பெங்களூரு: நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. கடைசி பந்தில் சிக்ஸர் விளாசி மும்பை அணி வெற்றி பெற்றது.
பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. முன்னதாக, சினிமா பிரபலங்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து போட்டி ஆரம்பித்தது. இதில் டாஸ் வென்ற நடப்பு சாம்பியனான மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் பேட் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் மெக் லேனிங், 25 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். அலைஸ் கேப்ஸி, 53 பந்துகளில் 75 ரன்கள் எடுத்தார். ரோட்ரிக்ஸ், 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார். 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை விரட்டியது.
யஸ்திகா பாட்டியா மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் அரை சதம் கடந்தனர். அமெலியா கெர், 18 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் மும்பை வெற்றிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. விக்கெட், 2, 1, 4, விக்கெட் மற்றும் 6 என 13 ரன்கள் எடுத்து 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் வெற்றி பெற்றது. மும்பை அணிக்காக சாஜனா சிக்ஸர் விளாசி வெற்றி பெற செய்தார்.
