தர்மபுரி அருகே உள்ள வாசாத்தி என்ற மலைகிராமத்தில், கடந்த 1992 ஆம் ஆண்டு சந்தன மரத்தை கடத்தி, விற்பனை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை விசாரிப்பதற்காக காவல்துறையினரும், வனத்துறை அதிகாரிகளும் ஒன்றிணைந்து, அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 18 பெண்களை அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த குற்றச்சாட்டு, பின்னர் வழக்காக பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டது.
பின்னர் இந்த வழக்கை கையில் எடுத்த சிபிஐ, நடத்திய விசாரணையில், வனத்துறை அதிகாரிகள் 4 பேர் உட்பட ஒட்டுமொத்தமாக 215 பேர் குற்றவாளி என அறிக்கை தாக்கல் செய்தது. ஆனால், இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்திலேயே சுமார் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து விட்டனர். அதன் பிறகு இந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் 215 பேரும் குற்றவாளிகள் தான் என்று தீர்ப்பு வழங்கியது.
பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நான்கு வனத்துறை அதிகாரிகள் உட்பட 17 வனத்துறை அதிகாரிகளில், 12 பேருக்கு 10 வருட கால சிறை தண்டனையும், 5 பேருக்கு, 7 வருட கால சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு சம்பந்தப்பட்ட மற்றவர்களுக்கு 3 வருட கால சிறை தண்டனை வழங்கப்பட்டதாக தெரிகிறது.
ஆனால், பாதிக்கப்பட்டோர் மாவட்ட நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்க்கும் விதமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனார். இந்த வழக்கு தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், ஒரு நீதிபதியை அனுப்பி சம்மந்தப்பட்ட கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கில் அனைத்து கட்ட விசாரணையும் முடிவடைந்த நிலையில், தீர்ப்பு மட்டும் வழங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த சூழ்நிலையில் இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்றம், வாச்சாத்தி பாலியல் வன்கொடுமை வழக்கில் தர்மபுரி மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்துள்ளது. அதேபோல, இந்த நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரண உதவியை உடனடியாக வழங்க வேண்டும் என்றும், இதில் 5 லட்சத்தை குற்றம் புரிந்தவர்களிடமிருந்து, வசூலித்து வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தில், யாராவது ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com
