்மனைக்குப் பின்னால் உள்ள கருமலையில் தான் தீபகற்பக் கூட்டணித் தலைவர்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் ரகசியமாக கூடிப் பல தீர்மானங்களைக் கொண்டு வந்தனராம். அரண்மனையின் பின்புலத்தில் உள்ள கருமலையில் காணப்படும் உயரமான மலைக்குன்று தான் தமுக்கு குன்று. தூரத்தில் எதிரிகள் வருவதைக் கண்காணித்து எதிரிகள் தென்பட்டால் எச்சரிக்கை ஒலியாக தமுக்கு அடிப்பார்கள். இதற்கெனவே சுழற்சி முறையில் ஆட்கள் மலை மேலிருந்து கண்காணிப்பு பணியைச் செய்து வந்தனர். கருமலை அடிவாரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவில் வளாகத்திலும் கோபால் நாயக்கரின் புரட்சிப்படையினர் மறைந்து வாழ்ந்து வந்தனர்.
நாடெங்கும் நடைபெற்ற தாக்குதலுக்கு காரணம் கோபால் நாயக்கர் தான் என்பதை உளவாளிகள் மூலம் அறிந்த திண்டுக்கல் சீமை கலெக்டர் பி.ஹர்டீஸ், அவர் மீது குற்றம் சுமத்தி சம்மன் அனுப்பினார். ஆனால் கோபால் நாயக்கர் பதில் அளிக்கவில்லை. எனவே 1799-ம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாவது சம்மன், அவரை சரணடையுமாறு மிரட்டலாக வந்தது. 72 வயதான போதும் மிரட்டலுக்கு பணியாத கோபால் நாயக்கர் அடுத்த தாக்குதலுக்கு திட்டம் தீட்ட தொடங்கினார்.

29.04.1800 அன்று விருப்பாட்சியில் கோபால் நாயக்கர் தலைமையில் ஆங்கிலேயரை எதிர்த்து இறுதிக்கட்டப் போர் நடத்த, ரகசிய மாநாடு நடைபெற்றது. கேரளவர்மா, மைசூர் கிருஷ்ணப்பா, சின்னமருது, கோவை ஹாஜிகான், கல்யாணித் தேவர், பெருமாள் பிள்ளை உட்பட பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர். 03.06.1800 அன்று கோவையில் உள்ள ஆங்கிலேய ராணுவ முகாமில் உள்ள ஐந்தாம் படையை அழிக்க கோவையின் நாலா பக்கத்திலிருந்தும் ஒரே சமயத்தில் தாக்குவது எனத் தீர்மானித்து 5 குழுவாகப் பிரிக்கப்பட்டார்கள். குழுக்களின் தளபதிகளாக ஓசூர் புட்டா முகமது, இச்சாபட்டி ராமனுல்லாகான், ஓசூர் முகமதுஹாசன், பரமத்தி அப்பாவு, மற்றும் சேசையா ஆகியோர் இருந்தனர்.
03.06.1800 அன்று கோவையைச் சுற்றி நாலாபுறமும் பீரங்கிப் படையைக் கொண்டு எதிர்த் தாக்குதல் நடத்தினர். இதை எதிர்பாராத படையினருக்கு தோல்வியே மிஞ்சியது. பலர் தப்பி ஓடினர். 42 பேர் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். முக்கிய தளபதி முகமதுஹாசன் சேலம் கலெக்டர் மக்லாய்டு என்பவரால் கூண்டில் அடைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டார். எதிரியிடம் கூட்டணி ரகசியங்கள் போய் விடக் கூடாது என்று எண்ணி 08.06.1800 அன்று தன் குரல் வளையைத் தானே அறுத்து தற்கொலை செய்து கொண்டார்.
கோபால் நாயக்கரின் கூட்டமைப்பில் இருந்த துண்டாஜிவாக்கின் கருநாடக மராத்திய புரட்சிப்படையினர் பலர் ஆங்கிலேயப் படையிடம் சிக்கிக் கொண்டனர். அவர்களைப் பீரங்கி வாயில் கட்டி வைக்கப்பட்ட போதும் மன உறுதியுடனே மரணத்தை எதிர் கொண்டனர். கோபால் நாயக்கரின் இளைய மனைவி பாப்பம்மாள் அவர்களின் இளையமகன் பொன்னப்ப நாயக்கர் உட்பட 22 பேரை திண்டுக்கல் சிறையில் அடைத்தனர்.
விருப்பாட்சி போருக்குப் பின் 2 மாதங்களாக எங்கு தேடியும் கோபால் நாயக்கரை ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே அவரது தலைக்கு விலை வைத்தனர். கோபால் நாயக்கரை காட்டி கொடுத்தால் வெகுமதிய் தரப்படும் என அறிவித்தனர். மேலும் அவரின் தளபதிகள் தும்மச்சி நாயக்கர், சோமநாத சேர்வை, சோமன்துரை, பெரியபட்டி நாகமநாயக்கர் ஆகியோரைக் காட்டி கொடுத்தாலும் வெகுமதி தரப்படும் என பறைசாற்றினர். ஆங்கிலேயன் தரும் பணத்திற்கு ஆசைப்பட்ட சில துரோகிகளால் கோபால் நாயக்கர் காட்டிக் கொடுக்கப்பட்டார். 04.05.1801 அன்று அவரைக் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர் வெள்ளையர்கள்.
நினைவு தினம் – சர்ச்சை:-
விருப்பாச்சி கோபால நாயக்கர் இறந்த தேதி சர்ச்சையாக இருந்த காரணத்தினால் அவருடைய ஆறாம் தலைமுறை வாரிசான ஸ்ரீதர் வேலுச்சாமி அவர்களைத் தொடர்பு கொண்டோம். “04.05.1801 அன்று விருப்பாச்சி கோபால் நாயக்கர் கைது செய்யப்படுகிறார். பின் நவம்பர் மாதம் வரை சிறையில் அடைக்கப்பட்டு, நவம்பர் 1-ம் தேதி அவர் மீதான விசாரணையை திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஹர்டிஸ் மற்றும் லெப்டினன்ட் கார்னல் இன்னஸ் உள்ளிட்ட 3 பேர் கொண்ட தலைமையில் நடக்கிறது. 11 நாள் நடந்த விசாரணை தொடர்பாக கலெக்டர் ஹர்டிஸ்-வும், லெப்டினன் கர்னல் இன்னஸ் வும் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு தகவல்களை அனுப்பி இருந்தனர்.
அதன் அடிப்படையில் 14-11-1801அன்று கோபால நாயக்கருக்கு தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுகிறது. 20-11-1801 அன்று அவரின் மூத்தமகன் முத்துவேல் நாயக்கர் ஆகிய இருவரும் விருப்பாச்சி அரண்மனை முன்பு தூக்கிலிடப்பட்டனர் என்பதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளது” என்கிறவர். அவருடைய நினைவு தினம் செப்டம்பர் 5-ம் தேதி கொண்டாடப்படுவது தவறானது என்றும், தமிழ்நாடு அரசு அவருடைய நினைவு நாளை நவம்பர் 20-ம் தேதி என அறிவிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
யானைக்கல்:-
கோபால் நாயக்கரின் அரண்மனை இருந்த விருப்பாச்சி பகுதியில், அவரின் அரண்மனைக்கு அருகில் யானைக்கல் இன்றளவும் இருக்கிறது. விருப்பாச்சி கோபால நாயக்கர் தான் வைத்திருந்த குதிரைகள், யானைகளை கட்டுவதற்காக இந்த கல்லை பயன்படுத்தியதாகவும், ஆங்கிலேயர்கள் விருப்பாச்சி கோபால நாயக்கரின் மறைவிற்குப் பிறகு மேற்கொண்ட தாக்குதலில் இந்த ஒரு கல் மட்டுமே எஞ்சியிருப்பதாகவும் நமக்கு தெரிவித்தார்.

அரண்மனை:-
விருப்பாச்சி கோபால நாயக்கர் தூக்கிலிடப்பட்ட பிறகு அவருடைய அரண்மனையை ஆங்கிலேய அதிகாரி ஹர்டிஸ் தலைமையிலான குழு தகர்த்தெறிந்ததோடு, அவர்களின் குடும்ப உறுப்பினர்களை திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறை வைத்ததாகவும், இன்றளவும் அரண்மனையின் தென்புற மதில் சுவர் மற்றும் இடிக்கப்பட்ட அரண்மனையின் செங்கற்குவியல்கள், பளிங்கு கற்கள், சிப்பிகள் குவியல் குவியலாக இருப்பது அவரின் வரலாற்றை பறைசாற்றுவதாகவும் தெரிவித்தார்.


குலதெய்வம்:-
அரண்மனையின் தெற்கு பகுதியில் விருப்பாச்சி கோபால நாயக்கர் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த கன்னிமார்கள் சிலை இன்றளவும் இருக்கிறது. அவர்களுடைய குலதெய்வமான கன்னிமார் தெய்வங்களுக்கு இன்றளவும் அவருடைய வாரிசுதாரர்கள் வருடத்திற்கு ஒருமுறை வந்து பூஜை செய்கிறார்கள்.

தலையூற்று வரதராஜ பெருமாள் கோவில்:-
இந்த தலையூற்று வரதராஜ பெருமாள் கோவில் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் இன்றளவும் இருக்கிறது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான வெடிமருந்தை தயாரிப்பதற்கும், பாளையக்காரர்கள், அரசர்கள் கூடி கலந்தாலோசிக்கும் இடமாகவும் விளங்கியதாக தெரிவிக்கிறார்கள். அந்த பெருமாள் கோவிலை கோபால நாயக்கரின் முன்னோர்கள் நிறுவியதாகவும் கல்வெட்டு ஆதாரங்கள் கிடைக்கப்பெற்று இருக்கின்றன.

“கோபால் நாயக்கர் மறைவிற்குப் பிறகு வெள்ளையர்களால் சிறைப்படுத்தப்பட்டு திண்டுக்கல் மலைக்கோட்டையில் சிறை வைக்கப்பட்ட 22 குடும்ப உறுப்பினர்களில் இரண்டு பெண்கள் மட்டுமே சிறையில் இருந்து வெளியே வந்தனர். மீதமுள்ள அனைவரும் தொற்று வியாதிகளால் பாதிக்கப்பட்டு சிறையிலேயே மாண்டு போயினர். அப்படி வெளியே வந்த இரண்டு பெண்களின் வாரிசுதாரர்களாக இன்றளவும் நாங்கள் இருக்கிறோம்” என்று தெரிவித்தார் ஆறாம் தலைமுறை வாரிசான ஸ்ரீதர் வேலுச்சாமி.
வெள்ளையருக்கு எதிராய் பல தாக்குதல்கள் நடத்தி, வெள்ளையரை ஓட விட்ட விருப்பாச்சி கோபால் நாயக்கரின் வாழ்வு தாம் தெரிந்துகொள்ள வேண்டிய பெரு வரலாறு என்பதில் மாற்றுக்கருத்தில்லை!
நன்றி
Publisher: www.vikatan.com
