காஞ்சி, செங்கை, திருவள்ளூர் மாவட்டங்களில் மகா சிவராத்திரி விழா: ரிஷப வாகனத்தில் சிவபெருமான் வீதியுலா

காஞ்சி/செங்கை/திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி விழாவில் விடிய, விடிய நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் மலைக் கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி நான்கு கால பூஜைகள் உட்பட சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மேலும்,தாழக்கோயில் எனப்படும் பக்தவச்சலேஸ்வரர் கோயிலில் மலர் அலங்காரத்தில் திரிபுரசுந்தரி அம்பாளுடன், உற்சவர் வேதகிரீஸ்வரர் வீதியுலா நடைபெற்றது.

ருத்திரகோட்டிஸ்வரர், தீர்த்தகிரீஸ்வரர், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், பசுபதிஸ்வரர், திருப்போரூர் செங்கண்மாலீஸ்வரர், திருகச்சூர் மருந்தீஸ்வரர், கூவத்தூர் வாலீஸ்வரர், மாமல்லபுரத்தில் அமைந்துள்ள மல்லிகேஸ்வரர் உள்ளிட்ட சிவாலயங்களிலும் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்றன.

காஞ்சிபுரம் நகரில் உள்ள சிவாலயங்களில் மகா சிவராத்திரி யையொட்டி இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில்,கைலாசநாதர் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, மலர்அலங்காரத்தில் உற்சவர் பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.

திருக்காலிமேடு சத்யநாதஸ்வாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில்

உற்சவர் நந்திவாகனத்தின் மீது எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும், மகா சிவராத் திரியையொட்டி 108 சங்காபி ஷேகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதேபோல், ஏகாம்பநாதர், கச்சபேஸ்வரர், முத்தீஸ்வரர், வழக்கறுத் தீஸ்வர், வான்மீகநாதர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

திருவள்ளூர் மாவட்டத்தில் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், திருப்பாலைவனம் திருபாலீஸ்வரர் கோயில், திருக்கண்டலம் திருக்கள்ளீஸ்வரர் கோயில், கூவம் திரிபுராந்தகேஸ்வரர் கோயில், ஞாயிறு புஷ்பரதீஸ்வரர் கோயில், பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயில், திருப்பாச்சூர் வாசீஸ்வர சுவாமி கோயில், திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோயில், திருமழிசை ஒத்தாண்டேஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1,008 லிட்டர் பால் அபிஷேகம்: மகாசிவராத்திரியையொட்டி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள குரு முத்தீஸ்வரர் கோயிலில் உள்ள 41 அடி உயர ராஜலிங்கத்துக்கு நேற்று கிரேன் மூலம் 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, மூலவருக்கு விடிய விடிய பால், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது.

'+divToPrint.innerHTML+'