மாசிமக விழா: கும்பகோணத்தில் 5 கோயில்களில் தேரோட்டம் கோலாகலம்

கும்பகோணம்: கும்பகோணத்தில் மாசி மகத்தையொட்டி 5 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது. 24-ம் தேதி 10 சிவன் கோயில்களின் தீர்த்தவாரி, பெருமாள் கோயில்களில் தேரோட்டம் நடைபெறுகிறது.

கும்பகோணத்தில் ஆண்டுகளுக்கு ஒருமுறை மகாமக விழாவும். ஆண்டுதோறும் மாசிமக விழாவும் நடைபெறும். அதன்படி, நிகழாண்டு மாசிமக தொடர்புடைய 5 சிவன் கோயில்களில் கடந்த 15-ம் தேதியும், 3 பெருமாள் கோயில்களில் கடந்த 16-ம் தேதி கொடியேற்றமும், கடந்த 22-ம் தேதி வரை பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. பிரதான விழாவான 5 கோயில்களின் தேரோட்டம் நடைபெற்றது.

காலையில் ஞானாம்பிகையம்மன் உடனாய காளஹஸ்தீவரர் சுவாமியும், மாலையில் சோமசுந்தரி அம்பிகை உடனாய சோமேஸ்வரர் சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, அந்த கோயிலைச் சுற்றியுள்ள தேரோடும் வீதிகளில் தேரோட்டம் நடைபெற்றது.

இதே போல் மாலையில் காசிவிசாலாட்சி அம்மன் உடனாய காசிவிஸ்வநாதர், சோமநாயகி உடனாய சோமேஸ்வரர், சவுந்திரநாயகி உடனாய கவுதமேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பலங்காரத்தில் தேரில் எழுந்தருளி, மகாமககுளத்தைச் சுற்றி தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேர்களை ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து, 24-ம்தேதி காசிவிஸ்வநாதர், சோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், நாகேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், கோடிஸ்வரர், அமிர்தகலசநாதர், பாணபுரீஸ்வரர் ஆகிய 10 சிவன் கோயில் சுவாமிகள் அம்பாளுடன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகளுடன், கோயிலில் இருந்து வீதியுலாவாகப் புறப்பட்டு, மகாமக குளக்கரைக்கு வந்தடைவார்கள்.

பின்னர், காலை 12 மணிக்கு மேல் 1 மணிக்குள், அஸ்ரத்தேவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீர்த்தவாரி நடைபெறுகிறது. இதே போல், சக்கரபாணி சுவாமி, ராஜகோபாலசுவாமி, ஆதிவராகப்பெருமாள் ஆகிய 3 கோயில்களில் தேரோட்டம் காலை 8.50 மணிக்கு மேல் நடைபெறுகிறது.

சாரங்கபாணி சுவாமி கோயில் பின்புறத்தில் உள்ள பொற்றாமரை குளத்தில் ஸ்ரீதேவி-பூதேவி உடனாய சாரங்கபாணி சுவாமி சிறப்பலங்காரத்தில் தெப்பத்தில் எழுந்தருளி தெப்ப உற்சவம் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அந்தந்த கோயில் செயல் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

'+divToPrint.innerHTML+'