விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அடுத்த நவம்மால்மருதூர் கிராமத்தில் பட்டியல் சமூகத்தினர் வசிக்கும் பகுதியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சுமார் 2.5 மீட்டர் அகலம் கொண்ட கழிவுநீர் வாய்க்கால் ஒன்று செல்கிறது. இதன் நடுவே செல்வதாக கூறப்படும் குடிநீர் குழாயில், கழிவுநீர் கலந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நீரை குடித்த சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை… ஒருவரை தொடர்ந்து மற்றொருவர் என சுமார் 20 பேருக்கு வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டிருக்கிறது. எனவே பாதிக்கப்பட்டவர்கள்… கண்டமங்கலம், அரியூர், விழுப்புரம் அரசு மருத்துவமனைகள்; புதுவை ஜிப்மர் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, கண்டமங்கலம் வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவினர் அப்பகுதிக்கு நேரடியாக சென்று அந்த மக்களுக்கு சிகிச்சை அளிக்க தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், விழுப்புரம் அரசு மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தது. நாவமால்மருதூர் கிராமத்தில் கடந்த வாரம் கோயில் திருவிழா ஒன்று நடைபெற்றிருக்கிறது. இந்த திருவிழாவை கண்டுகளிப்பதற்காக கடலூர் மாவட்டம், செல்லாங்குப்பத்தை சேர்ந்த ஷியாமளா(44) என்பவர் நவமால்மருதூர் கிராமத்திலுள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருக்கிறார். கழிவுநீர் கலந்ததாக கூறப்படும் குடிநீரை அவரும் குடித்ததினால், உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டு விழுப்புரம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
