விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் மாசித்தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மாசிப் பெருவிழாகடந்த 8-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த 9-ம் தேதி மயானக் கொள்ளை, 12-ம் தேதி தீமிதி விழா நடைபெற்றது. விழாவின் 7-ம் நாள் நிகழ்வான தேர்த் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.
முன்னதாக, மூலவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து, தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. மதியம் 2.30 மணியளவில் உற்சவர் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, பலவித மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து, மேள-தாளம் முழங்க அம்மனை கோயில் மண்டபத்திலிருந்து தேருக்கு கொண்டுசென்றனர்.
அம்மன் தேரில் எழுந்தருளிய பின்னர், தேருக்கு சிறப்பு பூஜைகள்நடத்தப்பட்டன. தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
விழாவில், அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், காவல் கண்காணிப்பாளர் தீபக் ஸ்வாட்ச், எம்எல்ஏ சிவக்குமார், ஒன்றியக் குழுத் தலைவர் விஜயகுமார் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்று, பக்தர்களுடன் சேர்ந்து தேர் இழுத்தனர்.
மேலும், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, வேலூர், சேலம், சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்திருந்தனர். அரசுப் போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
