அ.தி.மு.க-வுடனான கூட்டணியை முறித்துக்கொள்வதாக அ.தி.மு.க அறிவித்துவிட்டது. அது மட்டுமல்லாமல், ‘பா.ஜ.க-வுடன் இனி எப்போதும் கூட்டணி இல்லை’ என்று அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசியிருக்கிறார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

இதனால், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் பா.ஜ.க கூட்டணிக்குள் செல்ல வாய்ப்பு இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அ.தி.மு.க-வின் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார். இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். ஆட்சியில் இருந்தவரை எந்தப் பிரச்னையும் இல்லை. 2021 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க தோல்வியடைந்த பிறகு, இருவருக்கும் இடையே மோதல் போக்கு எழுந்தது. அதாவது, சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய இரண்டிலும் தோல்வி ஏற்பட்ட பிறகு கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற பேச்சு எழுந்தது. ஒற்றை தலைமை என்ற குரல் கட்சிக்குள் எழுந்தது.

தன்னுடைய தலைமையில் கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதற்கான வேலைகளை தொடங்கினார். ஆனால், இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என்றார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில், ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் வந்தபோது ஏற்பட்ட களேபரம், நீதிமன்ற வழக்கு, தீர்ப்புகள் என பல கட்டங்களைக் கடந்து, அ.தி.மு.க-வில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியது. அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை தொடர்பான வழக்கில் நீதிமன்றங்களின் தீர்ப்புகளும், தேர்தல் ஆணையத்தின் முடிவுகளும் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக வந்தன. வேறுவழியில்லாமல், ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஒதுங்கிவிட்டார்.
‘இந்தியா’ கூட்டணிக்கு போட்டியாக டெல்லியில் என்.டி.ஏ கூட்டத்தை பா.ஜ.க கூட்டியபோது, எடப்பாடி பழனிசாமிக்குத்தான் அழைப்புவிடுக்கப்பட்டது. ஒரு காலத்தில் ஓ.பன்னீர்செல்வம் பா.ஜ.க-வுக்கு மிக நெருக்கமாக இருந்தார் என்றாலும், என்.டி.ஏ கூட்டத்துக்கு அவர் அழைக்கப்படவில்லை. டெல்லி கூட்டத்தில் பிரதமர் மோடியின் அருகில் இருந்தார் எடப்பாடி பழனிசாமி.

என்.டி.ஏ-வில் பா.ஜ.க-வுக்கு அடுத்தபடியாக பெரிய கட்சி அ.தி.மு.க-தான் என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்தது. ஆனாலும், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே சுமூகமான உறவு இல்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றியும், அ.தி.மு.க பற்றியும் அண்ணாமலை முன்வைத்த விமர்சனங்களுக்கு ஜெயக்குமார் உள்ளிட்ட முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக பதிலடி கொடுத்துவந்தனர். இதன் பின்னணியில் தற்போது, அ.தி.மு.க – பா.ஜ.க இடையிலான உறவு முறிந்துவிட்டது.
ஒரு காலத்தில் பா.ஜ.க-வை விமர்சித்துவந்த அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், பின்னர் தன் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். அ.தி.மு.க-வில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் ஓரங்கட்டப்பட்ட பிறகு, டி.டி.வி.தினகரனுடன் அவர் கைகோத்திருக்கிறார்.
அ.தி.மு.க பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில், ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் டி.டி.வி.தினகரனைச் சந்தித்தனர்.
அந்த சந்திப்புக்குப் பிறகு, ‘அ.தி.மு.க-வை தொண்டர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்துடன் பன்னீர்செல்வமும், தினகரனும் தனித்தனியே செயல்பட்டு வந்தனர். தற்போது இருவரும் சந்தித்துப் பேசி, அ.தி.மு.க-வை மீட்டெடுக்க இணைந்து செயல்படுவது என்று முடிவு செய்துள்ளனர்’ என்று பண்ருட்டி ராமச்சந்திரன் கூறினார்.

‘பண பலத்தை வைத்துக்கொண்டும், ஆணவத்துடன் செயல்படுபவர்களிடம் இருந்து அ.தி.மு.க-வை மீட்க வேண்டும்’ என்றார் தினகரன். மேலும், ‘ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்கள் அ.தி.மு.க-வை வழிநடத்த வேண்டும். அதற்கான முயற்சியில் பன்னீர்செல்வமும், நானும் இணைந்திருக்கிறோம்’ என்றார். தற்போது, பா.ஜ.க கூட்டணில் எடப்பாடி பழனிசாமி இருந்ததால், அந்தக் கூட்டணியில் பன்னீர்செல்வமும் தினகரனும் இணைய அவர் தடையாக இருந்தார். இப்போது தடை விலகிவிட்டது. இருவரும் பா.ஜ.க அணியில் இடம்பெறுவார்கள் என்றும், அதற்கான நடவடிக்கைகள் விரைவில் தொடங்கும் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அவர்கள், “என்.டி.ஏ கூட்டணியில் இருந்து விலகியது குறித்து அதிமுக அறிவித்தாலும், டெல்லி பாஜக தலைமை இன்னும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. தமிழக பாஜக தலைவர்களும், டெல்லி விளக்கம் அளிக்கும், அதன் பின்னர் நாங்கள் பேசுகிறோம் என்கிறார்கள். இதனால் அதிமுக விலகல் குறித்து பாஜகவின் எண்ணம்/ கருத்து என்று எதுவும் வெளியாகவில்லை. பாஜக நிலைபாடு குறித்து தகவல் வந்த பின்னர் டிடிவி, பன்னீர் நடவடிக்கை தொடங்கும்” என்கிறார்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
