`கொலைசெய்யுறது ஒன்னும் புதுசில்லைனு மிரட்டுறாரு' –

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் கணேசன். அ.தி.மு.க-வைச் சேர்ந்தவரான இவர், 3-வது வார்டு மாவட்ட கவுன்சிலராக இருக்கிறார். இந்த நிலையில், ‘ஸ்ரீவில்லிப்புத்தூர் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான‌ மான்ராஜ், எனக்குக் கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதனால், எனது உயிருக்கும், உடைமைக்கும் ஆபத்து ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆகவே, எனக்குக் கொலை மிரட்டல் விடுத்த மான்ராஜ் எம்.எல்.ஏ-மீது வழக்கு பதிவுசெய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் அ.தி.மு.க மாவட்ட கவுன்சிலர் கணேசன் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின்பேரில் நேற்று (டிச.26) போலீஸார் வழக்கு பதிவுசெய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

புகார்

போலீஸில் அளித்த புகார் குறித்து மாவட்ட கவுன்சிலர் கணேசனிடம் பேசினோம். அப்போது அவர், “விருதுநகர் மாவட்ட சேர்மனாகச் செயல்பட்டு வருபவர் வசந்தி. இவர், ஸ்ரீவில்லிப்புத்தூர் அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜின் மனைவி. கடந்த 2 ஆண்டுகளாக, நான் கவுன்சிலராக உள்ள 3-வது வார்டுக்கு எந்தவித வளர்ச்சி நிதியும் சேர்மன் ஒதுக்கித் தரவில்லை. இதனால் மக்கள் குறைகளைத் தீர்க்க முடியாமல் நான் திண்டாடி வருகிறேன். இது குறித்து பலமுறை கோரிக்கை விடுத்தும் எனது வார்டுக்கு மன்றக்கூட்டங்களின்போது நிதி ஒதுக்கப்படவில்லை. இது தொடர்பாக சேர்மனிடம் முறையிட்டதற்கு, அவரின் கணவர் மான்ராஜ் எம்.எல்.ஏ, எனக்குக் கொலை மிரட்டல் விடுக்கிறார்.

மான்ராஜ் எம்.எல்.ஏ

கட்சிக் கூட்டங்களில் கலந்துகொள்ள விடாமலும், கட்சிப் பணிகளில் என்னை வளரவிடாமல் முடக்கும் விதமாகவும் செயல்படுகிறார். இந்தப் பிரச்னை நீண்டகாலமாகவே எங்கள் இருவருக்குள்ளும் இருந்து வருகிறது. கட்சி விஷயம் வெளியே தெரிய வேண்டாம் என்பதற்காக இத்தனை நாளும் அமைதியாக இருந்தேன். இந்த நிலையில் கடந்த 25-ம் தேதி என்னுடைய அண்ணன் செல்வத்தைத் தொடர்பு கொண்டு பேசிய மான்ராஜ் எம்.எல்.ஏ., `மாவட்ட கவுன்சிலர்கள் கூட்டத்தில் வைத்து உன் தம்பியைக் கொன்று விடுவேன்’ என்று கூறியிருக்கிறார். தற்போதுவரை நான், என்னுடைய அண்ணனுக்குச் சொந்தமான வீட்டில்தான் குடியிருந்து வருகிறேன். இதைத் தெரிந்துகொண்டு, ‘உன் தம்பியை வீட்டைவிட்டு வெளியே விரட்டிவிடு, இல்லையேல், உன்னையும் நாலு சாத்து சாத்துவேன்’ என மிரட்டியிருக்கிறார்.

காவல் நிலையம்

மேலும் மான்ராஜ்‌ எம்.எல்.ஏ., என்னிடம் பேசுகையில், ‘எனக்கு கொலை செய்வது ஒன்றும் புதிதல்ல… ஏற்கெனவே ரெண்டு கேரளாக்காரனுங்களைக் கொன்னுருக்கேன். உன்னையும், காரோட வெச்சி எரிச்சிக் கொன்றுவிடுவேன். நான் பதவியில் இருப்பதால் என்னை எதுவும் செய்யமுடியாது. ஆளுங்கட்சி முதல் எதிர்க்கட்சி வரை எனக்கு ஆள் பலம் உள்ளது. ஆகையால், நீ எங்கு சென்று என்ன சொன்னாலும் என்னை எதுவும் செய்யமுடியாது’ என பயங்கர கொலை மிரட்டல் விடுத்தார். இதனால் எனக்கு உயிர்பயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அதன்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்துள்ளனர்” என படபடக்கப் பேசினார்.

மாவட்ட கவுன்சிலர் கணேசனின் அடுக்கடுக்கான புகார்கள் குறித்து மான்ராஜ் எம்.எல்.ஏ-விடம் விளக்கம் பெற அவரை தொடர்பு கொண்டோம். அப்போது அவர், “நான்‌ சிறிது வேலையாக இருக்கிறேன்.‌ கொஞ்ச நேரத்தில் நானே திரும்ப அழைக்கிறேன்” என்றவர், அதன் பின்பு எந்த பதிலும் தரவில்லை. அ.தி.மு.க எம்.எல்.ஏ-மீது, சொந்தக்கட்சியைச் சேர்ந்த மாவட்ட கவுன்சிலரே போலீஸில் புகார் அளித்துள்ள விவகாரம், விருதுநகர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *