திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் நேற்று பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டன. நாளை ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கவுள்ளது.
மகா சிவராத்திரி நெருங்குவதால், ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சிவன் கோயில்களில் பிரம்மோற்சவ விழாக்கள் தொடங்கப்பட்டு வருகின்றன. நேற்று ஸ்ரீசைலம் மல்லிகார்ஜுனா திருக்கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழா வரும் 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. பிரம்மோற்சவ விழாவுக்கு தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் நேற்று நல்லமலை வனப்பகுதி வழியாக நடந்தே வந்து சுவாமியை தரிசித்தனர்.
சமீபத்தில் இக்கோயிலில் கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடந்தேறியது. இதனால் கோயில் புது பொலிவுடன் காட்சியளிக்கிறது. பிரம்மோற்சவ விழாவிவையொட்டி, ஸ்ரீசைலம் கோயில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கிறது.
இதேபோன்று, திருப்பதியில் உள்ள பிரசித்தி பெற்ற சைவ திருத்தலமாக விளங்கும் கபிலேஸ்வரர் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோயிலில் உள்ள கொடி மரத்தில்நந்தி சின்னம் பொறித்த கொடிஏற்றப்பட்டது. பின்னர், காமாட்சிஅம்மன் சமேதராக கபிலேஸ்வரர், விநாயகர், முருகர் ஆகியோர் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
வாயுத்தலமாக விளங்கும் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவ விழா மார்ச் 3-ம் தேதி (நாளை), கண்ணப்பர் கோயில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மறுநாள் 4-ம் தேதி சிவன் கோயிலில் கொடியேற்றம் நடைபெறும். இவ்விழா வரும் 16-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் தினமும் காலை, இரவு ஆகிய இரு வேளைகளிலும் உற்சவ மூர்த்திகள் நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்க உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை காளஹஸ்தி தேவஸ்தானம் சிறப்பாக செய்து வருகிறது.
