நாடாளுமன்ற அவைக்குள் அத்துமீறி நுழைந்து வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசிய சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த சம்பவம் குறித்து பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்திய எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் இன்னொரு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.

புதிய நாடாளுமன்ற கட்டடம் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கொண்டது என்று சொன்னார்கள். ஆனால், அதையெல்லாம் மீறி பார்வையாளர்கள் மாடத்திலிருந்து எம்.பி-க்கள் இருக்கும் அவைக்குள் தவ்விக்குதித்து வந்து, வண்ணப்புகைக் குப்பிகளை இருவர் வீசியிருக்கிறார்கள் என்றால், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து எதிர்க்கட்சியினர் அரசிடம் கேள்வி கேட்க மாட்டர்களா?
மேலும், அந்த அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டவர்களுக்கு விசிட்டர் பாஸ் வழங்கியவரே ஒரு பா.ஜ.க எம்.பி-தான். பிறகு எப்படி எதிர்க்கட்சியினர் கேள்வி கேட்காமல் இருப்பார்கள்? நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு முழுப்பொறுப்பும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடையது. ஆனால், இந்தச் சம்பவம் குறித்து இன்றுவரை அவர் வாய்திறக்கவில்லை.

எனவேதான், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பில் பெரும் குறைபாடாகக் கருதப்படும் இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்பேற்று அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் டிசம்பர் 14-ம் தேதி அமளியில் ஈடுபட்டனர். அதற்காக, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 14 எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்டு செய்யப்பட்டிருக்கிறார்கள்.
22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றம் தீவிரவாதத் தாக்குதலுக்கு ஆளான அதே டிசம்பர் 13-ம் தேதிதான் இந்தச் சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. நாடாளுமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லை என்ற பிரச்னை வெறும் நாடாளுமன்றத்துடன் மட்டுமே முடிந்துவிடுவதல்ல. இது தேசத்தின் பாதுகாப்புடன் தொடர்புடையது. நாடாளுமன்றத்துக்கே பாதுகாப்பு இல்லையென்றால், தேசத்துக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் என்று எதிர்க்கட்சிகள் கேட்கின்றன.

சம்பவம் நிகழ்ந்ததற்கு மறுநாள் (டிசம்பர் 13) மக்களவைக் கூடியதும், அவையின் மையப்பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி-க்கள், கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். அப்போது பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ‘அவைக்குள் போராட அவசியம் இல்லை. நாம் அனைவரும் நடந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிப்போம்’ என்றார்.
நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு கேள்விக்கு உள்ளாகியிருக்கும்போது, அது குறித்து எந்த விளக்கமும் அளிக்காமல், எந்த விவாதமும் நடத்தாமல், அதை எளிதாகக் கடந்துபோய்விடலாம் என்றும் ஆட்சியாளர்கள் நினைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. அதனால், சபாநாயகரின் சமாதானப் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்காமல், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, ராஷ்டிரிய லோக் தளம் கட்சி எம்.பி-யான ஹனுமன் பெனிவால், சபாநாயகரின் முன்பாக இருக்கும் மேஜை மீது ஏற முயன்றார். அந்த அமளியால் பிற்பகல் 3 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. அமளி தொடர்ந்ததால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலரின் பெயர்களைக் குறிப்பிட்டு, மக்களவை நடவடிக்கைகளுக்கு அவர்கள் இடையூறு ஏற்படுத்தினர் என்றார். தி.மு.க எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டி.என்.பிரதாபன், ஹைபி ஈடன், ரம்யா ஹரிதாஸ், டீன் குரியகோஸ், வி.கே.ஸ்ரீகண்டன், பென்னி பெஹனான், முகமது ஜாவேத், சி.பி.எம் எம்.பி-க்கள் பி.ஆர்.நடராஜன், சு.வெங்கடேசன், சி.பி.ஐ எம்.பி சுப்பராயன் ஆகியோரை சபாநாயகர் சஸ்பெண்ட் செய்தார்.
குளிர்காலக் கூட்டத்தொடர் முழுவதும் இவர்களை சஸ்பெண்ட் செய்யும் தீர்மானங்கள் குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டன. மாநிலங்களவையிலும் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி-யான டெரிக் ஓ ப்ரெய்ன், மாநிலங்களவைத் தலைவரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இவரும் குளிர்காலக் கூட்டத்தொடர் முழுமைக்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.

இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால், அவை நடவடிக்கைகளில் கலந்துகொள்ளாத தி.மு.க எம்.பி-யான எஸ்.ஆர்.பார்த்திபனும் சபாநாயகரால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அந்த விவகாரம் சர்ச்சையானது. அதையடுத்து, எஸ்.ஆர்.பார்த்திபன் மீதான சஸ்பெண்ட் உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. கடந்த காலத்தில் எல்லாம் எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அமளியில் ஈடுபடும்போது, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவை சுமூகமாக நடைபெறுவதை உறுதிசெய்வார்கள். அத்தகைய முயற்சிகள் எதையும் எடுக்காமல், எதிர்க்கட்சி எம்.பி-க்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ம்துரை எம்.பி சு. வெங்கடேசன், “பாஸ் கொடுத்த பாஜக எம்பி அவைக்குள்ளே! பாதுகாப்பின்மைக்கு காரணம் யாரென கேட்ட நாங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு அவைக்கு வெளியே! அவையில் மட்டுமல்ல.. பார்வையாளர் மாடத்திற்கோ, வராந்தாவுக்கோ கூட நாங்கள் செல்லக்கூடாது. ஆனால் பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹா பார்வையாளர்களை இன்றும் அனுப்பிவைத்து அவைக்கு பெருமைசேர்க்கலாம். இது தான் பாஜகவின் பாராளுமன்ற மரபு.” என விமர்சித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
